நல்லாசிரியர் விருது 2026
சிங்கப்பூரில் இவ்வாண்டின் நல்லாசிரியர் விருது 2026 விழாவில் இவ்வாண்டுக்கான தேசியக் கல்விக் கழகத்தின் சிறந்த பயிற்சி ஆசிரியர் விருதினை 23 வயது நந்தினி சிவக்குமார் வென்றுள்ளார்.
ஆசிரியர் என்பவர் ஒரு பாடத்தை மட்டும் கற்பிப்பவர் அல்லர். மாறாக ஒவ்வொரு மாணவரின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் செதுக்குபவர் என்பதைத் தமது தலையாய கொள்கையாகக் கொண்டு இவர் செயல்படுகிறார். ஒவ்வொரு குழந்தையாலும் கற்க இயலும் என்ற நம்பிக்கையை மாணவர்களிடம் விதைப்பதோடு, தமிழ் மொழியில் பொதிந்துள்ள செழுமையான பண்பாட்டையும் நற்பண்புகளையும் கற்பிப்பதே தமது கடமையாக இவர் கருதுகிறார்.
இளமைத் துடிப்போடு விளங்கும் நந்தினி சிவக்குமார், 2023ஆம் ஆண்டு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இளையர் பிரிவில் முதற்பரிசு வென்றவர். 2025ஆம் ஆண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் 'கவிப்பெருக்கு' அங்கத்திலும் பங்கேற்று, தமது இலக்கிய ஆர்வத்தை மேடையில் வெளிப்படுத்தியுள்ளார்.