``பழசை மறக்காம, வானத்துல மிதக்காம இருந்தா சினிமா எப்பவும் நம்மளைக் கைவிடாது!”
``பழசை மறக்காம, வானத்துல மிதக்காம இருந்தா சினிமா எப்பவும் நம்மளைக் கைவிடாது!”
- நடிகர் சூரி
காமெடியனாகத் தொடங்கி, ஹீரோவாக உயர்ந்து, இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நம்பிக்கையான இடத்தைப் பிடித்திருக்கிறார் சூரி. இந்த உயரம் அவருக்கு எளிதில் கிடைத்ததல்ல. ஒவ்வொரு படியாகவும், கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் முன்னேறி வந்தவர். அதனால்தான் அவரது வெற்றிக்குத் தனி மதிப்பு இருக்கிறது. சூரியுடன் நடந்த சுவாரஸ்யமான உரையாடல்...
`` ‘மண்டாடி’ நல்ல பெயர் வாங்கியிருக்குறது சந்தோஷம். உடல்ரீதியான சிரமங்களைப் பொறுத்துக்கிட்டு செஞ்ச படம். கடலுக்குள்ள ஷூட்டிங் எளிதானதா இல்லை. கடலை எப்பவும் கணிக்க முடியாது. திடீர்னு ஆவேசம் காட்டும்.
அடர்ந்த தாடி, அதிகப்படியான தலைமுடி, அலைக்கழிக்கிற கடல்னு கிடந்தப்போல்லாம் சூரி காணாமப்போய், டைரக்டர் உருவாக்கிவெச்சிருந்த முத்துக்காளிதான் தெரிஞ்சான். நான் பொதுவா, ஆரம்பத்துல ஸ்கிரிப்ட்டுல சந்தேகங்களையெல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்ட பிறகு, ஷுட்டிங்ல எதுலயும் தலையிடுறது கிடையாது. இதை, நான் நடிக்க ஆரம்பிச்சதுல இருந்து ஒரு கொள்கையாவே வெச்சிருக்கேன். அதனால, டைரக்டர் சொல்றதைச் செஞ்சு முடிக்கிறதுதான் நம்ம வேலைன்னு இருந்தேன்.’’
- `மண்டாடி’ அனுபவங்கள் குறித்து தொடர்ந்து நம்முடன் பேசத் தயாரானார் சூரி.
`` ‘மண்டாடி’க்காக உங்களை எப்படித் தயார்படுத்திக்கொண்டீர்கள்?’’
“நான் எப்பவுமே உடம்பைப் பார்த்துக்கிறதுல கவனமா இருப்பேன். அதுவும் கடல்ல இருக்கும்போது உடம்பு இன்னும் இலகுவாவும், அதேநேரத்துல உறுதியாவும் இருக்கணும். படகை இயக்கும்போது உடம்பு நம்ம கட்டுப்பாட்டுல இருக்குற மாதிரி தயாரா வெச்சுக்கணும். ‘மண்டாடி’க்காக வழக்கத்தைவிட கொஞ்சம் கூடுதலாவே வொர்க்-அவுட் செஞ்சேன். கண்மாய் நீச்சல் எனக்குத் தெரியும். ஆனா, கடல் நீச்சல்ங்கிறது வேற மாதிரி. படப்பிடிப்புக்காக 100 நாள்களுக்கும் மேல கடல்ல கிடந்தோம். நான் நடிச்ச படங்கள்லேயே அதிகபட்ச ரிஸ்க் இருந்த படம் இதுதான். இத்தனை நாள்கள் கடலுக்குள்ள இருந்தும், அதோட தன்மையை என்னால முழுசா புரிஞ்சுக்கவே முடியலை.’’
``இந்தப் படத்தில் உங்கள் நடனம் மிகவும் சிறப்பாக இருந்ததே...’’
``எல்லாரும் பாராட்டினாங்க. அடுத்தடுத்த படங்கள்ல என் நடனத்துல இன்னும் கவனம் செலுத்தணும்னு நெனைக்கிறேன். பல நடிகர்கள் பாராட்டினாங்க. எனக்கு சந்தோஷமா இருந்தது.’’
``ஹீரோ என்ற அந்தஸ்து வந்த பிறகு, பொறுப்பு என்ற சுமை கூடுதலாகத் தோன்றுகிறதா?’’
‘`முன்னாடி காமெடியனா நடிச்சிக்கிட்டு இருந்தப்போ, வேற மாதிரி ஓடிக்கிட்டிருந்தேன். காமெடி கன்டென்ட், அதுக்கான தயாரிப்புகள்னு இருந்தேன். ஆனா, இப்போது ஹீரோவா பயணிக்கிறது முழுக்க வித்தியாசமான அனுபவமா இருக்கு. பல புராஜெக்ட்டுகளில் ஓடிக்கிட்டே இருக்காம, கதை நாயகனா ஒரு புராஜெக்ட்ல நிதானமா செய்யறது சந்தோஷமா இருக்கு. நிறைய படங்கள் செய்யறோமாங்கிறது ஒரு பக்கம் இருக்க, செய்யிற படங்களை எல்லாத் தரப்பு மக்களும் திருப்தியா பார்க்கிற மாதிரி செய்யணும்ங்கிறதுலதான் கவனம் இருக்கு. இன்னும் கொஞ்சம் நிதானம் தேவைப்படுது.’’
``எந்தவிதத்தில் நிதானம் தேவைப்படுகிறது?’’
``முதன்மையா, கதைத் தேர்வு. ஒரு படத்தை கவனத்தோடும் பொறுப்போடும் முடிச்சுக் கொடுத்துட்டு அடுத்த படத்துக்குப் போகணும். இதுல எந்த அவசரமும் இல்லாம வேலை பார்க்கிறேன். ரசிகர்களை ரொம்பவும் மதிக்கிறேன். அவங்க எதிர்பார்க்கறதைக் கொடுக்கணும். என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தினது அவங்க கொடுத்த அங்கீகாரம்தான். சூரிகிட்ட இப்போ அவங்க கொஞ்சம் வித்தியாசமாவும் எதிர்பார்க்கறாங்க. அதைச் சரியா செய்யணும்ங்கிறதுல ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறேன். மத்தபடி, நான் எல்லாருக்கும் அதே சூரிதான். இந்த சினிமாவை இன்னும் நல்லா புரிஞ்சுக்க முயற்சி செஞ்சுக்கிட்டே இருக்கேன்.’’
``வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் நடித்த காலத்திலிருந்தே உங்கள் இமேஜ் முற்றிலும் மாறிவிட்டதே...’’
``வெற்றிமாறன் சார் ஏதோ ஒரு கேரக்டர் தரப்போறார்னுதான் போனேன். `நீங்கதான் கதை நாயகன்’னு சொன்னார். நடிப்புல அவர் எல்லாத்துக்கும் ஒரு அளவு வெச்சிருப்பார். அதைத் தாண்டி போனா பிரேக் போட்டு நிறுத்திடுவார். காமெடியைத் தாண்டி, ஒரு நடிப்பு வகையை என்கிட்ட அவர் கொண்டுவந்தார்.
நல்ல இயக்குநர்கள்கிட்ட வேலை பார்க்கணும்ங்கிறது எப்பவும் என் மனசுல இருக்குற ஆசை. புதுமுக இயக்குநர்கள்கிட்ட வேலை செய்யணும்னு ஆர்வமும் இருக்கு. நாம பழசை மறக்காம, வானத்துல மிதக்காம இருந்தா இந்த சினிமா எப்பவும் நம்மளைக் கைவிடாதுன்னு நம்புறேன்!”