பிரதமர் நிகழ்ச்சியில் மேடையில் அமர்ந்த விவகாரம்: ‘நாட்டுக்குத் தேவையான பிரச்சினையா?’
சென்னை: பிரதமர் நிகழ்ச்சியில் நான் மேடையில் அமர்ந்தது நாட்டுக்கு தேவையான பிரச்சினையா, மின்வெட்டை சரிசெய்யாமல் இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசிக் கொண்டிருக்க வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் அவர் தலைமையில் மையக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வானதி சீனிவாசன், தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மையக்குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கட்சியின் எதிர்கால வளர்ச்சி, எதிர் வரும் இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ளுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் நிகழ்ச்சியில் மேடையில் நான் அமர்ந்தது குறித்து நான் கருத்துக் கூற முடியாது.
நான் மேடையில் அமர்ந்ததுதான் இப்போது நாட்டுக்கு தேவையான பிரச்சினையா. மின்வெட்டை சரிசெய்யாமல் இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.
பிரதமரும் முதல்வரும் கைகோத்து மெட்ரோ திட்டத்தை தொடங்கி வைத்ததே மத்திய, மாநில அரசு இணக்கமாக இருப்பதற்கு சாட்சி. தவெக தேர்தல் அறிக்கையில் கூறிய எதையும் செய்யவில்லை, டாஸ்மாக் கடை களை மூடுவதுகுறித்த தெளிவான விளக்கங்கள் இல்லை.
சட்டம் ஒழுங்கு சரியில்லை, பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. நான் முதல்வருக்கு சால்வை அணிவித்த நிகழ்வை கொச்சைப்படுத்த வேண்டாம்.
செவிலியர் போராட்டத்தை எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆதரித்த தவெக இப்போது அவர்களை அடித்து இழுத்து சென்று கைது செய்கிறது. தமிழகம் முழுவதுமே மின்வெட்டில் மூழ்கப் போகிறது.
முதல்வர், அமைச்சர் அதில் தனி கவனம் செலுத்த வேண்டும். கரப்பான்பூச்சிகள் தேசத்தை துண்டாட நினைக்கின்ற தீய சக்திகள். இவ்வாறு அவர் கூறினார்.