PAK vs SL: "கொஞ்சமாவது அறிவிருக்கா?".. ஷனகா அவுட்டானதும் தலையில் குத்திக்கொண்ட கேரி கிர்ஸ்டன்
PAK vs SL: "கொஞ்சமாவது அறிவிருக்கா?".. ஷனகா அவுட்டானதும் தலையில் குத்திக்கொண்ட கேரி கிர்ஸ்டன்
ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் தசுன் ஷனகா மிக அலட்சியமாக விக்கெட்டைப் பறிகொடுத்ததால், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கோபத்தின் உச்சிக்கே சென்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இலங்கை அணி வெற்றியை நெருங்கிய தருணத்தில், ஷனகா மோசமான ஷாட்டை அடித்து அவுட் ஆனதைக் கண்டு டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த கிர்ஸ்டன் தனது தலையில் விரலால் குத்தி சைகை செய்து கொந்தளித்தார்.
ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 305 ரன்கள் குவித்தது. சல்மான் அலி ஆகா 90 பந்துகளில் 107 ரன்கள் விளாசினார். தொடர்ந்து 306 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணிக்கு பவன் ரதநாயகே 79 ரன்களும், ஜனித் லியனகே 60 ரன்களும் குவித்து 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்காக போராடினர். கடைசி 48 பந்துகளில் இலங்கை வெற்றிக்கு 58 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கைவசம் 5 விக்கெட்டுகளும் இருந்தன. அப்போது களத்தில் இருந்த தசுன் ஷனகா 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அதிரடி காட்டிக் கொண்டிருந்தார்.
வெற்றியை உறுதி செய்ய வேண்டிய அந்த இக்கட்டான நேரத்தில், ஷாஹீன் அப்ரிடி வீசிய பந்தை தேவையின்றி காற்றில் தூக்கி அடித்தார் ஷனகா. பந்து நேராக லாங்-ஆனில் நின்ற பாபர் அசாமிடம் கேட்ச்சாக மாறியது. ஒரு சீனியர் வீரர் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்ததைப் பார்த்த பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனுக்கு பயங்கர கோபம் வந்தது. அவர் தனது இரண்டு கைகளாலும் தலையைச் சுட்டிக்காட்டி, "கொஞ்சமாவது யோசித்து விளையாட வேண்டாமா?" என்பது போல் ஆக்ரோஷமாக சைகை செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
ஷனகாவின் விக்கெட்டுக்குப் பிறகு இலங்கை அணியின் பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து சரணடைந்தனர். இறுதியில் இலங்கை அணி 48.1 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கையில் இருந்த வெற்றியை அஜாக்கிரதையால் பறிகொடுத்த இலங்கை பேட்டர்களை பயிற்சியாளர் கிர்ஸ்டன் கடுகடுத்தது நியாயம்தான் என கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.