📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 10, 2026 09:34 AM

மின்னிலக்க நாணயத் திருட்டு; சிங்கப்பூர் இளையரிடமிருந்து 28 கார்கள் பறிமுதல்

மின்னிலக்க நாணயத் திருட்டு; சிங்கப்பூர் இளையரிடமிருந்து 28 கார்கள் பறிமுதல்

அமெரிக்காவில் இதுவரை நடைபெற்ற மிகப் பெரிய மின்னலக்க நாணயத் திருட்டுச் சம்பவங்களில் ஒன்றில் மூளையாகச் செயல்பட்ட 22 வயது சிங்கப்பூரரான மாலோன் லாம், அமெரிக்க நீதிமன்றத்தில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 28 சொகுசுக் கார்கள் உட்படப் பல கோடி மதிப்பிலான சொத்துகள் அமெரிக்க அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மலோன் லாம், ‘மைன்கிராஃப்ட்’ எனும் கணினி விளையாட்டின் மூலம் அறிமுகமான நண்பர்களுடன் தங்குவதற்காக அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்திற்குச் சென்றார்.

13 வயதிலேயே படிப்பைக் கைவிட்டதாகக் கூறும் லாம், கணினி மென்பொருள் மற்றும் தொழில்நுட்பத் துறையில் தனக்கிருந்த ஆற்றலைப் பயன்படுத்தி, இணையத்தின் வழி ஊடுருவப்பட்டத் தகவல் தொகுப்புகளில் இருந்து உயர் மதிப்புடைய நபர்களின் மின்னிலக்க நாணய விவரங்களைச் சேகரித்தார்.

அவ்வாறு திரட்டப்பட்ட தரவுகளை ஆய்வு செய்த பிறகு, குறிவைக்கப்பட்டோரின் கணக்குகளை யாரோ அனுமதியின்றி அணுக முயல்வது போன்ற போலியான ‘கணக்கு அணுகல் முயற்சி’ எச்சரிக்கை அறிவிப்புகளை அவர்களது கைப்பேசிகளுக்கு லாம் அனுப்பினார்.

அதன் தொடர்ச்சியாக, லாமின் நண்பர்கள் கூகல், ‘காயின்பேஸ்’ போன்ற முன்னணி நிறுவனங்களின் தொழில்நுட்ப ஆதரவுக் குழுவினர் போல நடித்து, பாதிக்கப்பட்ட நபர்களை ஏமாற்றி அவர்களது கணக்கு விவரங்கள் மற்றும் மறைச்சொற்களைப் பெற்று மின்னிலக்க நாணயங்களைத் திருடினர்.

வாஷிங்டனில் உள்ள நீதிமன்றத்தில் புதன்கிழமையன்று (செப்டம்பர் 9) நடைபெற்ற விசாரணையின்போது, இந்த மிகப் பெரிய மின்னிலக்க நாணயத் திருட்டில் தமக்கிருந்த பங்கை லாம் ஒப்புக்கொண்டார்.

அவருக்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடும். எனினும், அவருக்குத் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் அதிகாரபூர்வ தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

நீதிமன்றத்தின் பறிமுதல் ஆணைகளின்படி, லாமிடமிருந்து ரோல்ஸ் ராய்ஸ், குறைந்தது ஏழு லம்போர்கினி கார்கள், பல ஃபெராரி கார்கள் மற்றும் ‘பகானி’ விளையாட்டு வாகனம் உட்படக் குறைந்தபட்சம் 28 ஆடம்பரக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாகனத்தின் விலையும் 100,000 முதல் 3.8 மில்லியன் அமெரிக்க டாலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமன்றி, லாமிடமிருந்து 95க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த நகைகள், ஆடம்பரக் கடிகாரங்கள், விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் காலணிகளும் பறிமுதல் செய்யப்பட்டு அமெரிக்க அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சில கடிகாரங்களின் தனிப்பட்ட விலை மட்டுமே 500,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.