📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 30, 2026 10:00 PM

திமுக

திமுக

திமுக - அதிமுகவை வெளுத்துவிட்ட விஜய்... தாராபுரத்தில் அனல் பறந்த பேச்சு!

தாராபுரத்தில் வரும் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், “முதலமைச்சராக இங்கு வரவில்லை; உங்கள் வீட்டு பிள்ளையாகவும், உறவாகவும், மகனாகவும், தாய்மாமனாகவும் வந்துள்ளேன்” என்று கூறினார். மேலும், ஊழல் ஒழிப்பில் தங்கள் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும், அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து திமுக மற்றும் அதிமுகவை விமர்சித்த விஜய், “இன்னும் நாங்கள்தான் முதலமைச்சர், நாம்தான் அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற மனநிலையில் சிலர் உள்ளனர். எனக்கு மன்னராட்சி மனப்பான்மை கிடையாது. திமுகவுடன் அதிமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளது. திமுகவின் பினாமிபோல் சுயநலமாக சுற்றுபவர்கள் நாம் கிடையாது” என்றார்.

மேலும், திமுகவை எதிர்ப்பது தவெக மட்டுமே என்று குறிப்பிட்ட விஜய், “பாஜகவின் கிளையாக இருந்த ஒரு கட்சி தற்போது திமுகவின் கிளையாக மாறிவிட்டது. திமுகவும் அதிமுகவும் ஒன்று. இருவருக்கும் ஒரே ஓனர் தான்” என்று விமர்சித்தார்.

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா குறித்து பேசிய அவர், “யாரை எதிர்த்து எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கினார்? யாரை எதிர்த்து ஜெயலலிதா அரசியல் செய்தார்? அவர்களை அவமானப்படுத்தும் வகையில் திமுகவுடன் அதிமுக சேர்ந்து சதி செய்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து பேசிய விஜய், “எம்.எல்.ஏ.வாக இருந்துகொண்டே சத்தியபாமா தவெகவுக்கு வரவில்லை. தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டுதான் வந்தார். இதில் எந்த பேரமும் கிடையாது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “சர்க்காரியா கமிஷன் பற்றி பேசினால் அதிமுகவுக்கு ஏன் கோபம் வருகிறது? திமுகவுக்கு அதிமுக முட்டுக்கொடுக்கிறது” என்றும் விஜய் விமர்சித்தார்.

கடவுள் நம்பிக்கை குறித்து பேசிய அவர், “கடவுள் நம்பிக்கை எங்களுக்கு உண்டு. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்துமஸ், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்போம்” என்றார்.

கொளத்தூர் தொகுதி குறித்து பேசிய விஜய், திமுக ஆட்சியில் பல தவறுகள் நடந்துள்ளதாகவும், அதனால்தான் கொளத்தூர் மக்கள் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்றும் கூறினார். மேலும், “நீங்கள் பேசப் பேச நாங்கள் உயர்வோம். தரம் தாழ்த்திப் பேசப் பேச தவெக உயர்ந்துகொண்டே இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இறுதியாக, “திமுக, அதிமுகவின் பொய்களை நம்பாதீர்கள். எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்த அதிமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா?” என கேள்வி எழுப்பிய விஜய், தாராபுரம் மக்கள் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.