📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 10, 2026 10:00 AM

ராகுல்காந்தி சென்னை விசிட் ! விஜய்யுடன் நேரில் சந்திப்பு ! எகிறும் எதிர்பார்ப்பு !

ராகுல்காந்தி சென்னை விசிட் ! விஜய்யுடன் நேரில் சந்திப்பு ! எகிறும் எதிர்பார்ப்பு !

ராகுல்காந்தி சென்னை விசிட் ! விஜய்யுடன் நேரில் சந்திப்பு ! எகிறும் எதிர்பார்ப்பு !

இன்று ராகுல்காந்தியின் சென்னை வருகை, முதலமைச்சர் விஜய்யுடனான சந்திப்பு, 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி எனப் பல முக்கிய அம்சங்கள் கவனம் பெற்றுள்ள நிலையில், இந்தப் பயணத்தின் பின்னணி என்ன என்பது குறித்த பரபரப்பான கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வருகை தர உள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்யை அவரது நீலாங்கரை இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, சென்னை தீவுத் திடலில் நடைபெற உள்ள ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்று, தமிழ்நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 10 ஆயிரம் மாணவர்களுடன் அவர் கலந்துரையாட உள்ளார்.

‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சி: சென்னையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்

இந்தியக் கல்வித்துறையில் நிலவும் சிக்கல்கள், நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு குறித்த புகார்கள், கல்விக் கட்டண உயர்வு மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் தொடர்பான பிரச்னைகள் குறித்து மாணவர்களின் கருத்துகளைக் கேட்டறியும் நோக்கில், ராகுல்காந்தி ‘மாணவர்களின் குரல்’ என்ற நிகழ்ச்சியை முன்னெடுத்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, மகாராஷ்டிர மாநிலத்தின் புனே, நாசிக் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் மாணவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளையும் எதிர்பார்ப்புகளையும் ராகுல்காந்தி கேட்டறிய உள்ளார்.

சென்னை தீவுத் திடலில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்காகத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளதுடன், நிகழ்ச்சியை நேரடியாகப் பார்க்க முடியாதவர்களுக்காகப் பந்தலுக்கு வெளியேயும் பெரிய திரைகள் நிறுவப்பட்டுள்ளன.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆய்வு செய்த காங்கிரஸ் நிர்வாகிகள்

ராகுல்காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் குலாம் அகமது மிர், இணைப் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா, அமைச்சர்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். மாணவர்களின் வருகை, பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளைக் கருத்தில் கொண்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட 350 முக்கியப் பிரமுகர்களுக்கு அமர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு

அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 ஆயிரம் மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அடையாள அட்டை பெற்ற மாணவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர். மாணவர்களின் கல்வி சார்ந்த பிரச்னைகள், போட்டித் தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான கேள்விகள் இந்தச் சந்திப்பில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் விஜய்யுடன் ராகுல்காந்தி சந்திப்பு

சென்னை வருகையின்போது முதலமைச்சர் விஜய்யை அவரது நீலாங்கரை இல்லத்தில் ராகுல்காந்தி சந்தித்துப் பேச உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு இன்று மதியம் 1.30 மணியளவில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, ராகுல்காந்தி மதியம் 12.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைவார் எனக் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய்யுடனான இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இரு தலைவர்களும் சந்தித்துப் பேசவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்படும் விவகாரங்கள் குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.

காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சந்திப்பு; இரவு டெல்லி பயணம்

மாணவர்களுடனான நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், சென்னை தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களையும் ராகுல்காந்தி சந்திக்க உள்ளார். சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பின்னர், இரவு 9.30 மணியளவில் விமானம் மூலம் அவர் டெல்லி திரும்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த பிரச்னைகளை முன்னிறுத்தும் ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியும், முதலமைச்சர் விஜய்யுடனான நேரடிச் சந்திப்பும் ராகுல்காந்தியின் சென்னை பயணத்தில் முக்கிய அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.