ரோடு ஷோவில் திடீர் பரபரப்பு... முதல்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு ரோடு ஷோவில் பங்கேற்க சென்ற முதல்-அமைச்சர் விஜய்யின் வாகனத்தை நோக்கி குளிர்பான பாட்டில் ஒன்று வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல் - அமைச்சர் விஜய் வந்திருந்தார். இதையொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்த பின்னர், அங்கிருந்து ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டார். அவரை வரவேற்பதற்காக சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
முதல்-அமைச்சர் விஜய் சென்ற வாகனம் பொதுமக்கள் திரண்டிருந்த பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்து குளிர்பான பாட்டில் ஒன்று அவரது வாகனத்தை நோக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. பாட்டில் திடீரென பறந்து வந்ததை பார்த்த அவர் ஒரு நொடி அதிர்ந்து போனார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. முதல் - அமைச்சர் பங்கேற்ற ரோடு ஷோவின்போது வாகனத்தை நோக்கி குளிர்பான பாட்டில் வீசப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.