📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 18, 2026 04:31 PM

பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் சிறுமியைக் கொலை செய்த கும்பல்

பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் சிறுமியைக் கொலை செய்த கும்பல்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நடந்த பாலியல் கொடுமைக்குப் பின்னர் 17 வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமேற்கு டெல்லியின் குஷக் சாலையிலுள்ள ஸ்வரூப் நகர் வட்டாரத்தில் திறந்தவெளியில் சிறுமியின் சிதைந்த சடலத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) மீட்டதாகக் காவல்துறையினர் கூறினர்.

சடலம் மீட்கப்பட்டதற்கு முந்தைய தினம் பாலியல் வன்கொடுமையும் கொலையும் நிகழ்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

கொலையுண்ட சிறுமியும் குற்றவாளிகளும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் டெம்போ வாகனத்தில் ஒன்றாகப் பயணம் செய்துகொண்டிருந்தபோது குற்றச் செயல் நிகழ்ந்ததாகவும் காவல்துறை கூறியது.

பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் சிறுமியின் உடலில் பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் அப்போது குற்றவாளிகள் நால்வரும் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

உடலின் சில பாகங்களைத் தெருநாய்கள் கடித்துக் குதறியதாகவும் உடலிலிருந்து ஒரு கை மட்டும் தனியாகக் கிடந்ததாகவும் காவல்துறை மேலும் தெரிவித்தது.

சிறுமி காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் அளிக்கவில்லை. அவர் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியேறி சில நாள்களுக்குப் பிறகு மீண்டும் வீடுதிரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக சிறுமியின் குடும்பத்தினர் தங்களிடம் கூறியதாகக் காவல்துறை கூறியது.

சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் இல்லாததாலும் குற்றவாளிகளின் அடையாளம் உடனடியாகத் தெரியாததாலும் சம்பவம் நிகழ்ந்த பகுதியைச் சுற்றிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் காவல்துறைக் குழுக்கள் ஆய்வு செய்தன.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

ஆய்வின்போது, ​​சம்பவம் நிகழ்ந்தபோது அப்பகுதிக்கு அருகில் ஒரு டெம்போ வாகனம் செல்வது கவனிக்கப்பட்டது. இருள் காரணமாக அதன் பதிவு எண் தெளிவாகத் தெரியாததால், புலனாய்வாளர்கள் பல்வேறு சிசிடிவி இடங்களில் வாகனம் செல்வதைக் கண்காணித்தனர்.

செவ்வாய், புதன் கிழமைகளில் (செப்டம்பர் 15, 16) இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, சந்தேகத்திற்குரிய டெம்போ கண்டுபிடிக்கப்பட்டது. அதன் ஓட்டுநர் அடையாளம் காணப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் குற்றச்செயலுடன் தொடர்புடைய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவரின் வயது மட்டும் 19, மற்ற மூவரும் 16, 17 வயதுடைய சிறார்கள். சம்பவம் நிகழ்ந்த 72 மணி நேரத்தில் குற்றவாளிகள் பிடிபட்டனர்.

குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கத்திகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அணிந்திருந்ததாகக் கூறப்படும் ஆடைகள், டெம்போ வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் சிறுமியை எதற்காகக் கொலை செய்தார்கள் என்ற விவரத்தை அறிய, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.