📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 01, 2026 04:03 PM

கடைசி நிமிடத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.. ஆசிய விளையாட்டு ஹாக்கி பைனலுக்கு முன்னேற்றம்

கடைசி நிமிடத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.. ஆசிய விளையாட்டு ஹாக்கி பைனலுக்கு முன்னேற்றம்

கடைசி நிமிடத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.. ஆசிய விளையாட்டு ஹாக்கி பைனலுக்கு முன்னேற்றம்

கிஃபு: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் ஹாக்கி அரையிறுதியில், இந்திய அணி, பாகிஸ்தானை கடைசி நிமிட கோல் மூலம் 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்து ஷூட்-அவுட்டுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 60வது நிமிடத்தில் இந்திய வீரர் அபிஷேக் அடித்த கோல் இந்தியாவிற்கு வரலாற்று வெற்றியை தேடித்தந்தது.

ஜப்பானின் கிஃபு மைதானத்தில் நடைபெற்ற இந்த அனல் பறக்கும் அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இந்திய அணி தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடியது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 5வது மற்றும் 13வது நிமிடங்களில் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை மிகத் துல்லியமாக கோல்களாக மாற்றி இந்தியாவை 2-0 என முன்னிலைப்படுத்தினார். 23வது நிமிடத்தில் சில்லானந்த் லக்ரா கொடுத்த பாஸை சுக்பிரீத் சிங் அழகாக கோலாக்கினார். இதனால் இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது.

3 கோல்கள் பின்தங்கிய போதிலும் மனம் தளராத பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தியது. 30வது நிமிடத்தில் பாகிஸ்தான் கேப்டன் அபு மஹ்மூத் பெனால்டி கார்னரை கோலாக்கினார். 45வது நிமிடத்தில் ஹன்னான் ஷாஹித்தும், 49வது நிமிடத்தில் வஹீத் ராணாவும் அடுத்தடுத்து கோல் அடிக்க, ஆட்டம் 3-3 என்ற கணக்கில் சமநிலையை அடைந்தது.

இதனால் ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி 10 நிமிடங்களில் இரு அணிகளும் வெற்றி கோலுக்காக தீவிரமாக மோதின. ஆட்டம் முடிய இன்னும் ஒரு சில வினாடிகளே இருந்தது. அந்த 60வது நிமிடத்தில், இந்திய வீரர் அபிஷேக் அடித்த பந்து பாகிஸ்தான் தடுப்பாட்ட வீரர் சுபியான் கான் மீது பட்டு திசைமாறி மின்னல் வேகத்தில் கோல் வலைக்குள் புகுந்தது. பாகிஸ்தான் கோல்கீப்பரால் அதை தடுக்க முடியவில்லை.

இறுதியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக முன்னேறியது. சனிக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் அணி, மலேசியா அல்லது தென் கொரியாவை எதிர்கொள்கிறது.

ஏற்கனவே இந்திய மகளிர் ஹாக்கி அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வெள்ளிக்கிழமை சீனாவை எதிர்கொள்ள உள்ளது. 1998 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரே ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் இரண்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருப்பது இதுவே முதல்முறையாகும். இந்தப் போட்டியில் தங்கம் வெல்லும் அணி 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.