📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health October 17, 2026 04:01 AM

மகனின் பார்வையில் கவிஞர் கண்ணதாசன்

மகனின் பார்வையில் கவிஞர் கண்ணதாசன்

கவியரசர் கண்ணதாசன் மறைந்து 45 ஆண்டுகள் கடந்த நிலையிலும் உலகத் தமிழர்கள் அவர் புகழைப் பாடிக்கொண்டிருப்பதும் உலகெங்கும் அவரது நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறுவதும் பெருமிதம் அளிப்பதாகக் கூறுகிறார் கவியரசரின் இளைய மகன் வெங்கடாச்சலம் கண்ணதாசன்.

எழுத்தாளர், வசனகர்த்தா, நாவலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் எனத் தம் தந்தைக்குப் பல முகங்கள் இருந்தாலும் அவரது கவிமுகம்தான் தம்மைக் கவர்ந்தது என்றார் அவர்.

தமிழ் முரசின் ‘ஆய கலை அரிய கலைஞர்’ வலையொளித் தொடருக்கான சிறப்பு நேர்காணலில் திரு வெங்கட் தமது தந்தையின் நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார்.

கம்பீர உருவம் கனிந்த மனம்

தம் சகோதர, சகோதரிகள் அப்பாவுடன் நட்பார்ந்த முறையில் பழகியதாகக் கூறக் கேட்டிருப்பதாகக் குறிப்பிட்ட திரு வெங்கட், பிள்ளைகள் சூழ அமர்ந்து பல்வேறு தகவல்களைச் சொல்லும் அப்பாவோடு சிரித்து மகிழ்ந்ததுதான் தம் நினைவில் பதிந்திருப்பதாகச் சொன்னார். கவியரசர் ஒருபோதும் தம் பிள்ளைகளுக்கு அறிவுரை சொன்னதில்லை என்றார் அவர்.

புகழ்பெற்றவர்களின் பெயர்களைக் கவிஞர் தம் பிள்ளைகளுக்குச் சூட்டியதைக் குறிப்பிட்ட அவர், கண்ணதாசன் மகன், மருமகள், பேத்தி என்ற அடையாளங்கள் தம் குடும்பத்தினர்க்குக் கிடைப்பதை மிகப்பெரிய நற்பேறாகக் கருதுவதாகச் சொன்னார்.

தந்தையின் பெயருக்கு இழுக்கு நேராவண்ணம் நடந்துகொள்ள வேண்டும் என்று சிறு வயதில் தமக்கும் தம் சகோதரர்களுக்கும் தாயார் கூறிய அறிவுரையை நினைவுகூர்ந்தார் திரு வெங்கட்.

தம் தந்தை உணவுப் பிரியர் என்று குறிப்பிட்ட அவர், தமது பாட்டிமார், அத்தையர், தாயார், சின்னம்மா, சகோதரிகள் என அனைவருமே சமையலில் கைதேர்ந்தவர்கள் என்றார்.

ஒரு படத்தின் கதைக்கருவை உள்வாங்கி, அதற்கான பாடல்களுக்கு எளிமையாக, எந்தச் சிரமமுமின்றி மடமடவென வரியமைத்த கவிஞர் கண்ணதாசனின் திறனை வியப்பதாகக் கூறிய அவர், காலத்தால் அழியாத புகழ்பெற்ற கவிஞர்களின் கருத்துகளையும் பாமரர்க்கும் புரியும் வண்ணம் கவிஞரின் படைப்புகள் எடுத்துச்சொன்னதைச் சுட்டினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

தந்தையை வியக்கும் தனயன்

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், திரு எம்.ஜி.ஆர், திரு சிவாஜி கணேசன் போன்ற புகழாளர்களுக்கும் தமது தந்தைக்குமான அணுக்கமான உறவை நினைவுகூர்ந்த திரு வெங்கட், கவிஞரின் இறுதி நாள்களிலும் அவரது இறுதிச்சடங்கின்போதும் தமிழகத்தின் அப்போதைய முதல்வராக இருந்த திரு எம்.ஜி.ஆர் வழங்கிய ஆதரவு குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

‘இருந்து பாடிய இரங்கற்பா’ எனத் தமது மறைவுக்குத் தாமே கவிஞர் கண்ணதாசன் எழுதிக்கொண்ட அஞ்சலிப் பாடல் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட 12 வயதில் தந்தை காலமானதைச் சுட்டிய திரு வெங்கட், அந்தச் சிறு வயதிலும் தாம் அவரிடம் பல்வேறு அம்சங்களைக் கண்டு வியந்ததாகக் கூறினார். ஒருமுறை மிக இயல்பாக அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைத் தொலைபேசியில் அழைத்த கவிஞர், சரளமாக ஆங்கிலத்தில் உரையாடியது அத்தகைய வியப்புக்குரிய தருணம் என்றார் அவர்.

கிராமப்புறங்களில் இலவச மருத்துவம் வழங்குவது தொடர்பான சிந்தனைக்குச் செயல் வடிவம் தரக் கவிஞர் முனைந்ததையும் அவர் குறிப்பிட்டார்.

வற்றாத கவிதை ஊற்று

பாடல் எழுதும் வேளைகளில் கவிஞர் கண்ணதாசன் தம்மை முழுமையாக அதில் ஈடுபடுத்திக்கொண்டதையும் திரைப்பட இயக்குநர் திணறிப்போகும் அளவிற்கு ஒரு மெட்டுக்குப் பலவிதமான வரிகளைத் தந்ததையும் திரு வெங்கட் எடுத்துரைத்தார். ஆனாலும் தம்மைத் தாமே கவிஞர் என்றோ கவியரசர் என்றோ அவர் புகழ்ந்துரைத்ததில்லை என்றும் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்துக்கும் தமது பாட்டு ஒலிக்கவேண்டுமென்பது தந்தையின் விருப்பம் என்றும் அவர் சொன்னார்.

மகாத்மா காந்தியடிகளைப் பின்பற்றித் தம் வாழ்வின் குறைகளையும் கவிஞர் பதிவுசெய்ததது பற்றியும் திரு வெங்கட் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் உள்ள டேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணிக் கோயிலில் வீற்றிருக்கும் முருகன்மேல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய தனிப்பாடலையும் அவர் படித்துக்காட்டினார்.

தந்தையின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பெருவெற்றிடமாக இருந்தபோதிலும், அவரது அழியாக் கவிதைகளும் நினைவுகளும் குடும்பத்தாரை என்றும் வழிநடத்தும் வெளிச்சமாகத் திகழ்வதாக அவர் குறிப்பிட்டார். இவ்வுலகின் பல கோடித் தமிழர்களுக்குமான மிகப்பெரிய கொடையாகத் தம் தந்தை விட்டுச் சென்ற தமிழ்ப் படைப்புகள் விளங்குவதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.