📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 01, 2026 05:01 PM

பெரிய ஹீரோவும், இயக்குநரும் என் சட்டையை கழற்றினார்கள்.. சூரி பகிர்ந்த வேதனை

பெரிய ஹீரோவும், இயக்குநரும் என் சட்டையை கழற்றினார்கள்.. சூரி பகிர்ந்த வேதனை

சென்னை: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்த சூரி இப்போது ஹீரோவாக ஜொலித்துவருகிறார். கடந்த வருடத்தில் அவர் நடித்த மாமன் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக மண்டாடி என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் செப்டம்பர் பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கும் சூழலில்; அவரது பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

கோலிவுட்டில் விவேக், வடிவேலு, சந்தானத்துக்கு பிறகு காமெடியில் ஜொலித்த சூரிக்கு கதையின் நாயகனாக விடுதலை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் முதல் படமே வெற்றிமாறனின் இயக்கமாகும். தனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சூப்பராக நடித்திருந்தார். படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அப்போதிருந்து காமெடி ரோல்களை மூட்டை கட்டிவிட்டு கதையின் நாயகனாக தொடர்ந்துவருகிறார்.

மாமன் சந்தித்த விமர்சனங்கள்: அப்படி அவர் நடித்த கொட்டுக்காளி, கருடன் படங்கள் எல்லாம் அவருக்கு நல்ல ரெஸ்பான்ஸையே கொடுத்தன. அவர் நடித்த மாமன் படத்தின் கதைக்களம் கடுமையான விமர்சனத்தையும், ஸ்வாசிகாவின் ரோல் பெரிய நெகட்டிவிட்டியையும் சம்பாதித்தது. அந்தப் படத்துடைய கதையை சூரிதான் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மண்டாடி சூரி: மாமன் படத்துக்கு பிறகு மண்டாடி படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்துக்காக மிகப்பெரிய உழைப்பை சூரி கொட்டியிருப்பதாகவும்; தன்னுடைய கரியரில் மிகப்பெரிய ஹிட்டை இப்படம் தனக்கு கொடுக்கும் என்ற நம்பிக்கையிலும் அவர் இருப்பதாக தெரிகிறது. படமானது செப்டம்பர் பத்தாம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. வெளியான முதல் சிங்கிளில் அவரது நடனமும் அருமையாக இருந்தது.

சூரி பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "என்னை ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்கு அழைத்திருந்தார்கள். பெரிய காமெடியன் ஒருவரும் அதில் நடித்தார். அவருடன் எனக்கு காம்பினேஷன் காட்சிகள் எல்லாம் இருந்தன. நானும் நடித்தேன். ஷூட் முடிந்த பிறகு மானிட்டரில் காட்சிகளை பார்த்தார்கள். அந்தப் பெரிய ஹீரோவும், இயக்குநரும் ஏதோ அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

சட்டையை கழற்றினார்கள்: பிறகு நான் போட்டிருந்த சட்டையை கழற்ற சொல்லி அந்த சட்டையை வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டார்கள். அந்த நபர் சிபாரிசின் மூலம் சினிமாவுக்குள் வந்தவர். அது என்னுடைய சொந்த சட்டை வேறு. ஆனால் அதை தூக்கி காஸ்ட்யூம் வண்டியில் போட்டுவிட்டார்கள். உடலில் வெறும் டவல் மட்டும் கட்டிக்கொண்டு எனது சட்டையை தேடி அலைந்தேன். அந்த சம்பவம் என்னை மிகவும் காயப்படுத்தியது" என்றார்.