பாகிஸ்தான் அமைச்சரிடம் ஆசிய கோப்பையை வாங்க மறுத்து இந்திய மகளிர் அணி புறக்கணிப்பு.. என்ன நடந்தது?
பாகிஸ்தான் அமைச்சரிடம் ஆசிய கோப்பையை வாங்க மறுத்து இந்திய மகளிர் அணி புறக்கணிப்பு.. என்ன நடந்தது?
துபாய்: 2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் வாரியத் தலைவருமான மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற மறுத்து பரிசளிப்பு விழாவைப் புறக்கணித்துள்ளது. துபாயில் நேற்று நடைபெற்ற இந்த சம்பவம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும் வழக்கமாக 15 நிமிடங்களில் பரிசளிப்பு விழா தொடங்கும். ஆனால், இந்திய வீராங்கனைகள் மேடைக்கு வர மறுத்ததால் விழா 1 மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமானது.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சராகவும் இருக்கும் மோசின் நக்வி, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து பேசி வந்ததன் காரணமாக அவரிடமிருந்து கோப்பையைப் பெற இந்திய அணி திட்டவட்டமாக மறுத்துவிட்டது. மேடையில் நின்ற நக்வி, இலங்கை கேப்டன் சமாரி அதபத்துவுக்கு இரண்டாம் இடத்திற்கான காசோலையை வழங்கினார். ஆனால் இந்திய வீராங்கனைகள் மேடைப் பக்கமே வராததால், ஆசிய கோப்பையைத் தனது துபாய் அலுவலகத்திற்கே அவர் திருப்பி எடுத்துச் சென்றார்.
கடந்த 2025-ல் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய ஆண்கள் அணியும் இதேபோன்று மோசின் நக்வியிடம் கோப்பையை வாங்க மறுத்தது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் அதிகாரிகளைப் புறக்கணித்து வரும் இந்திய கிரிக்கெட் வாரியம், தற்போது அதே பாணியில் மகளிர் அணி மூலமாகவும் பாகிஸ்தான் அதிகாரிக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
மேடைக்குச் செல்லாத இந்திய வீராங்கனைகள், மைதானத்தின் ஓரத்தில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோருடன் இணைந்து ஓய்வறையிலேயே தங்களது பதக்கங்களைப் பகிர்ந்து வெற்றிக் கொண்டாட்டத்தை உற்சாகமாகக் கொண்டாடினர்.