ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்பை வெளியிட்டது மின்வாரியம்
ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்பை வெளியிட்டது மின்வாரியம்
சென்னை: ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டது. முன்பணம் செலுத்தும் வகையிலான ஸ்மார்ட் மின் மீட்டர்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.
சென்னை உட்பட தமிழ்நாட்டின் மிக முக்கியமான நகரங்களில் முன்பணம் செலுத்தக்கூடிய (Prepaid) ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்காக, மின் பகிர்மான கழகத்தின் சார்பாக டெண்டர் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் விரிவுபடுத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா? அதற்கான அறிவிப்புகள் வருமா என்ற கேள்வி இருந்த நிலையில், மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட விநியோகத்துறை திட்டத்தின் கீழ், சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குப் புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் மற்றும் மின் மீட்டர்கள் பொருத்துவதற்கான ஒப்பந்தப் புள்ளியை மின்வாரியம் கோரியுள்ளது."
இந்தத் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் பயன்படுத்தும் மின்சாரத்தைத் துல்லியமாகக் கணக்கிடவும், மொபைல் ரீசார்ஜ் செய்வது போல முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தவும் மின்சார வாரியம் திட்டமிட்டு வருகிறது. இதற்காக, தனியார் சேவை நிறுவனங்களை நியமிப்பதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை மட்டுமில்லாமல் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் தென் மாவட்டங்களான கோவை, ஈரோடு, கரூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களின் மாநகராட்சிப் பகுதிகளிலும் நவீன ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நுகர்வோருக்கான ஸ்மார்ட் மீட்டர்கள் தவிர, மின் விநியோக மின்மாற்றிகளில் (டிரான்ஸ்பார்மர்களில்) ஏற்படும் மின் இழப்பைத் துல்லியமாகக் கண்காணிப்பதற்கான பிரத்யேக ஸ்மார்ட் மீட்டர்களும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான விவரங்களை இணையதளங்கள் (வெப்சைட்டுகள்) மூலம் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.