📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 12, 2026 07:04 PM

டெல்லி பற்றி எரிகிறது: தி.மு.க

டெல்லி பற்றி எரிகிறது: தி.மு.க

அக்டோபர் 10 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில், சி.ஜே.பி. கட்சியின் அறைகூவலின் பேரில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி விலகக் கோரியும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை (எஸ்.ஐ.ஆர்.) இரத்து செய்யக் கோரியும், மாணவர்களும் இளைஞர்களும் போராட அணிதிரண்டனர். ஆனால் மோடி அரசு டெல்லி போலீசுதுறையையும் துணை இராணுவப் படைகளையும் களமிறக்கி அவர்களைப் பல முனைகளில் அங்கேயே தடுத்து நிறுத்திட முற்பட்டது.

இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து டெல்லி வந்து சேரும் 245 இரயில்கள் அன்று ரத்து செய்யப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட மெட்ரோ இரயில் நிலையங்கள் மூடப்பட்டன. டெல்லியில் ஜந்தர் மந்தர் செல்லும் சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இணையச் சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டன. போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் தடுத்துக் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டிலும் மாணவர்களும் இளைஞர்களும் இந்த அடக்குமுறையைக் கண்டித்துப் போராடினர். சென்னையில் தலைமைச் செயலகத்தை நோக்கிச் சென்ற அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சி.பி.எம். கட்சி மாவட்டத் தலைநகரங்களில் கண்டனப் போராட்டங்களை அறிவித்தது. கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க ஆ.ராசா உள்ளிட்ட தி.மு.க. தலைவர்கள் தலையிட்டனர்; ஸ்டாலினும் கண்டன அறிக்கை வெளியிட்டு ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றார். ஆனாலும், தனது அணிகளைத் திரட்டி மாநிலம் தழுவிய வகையில் போராட்டத்தை முன்னெடுக்க தி.மு.க. முன்வரவில்லை.

ஆனால், செப்டம்பர் 12 அன்று, ஸ்டாலினின் மிசா சிறைவாசம் உள்ளிட்ட கடந்தகால அரசியல் பயணத்தை விஜய் அவதூறு செய்ததற்காக மாவட்டந்தோறும் தி.மு.க-வால் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிந்தது. முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் என அனைவரையும் களமிறக்க முடிந்தது. தனது தலைவரின் கண்ணியத்தைப் பாதுகாப்பதில் காட்டிய அந்த வேகத்தை மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்பதில் காட்டாதது ஏன்? இதற்கான விடையைத் தி.மு.க-வின் தேர்தல் களத்தில் மட்டும் தேட முடியாது. மக்கள் போராட்டங்களைப் பற்றிய அக்கட்சியின் கண்ணோட்டத்திலும்; அது முன்னிறுத்தும் வர்க்க நலன்களையும் சேர்த்து வைத்துப் பார்க்க வேண்டும்.

மாணவர் போராட்டத்தின் பலனை அறுவடை செய்த கட்சியின் இன்றைய நிலை!

மாணவர்கள் போராடினால் ஓர் ஆட்சியையே மாற்ற முடியும் என்பது தி.மு.க-வுக்குத் தெரியாத வரலாறல்ல. 1965-இல் இந்தித் திணிப்புக்கு எதிராக மாணவர்கள் வகுப்பறைகளிலிருந்து வீதிக்கு வந்தனர். பக்தவச்சலம் தலைமையிலான அன்றைய காங்கிரசு அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு நடந்த அந்த எழுச்சி, தமிழ்நாட்டின் அரசியல் அதிகார உறவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 1967 தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு அப்போராட்டம் முக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

1965 எழுச்சியைத் தி.மு.க. தனியாகக் கட்டியமைத்து உருவாக்கிடவில்லை. மாணவர்கள் பல இடங்களில் தன்னெழுச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்தனர். மாணவர்களின் சுயேச்சையான எதிர்ப்புணர்வும், ஏற்கெனவே தி.மு.க. வளர்த்திருந்த இந்தி எதிர்ப்பு அரசியலும் ஒன்றாகச் சேர்ந்தபோதுதான் அது பெரும் மக்கள் எழுச்சியாக மாறியது. அந்த எழுச்சியின் அரசியல் பலனை அறுவடை செய்துகொண்ட தி.மு.க., இன்று தேர்தல் ஆணையத்தை எதிர்த்து மாணவர்கள் களமிறங்கும்போது அவர்களுடன் சேர்ந்து மக்களை அணிதிரட்டத் தயங்குகிறதே ஏன்?

அன்றைய மாணவர் எழுச்சி காங்கிரசு ஆட்சிக்கு எதிரானதாக இருந்தது; காங்கிரசுக்கு மாற்றாக ஆட்சிப் பொறுப்பேற்க தி.மு.க-வும் தயார்நிலையில் பின்புலத்தில் காத்திருந்தது. ஆனால் இன்றைய மாணவர் எழுச்சி, மோடி அரசின் அடிப்படை இருத்தலையே அசைப்பதாகவும்; எந்தக் கட்சியின் ஆட்சியையும் கேள்விக்கு உட்படுத்துவதாகவும் இருக்கிறது. நாளை, தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் அதன் கொள்கைகளை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் ஆற்றலை வளர்க்கக் கூடியதாக இருக்கிறது. தி.மு.க-வின் அரசியல் தலைமை இந்த வேறுபாட்டை முக்கியத்துவமுடையதாகப் பார்க்கிறது.

தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க. எதிர்ப்பு; தோல்விக்குப் பிறகு விஜய் எதிர்ப்பு!

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. பிரச்சாரத்தின் பிரதான இலக்கு அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியாக இருந்தது. திருவாரூரில் பிரசாரத்தைத் தொடங்கிய ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தலையே தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையிலான போராட்டமாகச் சித்தரித்தார். இன்னும் ஒரு படி மேலே சென்று பாசிசத்துக்கும் ஜனநாயகத்துக்குமான தேர்தல் என்று முழங்கினார். விஜய் தொடர்ச்சியாகத் தி.மு.க-வைத் தாக்கிய போதும் அவருக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்துவிட்டு, அமித்ஷா-எடப்பாடி கூட்டணியையே பிரதான எதிரிகளாக முன்னிறுத்தினார். ஆனால், தி.மு.க. ஆட்சியை இழந்து விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தி.மு.க-வின் அரசியல் தாக்குதல் பெரும்பாலும் த.வெ.க. அரசை மையப்படுத்தியதாக மாறிவிட்டது.

த.வெ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்ப்பதைக் காட்டிலும், தனிப்பட்ட முறையில் த.வெ.க–விஜய்யை எதிர்ப்பைத்தான் உதயநிதியும் தி.மு.க-வினரும் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் த.வெ.க. அரசும் பா.ஜ.க. அரசும் மாணவர்களின் போராட்டத்தைக் போலீசுதுறையைக் கொண்டு ஒடுக்குவதை தி.மு.க. எதிர்க்க வேண்டும் அல்லவா?

சட்டமன்றத் தேர்தலின் போது பெரும் ஆபத்தாக தி.மு.க-வால் முன்னிறுத்தப்பட்ட பா.ஜ.க., டெல்லியில் இருந்துகொண்டு அதானி-அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கான அதே பாசிச கும்பலாட்சியைத்தான் இன்னமும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்ட போதிலும் நீட் தேர்வு அப்படியே தொடர்கிறது; மாநில உரிமைகளைப் பறிக்கும் எல்லா நடவடிக்கைகளும் எந்தத் தடையும் இன்றித் தொடர்கின்றன.

தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்து நாடே போராட்டக் களமாகி டெல்லி குலுங்கிக் கொண்டிருக்கிறது. மோடி-அமித்ஷா கோழை கும்பல் போராட்டக்காரர்கள் மீது போலீசை ஏவி கொடுந்தாக்குதலைத் தொடுத்தாலும், மாணவர்களின் வேகம் அடங்கவில்லை. இனி வேறு என்ன செய்வது என்று புரியாமல் அக்கும்பல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. நிலைமை இப்படி இருக்க, தமிழ்நாட்டில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினைப் பற்றிப் பேசினால் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்; பா.ஜ.க. அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக அறிக்கை போதும் என்கிற வேறுபாடு ஏன்?

2025 நவம்பரில் எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராகத் தி.மு.க. கூட்டணி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களை நடத்தியது உண்மைதான். ஆனால், தேர்தல் நெருங்கியபோது காட்டிய போராட்ட முனைப்பை, தேர்தலில் தோற்ற பிறகு ஏன் தொடரவில்லை என்பதுதான் இப்போதைய கேள்வி. தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் பா.ஜ.க. எதிர்ப்பைத் தனக்கு ஆதரவான வாக்குவங்கியாக மாற்றிக் கொள்வதற்கும், பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வளர்ப்பதற்கும் இடையிலான முரண்பாடுதான் இங்கே கவனிக்கத்தக்கது.

கூட்டணி மாறியதும் பா.ஜ.க. எதிர்ப்பின் எல்லையும் மாறுகிறதா?

தி.மு.க-வுடன் பா.ஜ.க. எதிர்ப்பைப் பேசிய காங்கிரசு, வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் இப்போது த.வெ.க. ஆட்சியில் பங்கேற்றுள்ளன. அதனால் அந்தக் கட்சிகள் அனைத்தும் ஏறக்குறைய பா.ஜ.க. எதிர்ப்பைக் கைகழுவி விட்டன. காங்கிரசு இந்திய அளவில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் போராடும் போது பா.ஜ.க-வை எதிர்த்துத்தான் போராடுகிறது; வி.சி.க-வின் தலைவரும் கூட டெல்லிப் போராட்டத்தில் பங்கேற்றார்.

ஆனாலும், தமிழ்நாட்டில் போராடும் மாணவர்களைக் போலீசுதுறை கைது செய்யும்போது த.வெ.க. அரசில் பங்கெடுக்கும் கட்சிகள் எவ்வாறு செயல்படுகின்றன? எந்தக் கோரிக்கைக்காக மத்திய அரசை எதிர்ப்பதாகக் கூறுகிறார்களோ, அதே கோரிக்கைக்காகப் போராடும் மாணவர்கள் மீதான மாநில அரசின் நடவடிக்கைகளைக் கண்டிக்காமல் கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? இதைக் கண்டித்தால் யாருக்கு நோகும்? விஜய்க்கா, விஜய் கண்டிக்க மறுக்கும் மோடிக்கா?

தி.மு.க-வின் நிலையோ இன்னும் முரண்பாடானது. அது த.வெ.க. அரசில் பங்கேற்கவில்லை; காங்கிரசின் கூட்டணியிலும் இல்லை. அதாவது அதன் பழைய கூட்டாளிகளுக்கு இருக்கும் எந்த ‘அழுத்தமும்’ தி.மு.க-வுக்கு இல்லை. மேலும், தமிழ்நாடு முழுவதும் தனியாகப் போராடுவதற்கான கட்சி அமைப்பும் அதற்கு இருக்கிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் மாணவர்–இளைஞர் போராட்டத்தை ஆதரித்தால் தி.மு.க-வுக்கு என்ன இழப்பு? கடந்தாண்டு தி.மு.க. முன்வைத்த கோரிக்கைக்காக, அதைவிட தீவிரமாகத்தானே இப்போது மாணவர்களும் இளைஞர்களும் போராடுகிறார்கள். ஜல்லிக்கட்டு போல மாபெரும் போராட்டத்தைக் கட்டியமைத்து, ஒரே சமயத்தில் மோடிக்கும் விஜய்க்கும் நெருக்கடி கொடுக்க முடியுமல்லவா? இதெல்லாம் தி.மு.க. தலைமை அறியாததா? பிரச்சினை இதற்கு அப்பால் இருக்கிறது. அது தி.மு.க-வின் வர்க்கச் சார்பு தொடர்புடையது.

படிக்க: ராகுல் காந்தியும் விஜய்யும் ஜனநாயகக் காவலர்களா?

நேற்று ஒடுக்கியவர்கள் இன்று பரிந்து பேசுகிறார்கள்!

தி.மு.க-வின் வர்க்கச் சார்பை அதன் கடந்த ஆட்சிக்காலச் செயல்பாடுகள் பளிச்செனக் காட்டின. 2025 ஆகஸ்டில் சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளைக் கார்ப்பரேட்டிடம் தாரைவார்ப்பதை எதிர்த்துத் தொழிலாளர்கள் ரிப்பன் கட்டடம் முன்பு 13 நாட்கள் போராடினர். பல ஆண்டுகளாகப் பணிபுரியும் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த நிறுவனங்களிடம் தூய்மைப் பணியை ஒப்படைக்கக் கூடாது என்பதே அவர்களது கோரிக்கை. அவர்களுடன் பேசி அந்தக் கொள்கையை மாற்றிக் கொள்ளுவதற்குப் பதிலாக, ஆகஸ்ட் 13 அன்று இரவோடு இரவாக போலீசுதுறையை ஏவிப் போராட்டத்தைக் கலைத்தது தி.மு.க. அரசு.

ஆனால், இப்போது 2026 செப்டம்பரில் த.வெ.க. ஆட்சியில் தூய்மைப் பணியாளர்கள் போராடியபோது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் அவர்களின் கோரிக்கைகளை எழுப்பினார். கடந்த ஆண்டு தொழிலாளர்களைச் சந்தித்த விஜய், இப்போது முதலமைச்சராக இருந்து ஏன் சந்திக்கவில்லை என்று கேள்வி கேட்கிறார். அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியது விஜய் மட்டுமல்ல; தி.மு.க-வும்தான். ஆட்சியில் இருக்கும்போது கார்ப்பரேட் ஒப்பந்த நிறுவனங்களின் நலனை முன்னிறுத்துவது; எதிர்க்கட்சியான போது தொழிலாளர்களின் நலன் என்று பேசுவது. இது என்ன வகையான அரசியல்? மக்கள் அந்தளவுக்கா அறியாமையில் இருக்கிறார்கள்?

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கேட்டபோதும், ஒப்பந்தச் செவிலியர்கள் சம வேலைக்குச் சம ஊதியம் கேட்டபோதும் தி.மு.க. ஆட்சியில் போலீசுதுறைதான் ‘பேச்சுவார்த்தை’ நடத்தியது. அதே செவிலியர்கள் இப்போது 2026 அக்டோபரில் த.வெ.க. அரசுக்கு எதிராகப் போராடுகின்றபோது, முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆதரவு தெரிவிக்கச் செல்கிறார். அவர் ஆதரவு தெரிவிக்கட்டும்; ஆனால் தி.மு.க. ஆட்சியில் இக்கோரிக்கைகள் ஏன் நிறைவேற்றப்படவில்லை என்ற கேள்விக்கும் பதிலளித்தாக வேண்டும் அல்லவா?.

இவை வெறும் சட்டம்–ஒழுங்குப் பிரச்சினைகள் அல்ல. நிரந்தர வேலைவாய்ப்பைச் சுருக்குவது, ஒப்பந்தத் தொழிலாளர்களை மலிவான ஊதியத்தில் சுரண்டுவது, பொதுச் சேவைகளைத் தனியாரிடம் ஒப்படைப்பது என்னும் அரசின் கொள்கைகளுக்கு எதிராகத் தொழிலாளர்கள் போராடினர். இந்த முரண்பாட்டில் தி.மு.க. அரசு எடுத்த நிலைப்பாடு, ஒப்பந்த நிறுவனங்களுக்கும் அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நிர்வாகத்துக்கும் சாதகமாக இருந்தது. தி.மு.க. எந்த வர்க்க நலனுக்காக ஆட்சி செய்தது என்பதை வெளிக்காட்டுபவை இந்த நடவடிக்கைகள்தான்.

இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாத தி.மு.க. அனுதாபிகளோ, அக்காலத்து – அதாவது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டக் காலத்து பழைய தி.மு.க-வாக அக்கட்சி களத்தில் இறங்கி வீரதீரமாகப் போராட வேண்டுமென சமூக வலைதளங்களில் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பழைய காலத்துத் தி.மு.க-வுக்கு அப்போது இழப்பதற்குப் பெரிதாக சொத்துக்கள் இல்லை; மாறாக பெறுவதற்கு ஆட்சிக்கட்டில் இருந்தது. இன்று, நிலைமை தலைகீழாகி விட்டபோது, அதன் வர்க்கத்தன்மையும் வர்க்க நலன்களும் மாறிவிட்ட போது, எப்படி பழைய தி.மு.க-வின் வீரம் மட்டும் இருக்கும்.

நீட், எஸ்.ஐ.ஆர்.: வெறும் தேர்தல் பிரச்சினைகளா?

2021 தேர்தலில் நீட்டை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்த தி.மு.க., அனிதாவின் மரணத்தையும் கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்கொண்ட நெருக்கடியையும் பிரச்சாரத்தில் பயன்படுத்தி வாக்குகளாக மாற்றிக் கொண்டது. ஆட்சிக்கு வந்ததும் நீட் விலக்கு மசோதாவையும் நிறைவேற்றியது; ஆளுநர் திருப்பி அனுப்பியதால் மீண்டும் நிறைவேற்றியது. இறுதியில் 2025 ஏப்ரலில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்தார். நீட்டைத் திணித்தது மத்திய அரசுதான் என்பதிலோ, அவர்கள்தான் இரத்து செய்ய முடியும் என்பதிலோ நமக்குச் சந்தேகமில்லை. ஆனால், தங்களால் முடியாத ஒன்றை வாக்குறுதி கொடுத்தது யார்? தங்களால் முடியாததை போராட்டத்தின் மூலம் மக்கள் சாதித்துக் கொள்ளட்டும் என அனுமதிக்காமல், உதயநிதியை வைத்து வெற்று அரசியல் செய்தது யார்?

இப்போதோ ஆட்சியும் போய்விட்டது. இந்த முறை நீட் தேர்வில் சீர்திருத்தம் கோரியும், மத்திய கல்வியமைச்சர் பதவி விலகக் கோரியும் மாணவர்கள் போராடிய போது, தி.மு.க. ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது? மாணவர்களையும் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் அணிதிரட்டி நீட்டை ரத்து செய்யக் கோரும் தொடர்ச்சியான போராட்டத்தை தி.மு.க. ஏன் வளர்த்தெடுக்கவில்லை? இதுவரை ஸ்டாலினும் உதயநிதியும் இதற்கு பதில் சொல்லவில்லை.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்த நிலையில், எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக 2025 நவம்பரில் தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் போராடின. கொளத்தூர் தொகுதியில் சுமார் 83 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். அங்கு ஸ்டாலின் தோற்றும் போனார். தனது தோல்வியில் சந்தேகம் இருப்பதாக உயர்நீதிமன்றம் சென்று, மறு வாக்கு எண்ணிக்கைக்கு முயற்சி செய்தார். அதாவது எஸ்.ஐ.ஆர். மீதும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதும் தி.மு.க-வுக்கு திருப்தியில்லை என்பதுதான் இதன் சாரம்.

இப்போது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், வாக்குரிமைக்காக மக்களைத் திரட்டும் நடவடிக்கையில் அதே முனைப்பை ஏன் காட்டவில்லை?

அரசியல் கணக்கின் பின்னணி!

தி.மு.க-வின் போராட்டத் தயக்கத்தைத் தலைவர்களின் துணிச்சலின்மை என்று மட்டும் பார்க்க முடியுமா? அதற்கு மேலும் ஒன்று இருக்கிறது. தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டு இருக்கும் விவரங்களின்படி, 2019–2023 காலத்தில் தேர்தல் பத்திரங்களின் மூலம் தி.மு.க. ரூ.656.5 கோடி பெற்றுள்ளது. அதில் ரூ.509 கோடி, சாண்டியாகோ மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் நிறுவனத்திடமிருந்து வந்திருக்கிறது. இது ஏதோ சில பல தொண்டர்கள் செலுத்திய சந்தா பணமல்ல. இது பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற அளவிலான கணக்கு மட்டுமே. எனவே, பெருநிறுவனங்களின் பெருந்தொகை நிதியால் வளர்க்கப்படும் ஒரு கட்சி, அந்த நிறுவனங்களின் நலன்களுக்கு எதிராகத் தொழிலாளர்களை அணிதிரட்டுமா?

தி.மு.க. தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களும் எதிர்கொண்டுள்ள சொத்துக்குவிப்புக் குற்றச்சாட்டுகளையும் மத்திய விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளையும் இதிலிருந்து தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. செந்தில் பாலாஜி, பொன்முடி, நேரு, ஐ.பெரியசாமி என இரண்டாம்நிலைத் தலைவர்கள் பலரும் ஆட்சிக் காலத்திலேயே நெருக்கடிக்கு ஆளாகினர். அவற்றை எல்லாம் பா.ஜ.க-வின் அரசியல் பழிவாங்கல் என்று தி.மு.க. கண்டித்தது.

அத்தகைய அழுத்தத்தை எதிர்கொள்ளும் அதன் தலைமை, வழக்குகள், விசாரணைகள், சொத்து மற்றும் அதிகார நலன்களைக் கணக்கில் கொண்டுதான் அரசியல் முடிவுகள் எடுக்கிறது என்பது இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது அல்லவா? இப்போது பெரிய போராட்டம் நடத்தாததற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் என்று ஏன் கூற முடியாது? ஒருபக்கம் கார்ப்பரேட் சேவை, இன்னொரு பக்கம் முறைகேடான சொத்துக்குவிப்பு. இவ்விரண்டுக்கும் நடுவில்தான் எதிர்கட்சியாகும் போதெல்லாம் போராடும் மக்களுக்கு ஆதரவு நிலை – தனது ஆட்சியில் அடக்குமுறை என்ற நிலையை தி.மு.க. எடுக்கிறது. சொந்த முறையில் தானே போராட்டங்களைக் கட்டியமைக்க மறுத்து வேடிக்கை பார்ப்பதும் இதிலிருந்தே வருகிறது.

மக்கள் போராடிப் பழகிவிட்டால் தி.மு.க-வின் அடுத்த ஆட்சிக்கும் ஆபத்து!

மக்கள் போராட்டங்களில் பங்கேற்பதன் மூலம், கூட்டத்திற்கு வந்து முழக்கமிட்டுச் செல்வது மட்டுமல்ல; தங்களது கோரிக்கைகளை கூட்டாகத் தீர்மானிக்கவும், போலீசுதுறையையும் நிர்வாகத்தையும் எதிர்கொண்டு நிற்கவும், அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரவும், மொத்தத்தில் கட்சிகளை நாடி பிடித்துப் பார்க்கவும் மக்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

இன்று தேர்தல் ஆணையத்தை எதிர்த்து, மாணவர்களை ஆயிரக்கணக்கில் அணிதிரட்டினால், நாளை தி.மு.க. ஆட்சிக்கு வருகின்றபோது அதே மாணவர்கள் நீட்டை ரத்து செய்யவும், அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கவும், தனியார் கல்விக் கட்டணக் கொள்ளையைத் தடுக்கவும் இதே போன்று போராடுவார்கள். இன்று தொழிலாளர்களை போராட்டத்தில் அணிதிரட்டினால் நாளை தூய்மைப் பணி கார்ப்பரேட்மயத்தையும் ஒப்பந்த வேலைமுறையையும் எதிர்க்கத் துணிவார்கள். இன்று விவசாயிகள் போராடிப் பழகினால் நாளை கொள்முதல் விலைக்கும் கடனுக்கும் நீர்ப்பாசனத்துக்கும் ஆட்சியாளர்களிடம் பதில் கேட்பார்கள்.

இதுவே தி.மு.க-வின் அதிகார நலன்களுக்கும் உழைக்கும் மக்களின் நலன்களுக்கும் இடையிலான அடிப்படையான முரண்பாடு. தனது கட்சியின் கொடியின்கீழ் தேர்தலுக்காகத் திரளும் மக்களை அது விரும்புகிறது. ஆனால், அரசின் கொள்கைகளையே கேள்விக்குள்ளாக்கும் சுயேச்சையான மக்கள் இயக்கம் வளர்ந்தால், நாளை அந்த இயக்கம் தனது ஆட்சியையும் எதிர்க்கும்; எனவே, ஒப்பந்த வேலைமுறையையும் தனியார்மயத்தையும் பாதுகாத்துக்கொண்டே, அவற்றுக்கு எதிரான மக்கள் போராட்டத்தையும் வளர்க்க முடியாது என்பது தி.மு.க. தலைமைக்குப் புரிந்தே இருக்கிறது. 1965 மாணவர் எழுச்சியைக் கொண்டு ஆட்சிக்கு வந்த கட்சி, இன்று மாணவர்களும் இளைஞர்களும் மீண்டும் போராடிப் பழகுவதைக் கண்டு எச்சரிக்கையடைந்து தயங்குவதற்கான அரசியல் விளக்கம் இதில் அடங்கியிருக்கிறது.

பா.ஜ.க-வைக் கண்டிக்க அறிக்கை; ஸ்டாலினை விஜய் விமர்சித்தால் மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டம்; தனியார்மயத்தை எதிர்த்துத் தொழிலாளர்கள் போராடினால் போலீசுதுறை அடக்குமுறை – இவை யாவும் தனித்தனி நடவடிக்கைகள் அல்ல. தி.மு.க. எந்தப் போராட்டத்துக்கு முன்வருகிறது, எந்தப் போராட்டத்தை ஒடுக்குகிறது என்பதில் அதன் அதிகார நலன்களும் வர்க்கச் சார்பும் வெளிப்படுகின்றன.

எனவே, தி.மு.க-வுக்குத் தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் தேவை. ஆனால், தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதன் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்க்கும் அளவுக்குப் போராடிப் பழகிய மக்களை அது விரும்புவதில்லை. தி.மு.க-வின் மீதான இந்த விமர்சனத்துக்கான அடிப்படை அதன் ஆட்சிக்கால அனுபவத்திலேயே பொதிந்து கிடக்கிறது. மாணவர்களும் தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்கள் உரிமைகளுக்காகச் சுயேச்சையாக அணிதிரள்வதன் அரசியல் முக்கியத்துவமும் இதில்தான் அடங்கியிருக்கிறது. அத்தகைய போராட்டமே, பா.ஜ.க. ஆட்சியின் அடக்குமுறையையும் த.வெ.க. அரசின் நடவடிக்கைகளையும் மட்டுமல்ல, மீண்டும் ஆட்சிக்கு வர விரும்பும் தி.மு.க-வின் கொள்கைகளையும் கேள்விக்குள்ளாக்கும். மக்கள் நலனை முதன்மைப்படுத்தும் அத்தகைய சுயேச்சையான மக்கள் போராட்டங்களே இன்றைய தேவை.

ஆகவே, மாணவர் – இளைஞர் எழுச்சிகளின் ஊடாக, புரட்சிகர – ஜனநாயக சக்திகளின் தலைமையிலான மக்கள் போராட்டங்களைக் கட்டியெழுப்ப வேண்டும். ஊசலாடும் ஆளும் வர்க்கக் கட்சிகளின் சமரசப் போக்குகளை முறியடிக்க வேண்டும். இப்போராட்டங்களின் ஊடாக பாசிச மோடி கும்பலின் ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads