📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 18, 2026 09:33 PM

முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்?

முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்?

முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்? - சூடிபிடிக்கும் தேர்தல் களம்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

Published : September 18, 2026 at 9:22 PM IST

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6 தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் பிரச்சார பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தி வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த இடைத்தேர்தலை பொருத்தவரை தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் என ஐந்து முனை போட்டி நிலவுகிறது.

இடைத்தேர்தலையொட்டி, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இத்தேர்தலில் இரண்டு கட்டங்களாக 4 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு நாட்கள் ஒதுக்கி, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களையும் சென்றடைய கூடிய வகையில் முதல்வரின் பரப்புரை திட்டம் இருக்கும் என்று தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் ஜாமீன் கேட்டால் அபராதம் விதிக்கப்படும் - குதிரை பேர வழக்கில் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

அதன்படி, முதல்வர் விஜய் செப்டம்பர் மாத இறுதியிலும் அக்டோபர் மாதத்தின் தொடக்கத்திலும் இரண்டு கட்டங்களாக இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் விஜய், கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது மாவட்டம் வாரியாக தனக்கான பிரத்யேக வாகனத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அந்த வகையில் வாகன பிரச்சாரத்தின் மூலமாகவே இரண்டு தொகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு சென்று தவெக வேட்பாளர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரை ஆதரித்து அவக் பரப்புரை மேற்கொள்வார் திட்டமிட்டுள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் மட்டுமல்லாது தவெக கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்கள், மூத்த அமைச்சர்கள் ஆகியோரின் பிரச்சாரப் பயணத் திட்டமும் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பரப்புரையை செய்ய ஏற்கெனவே திட்டமிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் விஜய்யும் களத்தில் இறங்குவதாக வெளியாகி உள்ள தகவல் தவெக தொண்டர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், மதுராந்தகம் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் அங்கு வெற்றிப் பெற்றார். தாராபுரத்தில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட சத்தியபாமா வெற்றி வாகை சூடினார்.

ஆனால், இவர்கள் இருவரும் தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு மாதத்திற்குள் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.