ஃபகத் பாசிலின் அப்பா பாசிலை பாராட்டி தள்ளிய நடிகர்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
சென்னை: ஜென் ஸி தலைமுறக்கு பாசிலை; ஃபகத் பாசிலின் தந்தை என்று சொன்னால் எளிதில் தெரியும். ஆனால் அவர் அதற்குள் மட்டும் அடங்குபவர் இல்லை. இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் அவர். தமிழில் வருஷம் 16, பூவே பூச்சூடவா, காதலுக்கு மரியாதை உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் குறித்து பிரபல நடிகர் சுகுமார் நெகிழ்ச்சியோடு பதிவிட்டிருக்கிறார்.
அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், " சில இயக்குனர்களுடன் பணியாற்றுவது..நடிப்பது மனமகிழ்வாக இருக்கும். நிறைய கற்றுக்கொள்ளலாம்.அப்படி ஒருவர்தான் நீங்கள் படிக்க இருப்பது.வருஷம் 16,கிளிப்பேச்சுக் கேட்க வா,தளபதியின் காதலுக்கு மரியாதை போன்ற படங்களின் இயக்குனர் பாசில் சார். அவருடைய "ஒருநாள் ஒரு கனவு" படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
பின் டிராப் சைலென்ட்: அதில் கதாநாயகராக சிறீகாந்த் நடித்தார்.நடிகர் சத்யன்,இளவரசன் சார்,சிசர் மனோகர் அண்ணா போன்றோருடன் கூட்டணி.பாசில் சாருடைய சிகரட் பிடிக்கும் ஸ்டைலை செய்து காட்டவில்லை எனில் அவரை ஒரு மிமிக்ரி கலைஞராக கேரளத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவ்வளவு பிரபலம் அவர் சிகரெட் பிடிக்கும் ஸ்டைல். வழக்கமான படப்பிடிப்புத் தளமாக இருக்காது அவருடைய சூட்டிங் ஸ்பாட் பின் டிராப் சைலன்ட் என்பார்களே அப்படி இருக்கும்.
ஷூட்டிங் நடக்கும்: ஆனால் ஷூட்டிங் நடந்தவண்ணம்தான் இருக்கும். எங்களுக்கு திடீரென சூட்டிங் நடக்குதா இல்லையா என சந்தேகம் வரும்.அவ்வப்போது எட்டிப் பார்த்து உறுதி செய்து கொள்வோம்.அவர் "ஆக்ஸன்" சொல்லும்போது அவர் வாயை கவனித்தால்தான் தெரியும்.அவ்வளவு மெதுவாக சொல்வார்.ஒளிப்பதிவாளர் அனந்தக் குட்டனுக்கும் பாசில் சாருக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி அவருடைய எல்லாப் படங்களிலும் அவர்தான் கேமராமேனாக இருப்பார்.
ஷாலினியின் வீடு: சிரிக்காமல் படு சீரியஸாக கமென்ட் அடிப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். இசைஞானிக்கும் பாசில் சாருக்கும் அப்படி ஒரு காதல்.அவருக்கென்றால் மட்டும் ஸ்பெஷலாக ட்யூன் போடுவார் என நினைக்கிறேன். இளையராஜா சார் எந்த சூட்டிங் ஸ்பாட்டுக்கும் போனதில்லையாம் ஆனால் அந்த மேஜிக் நான் பாசில் சார் படத்தில் நடிக்கும்போது நடந்தது. அவர் கேரளா ஆழப்புழாவில் பாசில் சார் வீட்டில் படப்பிடிப்பு நடந்த போது( காதலுக்கு மரியாதையில் ஷாலினியின் வீடு அதுதான்)
கூடுதலாக பத்து நாட்கள்: சென்னையில் இருந்து படத்தளத்திற்கு வந்து எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். எனக்கு மூன்று நாட்கள்தான் அந்தப் படத்தில் டேட். ஆனால் அதை நீட்டித்து கூடுதலாக பத்து நாட்கள் நடிக்க வைத்தார். அப்போது சந்திரமுகி படம் அங்கே வெளியாகியிருந்தது.. அவரின் "மணிச்சித்ரதாழ்" படத்தின் காப்பி என்று பேசிக்கொண்டிருந்தார்கள். நான் பாசில் சாரிடம் கேட்டேன்..
அவர் சொன்னது: அவர் சிரித்துக்கொண்டே "ஒரு நேஷனல் அவார்ட் கிட்டிய ஒரு படத்தை காமடியாயிட்டு எடுக்க P. வாசுவாலதான் முடியும் என்று புன்னகைத்தார்.சூட்டிங் முடிந்து வரும்போது பிரிய மனமில்லாமல் அவரிடம் போய் நின்றேன்.என்னைப் பார்த்தவர் வருஷம் 16 படத்தில் நடந்த ஒரு சம்பவத்தை கண்முன்னே நடந்ததைப்போலக் கூறினார்.
45 நாட்கள் ஷூட்டிங் முடித்துக் கிளம்பும்போது கார்த்திக் சார் அவரிடம் சென்று குரல் தழுதழுக்க.. சார்... "நான்... நான் ..எனக்கு..நான் வரேன்..சார்"என்று கண்கலங்கிச் செல்ல .. பாசில் சார் மேனேஜரைக் கூப்பிட்டு "எந்தா ஆயாளுக்கு பேமென்ட் ஏதும் பேலன்ஸோ?.. "இல்ல சாரே எல்லாம் செட்டில் செய்து"..
"அங்கன அல்லே..பின்னே எந்தா கரையுன்னது?".. "சாரே கொறைய நாளு இவ்விட இருந்ததல்லே.. பிரிய மனசில்லா..அதானு" "ஓ.. ஃபீலிங்கோ" என்று சிரித்தாராம். எனக்கு சிரிப்பை அடக்க முடியாமல் சார் நான் போய்ட்டு வரேன் என்றேன்.நடிகர் பஹத் பாசில் இவருடைய புதல்வர்" என குறிப்பிட்டிருக்கிறார்.