📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 16, 2026 02:03 PM

'முதல்வர் விஜய்-ன் ஆந்திர பயணத்தில் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை?'

'முதல்வர் விஜய்-ன் ஆந்திர பயணத்தில் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை?'

'முதல்வர் விஜய்-ன் ஆந்திர பயணத்தில் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை?'- துரைமுருகன் கேள்வி

"முதலமைச்சர் விஜய்யின் ஆந்திரா பயணத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை!"- துரைமுருகன்

முதலமைச்சர் விஜய்யின் ஆந்திரா பயணத்தில் ஆலோசகர் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் திமுக கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் .

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " முதலமைச்சர் விஜய்யின் ஆந்திரா பயணத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை! நீர்வளத்துறை செயலாளர் எங்கே? ஆலோசகர் விஷ்ணு ரெட்டிக்கு அங்கே என்ன வேலை?

கிருஷ்ணா நீர் பங்கீடு, கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முதலமைச்சர் விஜய் சந்தித்தாக தமிழக அரசின் சார்பில் செய்தி குறிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.

முதலமைச்சர் விஜயின் வெளிநாடு மற்றும் வெளிமாநில பயணங்கள் எதுவுமே வெளிப்படைத்தன்மை கொண்டதாக இல்லை. நதிநீர் பற்றி மாநில முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் எனில், இரண்டு முதல்வர்கள் தவிர சுற்றிலும் இரு மாநில நீர்பாசனத் துறை அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

இரு மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இருக்கும் குழுப் புகைப்படம் பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. அதில், தமிழக நீர்வளத்துறை செயலாளர் மற்றும் தமிழக அதிகாரிகள் யாருமே இல்லை. அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா தவிர முதல்வர் விஜயின் ஆலோசகர் விஷ்ணு ரெட்டிதான் பிரதானமாக அமர வைக்கப்பட்டிருந்தார்.

நீர்வளத்துறைச் செயலாளரை விட விஷ்ணு ரெட்டிக்கு அங்கே வேலை? விஜய் ஆட்சி அமைந்த பிறகு ₹4.42 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல தொழில் முதலீடுகள் ஆந்திராவிற்கு சென்றுவிட்டது. அது குறித்து விவாதிப்பதற்காக இருக்குமோ என்று மக்கள் யோசிக்கிறார்கள்.

முதலமைச்சர்கள் சந்தித்த கூட்டத்தில் அதிகாரிகள் தயாரித்து கொடுத்த கிருஷ்ண நீர் தொடர்பான அறிக்கை எதையும் முதல்வர் வாசிக்கவில்லையே ஏன்? அப்படி வாசித்திருந்தால் அது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டிருக்குமே? நதிநீர் இணைப்பு தொடர்பான கடித்தத்தை முதல்வர் விஜய் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் அளித்திருக்கிறார். அதைக் கொடுக்க ஏன் ஆந்திரா போக வேண்டும். தமிழ்நாட்டில் இருந்தே போஸ்ட் செய்திருக்கலாம்!

முதலமைச்சர் ஆந்திரா செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்பாக, பாலாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர், கிருஷ்ணா நீர் வழங்கும் பிரிவு செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட ஏழு பேர் விஜயவாடா சென்றிருக்கிறார்கள். அதிகாரிகள் எதிர்பார்த்து சென்றது போல ஆந்திர முதல்வரின் முகாம் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் எதுவும் நடக்கவில்லை. அதனால் ஆந்திரா ஸ்பெஷல் உணவுகளை சாப்பிட்டுவிட்டு திருப்பதியில் சிறப்பு தரிசனம் முடித்துவிட்டு தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் வெறும் கையோடு திரும்பிவிட்டார்கள். இன்றைக்கு நாளிதழிலும் செய்தி வெளியாகியிருக்கிறது.

கோதாவரி -கிருஷ்ணா-காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் பற்றி பேசினார்கள் என்றால், அதற்கான வரைவு போடப்பட்டதா? சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க முடிவு எடுத்தார்களா? கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்புக்காக பிரதமரை இருமாநில முதல்வர்களும் சந்தித்து கோரிக்கை வைப்பது தொடர்பாக இறுதி செய்யப்பட்டதா? இப்படி எந்த தகவலும் இல்லாமல் மொட்டை தாத்தா குட்டையில் விழுந்தது போல தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டிருக்கிறது.

மாநிலப் பிரச்சனைகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்த போவதாகச் சொல்லி முதல்வர் விஜய் தனிப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்.

காவிரி பிரச்சனையை பேசப் போகிறேன் என்று கர்நாடகா சென்றார். இவரை நம்பி விவசாயிகள் நெல் விதைத்தார்கள். இப்பொழுது டெல்டா காய்ந்து கிடக்கிறது. போராட்டங்கள் வெடிக்கின்றன. நெல்வரத்து குறைந்து அரிசி விலை விண்ணை முட்டுகிறது.

முதலீட்டை ஈர்ப்பதற்காக லண்டன் செல்வதாகச் சொல்லி அங்கே கார் ரேஸில் பங்கேற்றார். 5 நாட்கள் பயணத்தில் 3 நாட்கள் என்ன செய்தார்? என்பது இன்று வரை கேள்வியாகவே உள்ளது.

நேற்று ஆந்திரா. நாளை கேரளம். இப்படி தனிப்பட்ட பயணங்களுக்கு மாநில நலன் என்ற ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார். தனிவிமானத்தில்தான் சென்று வருகிறார். அவர் சொல்வதைப் போலவே சொல்ல வேண்டுமென்றால் ஊரான் வீட்டு நெய்யில் ஸ்விட் செய்ய ஊர் ஊராக கிளம்பி கொண்டிருக்கிறார்.

“இந்த அரசின் கொள்கைகளும் செயல்பாடுகளும் மக்களுக்கு நூறு சதவீதம் வெளிப்படையானதாகவே இருக்கும். எந்தவொரு திட்டமும் மூடிய கதவுகளுக்குப் பின்னால் ரகசியமாக விவாதிக்கப்படாது" என்று தான் முதலமைச்சராக பதவியேற்ற மேடையிலேயே பிரசங்கம் செய்தார். பேசும் போதெல்லாம் Transparency பற்றி பாடம் எடுத்தது பொய்யா?

அரசு பணத்தில் செல்கிறவர், அரசின் பணியை மேற்கொண்டதாக சொல்லக் கூடியவர், என்ன பணியை மேற்கொண்டார்? என்பதை மக்களுக்கு விளக்க கூடிய தார்மீக கடமையும் பொறுப்பும் முதல்வருக்கு உண்டு.

என்னை யாருமே கேள்வி கேட்க முடியாது என்கிற தான் தோன்றித்தனமாக நடந்து கொள்வது என்பது ஜனநாயகத்தில் ஏற்புடையதாக இல்லை. நினைத்ததை எல்லாம் செய்ய முதலமைச்சர் விஜய் இந்த நாட்டின் மன்னரோ, இளவரசரோ அல்ல. மக்கள் வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர்.

வாக்களித்த மக்களுக்கு அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்பது தார்மீக கடமை. ஆனால் முதலமைச்சர் விஜய் அரசு முறை பயணங்களை மேற்கொள்ளும் போது பின்பற்றப்படும் மரபுகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன" என்று விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb