நீர்நிலைகளில் மண் சுரண்டலை அனுமதிக்கக்கூடாது: வேல்முருகன்
சென்னை: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏரிகளில் இருந்து அனுமதிக்கும் அளவை மீறி மண் எடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
மேலும், மண் எடுப்போர்மீது புகார் அளிப்பவர்களின் தொலைபேசி எண், குரல் பதிவு உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை அதிகாரிகள் மண் எடுப்பவர்களிடமே வழங்குகின்றனர் என்றும் இதனால் புகார் அளிப்பவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஏரிகளில் மண் எடுக்க அரசு அனுமதி அளித்திருப்பதற்குத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களின் நீராதாரத்தைக் காக்க வேண்டிய அரசு, இயற்கை வளங்களைச் சுரண்டும் செயல்களுக்குத் துணை நிற்கக் கூடாது என்று தமது ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார். விவசாயத்தின் ஆதாரமாகத் திகழும் பொன்பத்தி, சிங்கவரம், மேலச்சேரி, துறிஞ்சபூண்டி உள்ளிட்ட ஏரிகளில் வண்டல் மற்றும் கிராவல் மண் எடுக்கப்படுவதால் அவற்றின் இயற்கை அமைப்பு பெருமளவில் சிதைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயத் தேவைக்காகவும் ஏரியின் கொள்ளளவை உயர்த்தவும் வழங்கப்பட்ட அனுமதி, இப்போது கட்டுப்பாடற்ற வணிக நோக்கிலான வளச்சுரண்டலாக மாறியுள்ளதாகத் திரு. வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
தூர்வாரும் பணிகள் நீர்நிலைகளின் இயற்கையான தரைப்பரப்பையே மாற்றும் அளவுக்குச் சென்றிருப்பது மிகுந்த கவலைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏரிகள் அவற்றின் தனித்தன்மையை இழப்பதால், ஏரிக்கரையோர விவசாயக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.
அரசுத் துறைகளின் தொடர் கண்காணிப்பு இருந்தும் விதிமீறல்கள் தடையின்றி நடப்பது குறித்தும் விவசாயிகளின் ஆதங்கத்தை நிர்வாகம் உடனடியாகக் கவனத்தில் கொள்ளாதது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
எனவே, செஞ்சி வட்டாரத்தில் மண் அகழ்வுப் பணிகள் நடைபெற்ற அனைத்து நீர்நிலைகளிலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விதிமுறைகளை மீறி அதிகளவில் மண் அள்ளியவர்கள் மீதும் அதற்குத் துணைபோன அதிகாரிகள் மீதும் பாரபட்சமின்றி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திரு. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். மேலும், இயற்கை அமைப்பு சிதைக்கப்பட்ட ஏரிப் பகுதிகளை உடனடியாக அறிவியல் முறையில் சீரமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற அனுமதிகளை வழங்கும்போது கடுமையான அளவுகோல்களையும் பொதுமக்கள் கண்காணிக்கும் வகையிலான வெளிப்படையான நடைமுறைகளையும் தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் என்றும் தமது பதிவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.