📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 01, 2026 03:00 PM

தைவான் அருகே சீனக் கப்பல்: எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கிய பிலிப்பீன்ஸ்

தைவான் அருகே சீனக் கப்பல்: எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கிய பிலிப்பீன்ஸ்

மணிலா: தைவான் அருகே உள்ள சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று காணப்பட்டதால் உடனடியாக பெரிய கப்பலையும் விமானத்தையும் அங்கு அனுப்பி வைத்ததாக பிலிப்பீன்ஸ் தெரிவித்துள்ளது.

பிலிப்பீன்சின் இந்த நடவடிக்கை சீனக் கப்பலின் அங்கீகரிக்கப்படாத கடல்சார் அறிவியல் ஆராய்ச்சியை சீர்குலைத்ததுடன், அந்தக் கப்பல் அங்கிருந்து வெளியேறக் கட்டாயப்படுத்தியது என்று பிலிப்பீன்சின் தென்சீனக் கடல் விவகாரங்களுக்கான கடலோரக் காவற்படைப் பேச்சாளர் ஜெய் தாரியேலா தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 28) முதல் இட்பாயாத் தீவிற்கு வடமேற்கே சுமார் 37 கடல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த சீனக் கப்பலுக்கு எதிராக ஒரு விமானமும் 97 மீட்டர் நீளமுள்ள ஒரு கப்பலும் அனுப்பப்பட்டதாக பிலிப்பீன்ஸ் கடலோரக் காவற்படை தெரிவித்துள்ளது.

பதானெஸ் பகுதிக்கு அருகில் இருக்கும்போது தனது இருப்பிடத்தை தவறாகக் காட்டி ஏமாற்றியதாகக் கடலோரக் காவற்படை புகார் தெரிவித்த அதே ‘ஜியா ஹை கே 7’ ஆய்வுக்கப்பல் இதுவாகும். சீனாவின் கொடியை அது தாங்கியிருந்தது.

பிலிப்பீன்சின் பெரிய கப்பல் சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலுக்கு அருகில் சென்று ஒரு விசைப் படகை அனுப்பியது. அந்தப் படகில் இருந்த அதிகாரிகள் ரேடியோ மூலம் எச்சரிக்கை விடுத்தவாறு, சீனாவின் கப்பலை பலமுறை சுற்றி வந்தனர்.

அந்த நடவடிக்கையின்போது பிலிப்பீன்ஸ் படகுகளிடம் இருந்து தப்பிப்பதற்காக ஆராய்ச்சிக் கப்பல் மீண்டும் மீண்டும் நகர்ந்து சென்றதாகக் கடலோரக் காவற்படை கூறியுள்ளது.

பின்னர், ஆராய்ச்சிக் கப்பலுக்குப் பாதுகாப்பாக ஒரு சீனக் கடலோரக் காவற்படை கப்பல் வந்து சேர்ந்தது. அது பிலிப்பீன்ஸ் கப்பலுக்கு ரேடியோ மூலம் தனது சொந்த எச்சரிக்கையை விடுத்தது.

‘ஜியா ஹை கே 7’ தனியாருக்குச் சொந்தமான கப்பல் என்பதால், அதில் சீனக் கடலோரக் காவற்படை தலையிட்டது முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிலிப்பீன்ஸ் கடலோரக் காவற்படை தெரிவித்தது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

மேலும், அது சீன அரசாங்கத்துடனான அதன் தொடர்புகள், பதானெஸ், லூசோன் நீரிணை அருகிலுள்ள கடலடிக் கம்பிவடப் பகுதிகள் பற்றிய தகவல்களைச் சேகரித்ததன் நோக்கம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.