📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology September 19, 2026 02:33 AM

மாநிலம் முழுதும் மின் தடையால் மக்கள் திணறல்! அவசரகால நடவடிக்கை தேவை என குமுறல்

மாநிலம் முழுதும் மின் தடையால் மக்கள் திணறல்! அவசரகால நடவடிக்கை தேவை என குமுறல்

சென்னை:தமிழகம் முழுதும் காலை, மதியம், இரவு என, மின் தடை செய்யப்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். இந்த பிரச்னையில், தமிழக அரசு தலையிட்டு, அவசரகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே, மக்களின் குமுறலாக உள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் முடிந்தும், இன்னும் வெயில் கடுமையாக உள்ளது. தினசரி மின் தேவை சராசரியாக, 20 ஆயிரம் முதல் 21 ஆயிரம் மெகா வாட்டாக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 16 ஆயிரம் மெகா வாட்டாக இருந்தது.

காற்றாலை மின் நிலையங்களில் இருந்து, மே முதல் கடந்த மாதம் வரை தினமும் சராசரியாக 4 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கிடைத்து வந்தது; இம்மாதத்தில் அது பாதியாக குறைந்துள்ளது.

இதனால், தினசரி 1,500 முதல் 2,000 மெகா வாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டதால், கடந்த வாரத்தில் சென்னையை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் அறிவிக்கப்படாமல், ஒரு மணி நேர மின் வெட்டு செய்யப்பட்டது.

பற்றாக்குறையை சமாளிக்க மின்சார சந்தையில், 3,500 மெகா வாட் மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்தது. தற்போது, தினசரி மின் தேவை 20 ஆயிரம் மெகா வாட்டாக உள்ளது.

காற்றாலை மின்சாரம் குறைந்ததால், 1,000 மெகா வாட் அளவிற்கு மின் பற்றாக்குறை நிலவுவதாக தெரிகிறது. இதை சமாளிக்க, சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், மீண்டும் மின் வெட்டு செய்யப்படுகிறது.

சென்னையில் மின் தேவை அதிகரிப்பால், பல இடங்களில் டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட மின் வினியோக சாதனங்கள், 'ஓவர்லோடு' காரணமாக பழுதாகி வருவதால், மின் தடை ஏற்பட்டு வருகிறது.

* வண்ணாரப்பேட்டை, மார்டன் லேன், லாலா குண்டா தெரு, கண்ணன் தெரு, தர்மராஜன் கோவில் தெரு, விஜயராமலு தெரு, காளிங்கராயன் தெரு உள்ளிட்ட தெருக்களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில், ஒரு வாரமாக மின் தடை ஏற்பட்டு வருகிறது. வழக்கம் போல, நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கும் மின் தடை ஏற்பட்டது. தொடர் மின் தடையால் ஆத்திரம் அடைந்த, 100க்கும் மேற்பட்ட மக்கள், வண்ணாரப்பேட்டை, கண்ணன் ரவுண்டானா அருகே மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, ராயபுரம் எம்.எல்.ஏ., விஜய் தாமுவை கண்டித்து, கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பழைய சிறைச்சாலை சாலையில் உள்ள துணை மின் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அங்கு, இரவு பணியில் இருந்த மின் வாரிய பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். போலீசார் பேச்சு நடத்தி, கலைந்து போக செய்தனர். நேற்று அதிகாலை 2:00 மணிக்கு மீண்டும் மின்சாரம் வந்தது.

*வியாசர்பாடி, மூர்த்திங்கர் இரண்டாவது தெரு, தேசிங்கபுரம், சுந்தரபுரம் பவர் லைன், எம்.எம்.கார்டனில், கடந்த நான்கு நாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள், மூர்த்திங்கர் இரண்டாவது தெரு சந்திப்பில், எருக்கஞ்சேரி பிரதான சாலையில் நேற்று மாலை 3:00 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறி, அனைவரையும் கலைந்து போகச் செய்தனர்.

* கீழ்ப்பாக்கம், கெல்லீஸ் 'சிக்னல்' அருகே, சுற்று வட்டார பகுதி மக்கள் 20க்கும் மேற்பட்டோர், மின் தடையை கண்டித்து, புரசைவாக்கம் மின் வாரிய அலுவலகத்தை நேற்று முன்தினம் நள்ளிரவு முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: வழக்கமாக, இரவில் தான் மின் தடை ஏற்படும். ஆனால், சமீப காலமாக பகல், இரவு, நள்ளிரவு, அதிகாலை என, இஷ்டத்திற்கு மின் தடை ஏற்படுகிறது. அனல் காற்று வீசுவதால், வீடுகளில் மின்சாரம் இல்லாமல் இருக்க முடிவதில்லை.

இதுதொடர்பாக புகார் அளிக்க, மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தை தொடர்பு கொண்டாலும் இணைப்பு கிடைப்பதில்லை. உதவி பொறியாளர்களிடம் புகார் அளிக்க தொடர்பு கொண்டால், அவர்களின் மொபைல் போன் எண் மாறியுள்ளது.

மின் தடையால் சிரமம் ஏற்படுவதுடன், புகார் கூற முடியாத நிலையும் ஏற்படுவதால், மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே, மின் வினியோக பிரச்னையில், அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மின் தடை ஏன்: அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்வட கிழக்கு பருவ மழை காலத்தை ஒட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்களுடன் நேற்று, மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் ஆய்வு நடத்தினார். இதில், எரிசக்தி துறை செயலர் அனில் மேஷ்ராம், மின் வாரிய தலைவர் அருண்ராய் பங்கேற்றனர்.பின், நிர்மல்குமார் அளித்த பேட்டி: சென்னையில் ஆர்.கே.நகர், ஸ்டான்லி பகுதிகளில், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தன் கேபிளை பதிக்கும்போது, மின் வாரிய கேபிளை பழுதாக்கி விட்டது. இதனால் தான், அங்கு மின்தடை ஏற்பட்டது. இதற்கு மாற்றாக, ஸ்டான்லி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டது. அதுவும், 'ஓவர்லோடு' காரணமாக வெப்பமாகி தீ விபத்து ஏற்பட்டது. மின் பற்றாக்குறை இல்லை. மின் சாதன பழுதால் மின் தடை ஏற்படுகிறது.பற்றாக்குறையை சமாளிக்க, மின்சார தொகுப்பில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப் படுகிறது. பல மாநிலங்களில், மின் பற்றாக்குறை உள்ளது. கேரளா, பஞ்சாப் மாநிலங்களில் மின் வெட்டு செய்யப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஒரு நாளில், 14 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. தமிழகத்தில், மின் கேபிளை பழுதாக்கினால் புகார் அளிக்கப்பட்டு, போலீசில் வழக்கு பதிவு செய்யப்படும். 'மின்னகம்' நுகர்வோர் சேவை மையத்திற்கு வரும் புகார்கள் எண்ணிக்கை முந்தைய காலத்தை விட இரு மடங்காகியுள்ளது. மின்னகம், சமூக வலைதளங்களில் பெறப்படும் புகார்களை, உதவி பொறியாளர் கண்காணித்து, விரைவாக தீர்வு காண, புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது, இரு மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.