மதுவை ஒழிக்க சவுமியாவின் முயற்சிக்கு தமிழகம் துணை நிற்க வேண்டும்!
மது ஒழிப்பு இயக்கம் நாளை தொடக்கம். மதுவை ஒழிக்க சவுமியா அன்புமணியின் முயற்சிக்கு தமிழகம் துணை நிற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மது இல்லாத் தமிழகம்
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு இன்று எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளில் முதன்மையானது என்னவென்றால், மதுவால் ஏற்படும் கேடுகள் என்று ஐயத்திற்கு இடமின்றி கூறி விடலாம். அந்த அளவுக்கு மதுவால் சமூக, சுகாதார, பொருளாதார பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்திய அளவில் இளம் விதவைகள் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு தான். நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகளும், தற்கொலைகளும் நிகழும் மாநிலம் தமிழ்நாடு தான். இவை அனைத்துக்கும் முதன்மைக் காரணம் மது தான் என்பதை மறுக்க முடியாது. பெண்களுக்கு எதிராக கணவர்களால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கு முதன்மைக் காரணம் மது தான் என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
200 வகையான நோய்கள்
மது வணிகத்தின் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.60,000 கோடி வரை வருமானம் கிடைப்பதால், அதை தவிர்க்க முடியாது என்றொரு அபத்தமான வாதம் முன்வைக்கப்படுகிறது. இதை ஏற்கவே முடியாது. மது மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.60,000 கோடி வருமானம் கிடைப்பதாக வைத்துக் கொண்டால், அதனால் மது குடிப்பவர்களுக்கு ஏற்படும் சுகாதார பாதிப்புகளை சரி செய்வதற்காக மட்டும் ரூ.1.08 லட்சம் அரசுக்கு செலவாகிறது என்றும், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளின் அளவு ரூ.72,000 கோடி என்றும் ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது, மது வணிகத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை விட 3 மடங்கு இழப்பு அரசுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, மதுப்பழக்கம் உள்ளவர்களின் குடும்பங்களில் 85%-க்கும் கூடுதலானவை தாங்க முடியாத கடன்சுமையில் தவிக்கின்றன. அக்குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் கூட அதற்கு மருத்துவம் செய்வதற்கு தேவையான அவர்களிடம் பணம் இல்லை.
மது ஒழிக்கப்பட வேண்டும்
இவை அனைத்தையும் விட இன்னொரு பெரும் அச்சுறுத்தலை மதுவால் தமிழகம் எதிர்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் இரு தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகி விட்ட நிலையில், இப்போதுள்ள மூன்றாம் தலைமுறையும் மதுவுக்கு அடிமையானால், தமிழர்களின் மரபணுவில் மதுப் பழக்கம் பதிவாகிவிடும் என்றும், அதன்பின் தமிழர்களை மதுப்பழக்கத்திலிருந்து மீட்க முடியாது என்றும் பொது சுகாதாரத்துறை வல்லுனர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.