📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 08, 2026 01:00 PM

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்: கூட்டணி கட்சிக்கும் இலாகா மாறுகிறது

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்: கூட்டணி கட்சிக்கும் இலாகா மாறுகிறது

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது. கூட்டணி கட்சிக்கும் இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளது.

த.வெ.க. அமைத்த கூட்டணி ஆட்சி

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி, 17-வது சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் மே 4-ந் தேதி எண்ணப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், தேர்தலை முதல் முறையாக சந்தித்த த.வெ.க. வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது.

முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 35 பேர் இடம் பெற்றிருந்தனர். இதில், கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு 2 இடமும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தலா ஒரு இடமும் வழங்கப்பட்டது.

முதல்-அமைச்சரிடம் அறிக்கை அளிப்பு

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்று 4 மாதங்கள் ஆகும் நிலையில், ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறையில் செயல்பட்ட விதம், துறை சார்ந்த அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டங்கள், சொந்த தொகுதியில் மேற்கொண்ட பணிகள், சட்டசபை செயல்பாடு, த.வெ.க.வினரிடம் நடந்து கொண்ட விதம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து முதல்-அமைச்சர் விஜய்யின் ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் அறிக்கை அளித்துள்ளனர்.

அந்த அறிக்கையில், சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை துறை செயலாளர்களை அழைத்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யும் உறுதி செய்துகொண்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்

இந்த நிலையில், சுமார் 1 மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) முடிவடையும் நிலையில், அமைச்சரவை மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், த.வெ.க.வில் ஒரு பெண் அமைச்சர் உள்பட 3 பேர் மாற்றப்பட இருப்பதாக தெரிகிறது.

இதேபோல், கூட்டணி கட்சியை சேர்ந்த 4 அமைச்சர்களில் ஒருவருக்கு இலாகா மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், த.வெ.க. அமைச்சர்களில் ஒருவர், தனக்கு பெரிய துறை வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால், அவருக்கும் இலாகா மாற்றப்படும் என்று தெரிகிறது. அமைச்சரவை மாற்றப்பட உள்ளதால், பல அமைச்சர்கள் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.