“கோப்பை இல்லாட்டியும் நாங்கதான் சாம்பியன்".. நக்வி குறித்து பிசிசிஐ முடிவு.. இந்திய கோச் விளக்கம்
“கோப்பை இல்லாட்டியும் நாங்கதான் சாம்பியன்".. நக்வி குறித்து பிசிசிஐ முடிவு.. இந்திய கோச் விளக்கம்
துபாய்: 2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகும், பாகிஸ்தான் அமைச்சராக இருக்கும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற மறுத்த விவகாரம் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தார் முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
துபாயில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி, தனது 8-வது ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால் ஆட்டம் முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு வராமல் இந்திய வீராங்கனைகள் முற்றிலுமாகப் புறக்கணித்தனர்.
இது குறித்து போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தார், "அதிகாரப்பூர்வமாக இந்திய அணி தான் இந்த ஆசிய கோப்பையின் சாம்பியன். கையில் கோப்பை இருக்கிறதா இல்லையா என்பது எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்கக் கூடாது என்பது பிசிசிஐ-யின் கொள்கை முடிவு. இதில் நாங்கள் தனிப்பட்ட முறையில் எதுவும் சொல்வதற்கில்லை" என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இந்திய அணி மேடைக்கு வராததால், இலங்கை கேப்டன் சமாரி அத்தபத்துவுக்கு இரண்டாம் இடத்திற்கான காசோலையை மட்டும் வழங்கிவிட்டு மோசின் நக்வி உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அதே நேரத்தில், இந்திய அணியின் ஓய்வறையிலேயே பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா வீராங்கனை நந்தினி சர்மாவுக்கு சிறந்த பீல்டருக்கான பதக்கத்தை வழங்கி சக வீராங்கனைகளுடன் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினார்.
கடந்த ஆண்டு பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கைகுலுக்கும் வழக்கம் கூட நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், நாட்டின் சுயமரியாதையைக் கருத்தில் கொண்டு பிசிசிஐ எடுத்த இந்த உறுதியான முடிவுக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
2025 ஆண்கள் ஆசிய கோப்பை தொடரின் முடிவில் கோப்பை வென்ற இந்திய அணி, மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்தது. அப்போது அந்த கோப்பையை வேறு யாரேனும் ஒருவர் கைகளில் இருந்து பெறுகிறோம் என அப்போதைய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார். ஆனால், அதற்கு மறுத்து மோசின் நக்வி கோப்பையை எடுத்துக் கொண்டு சென்று விட்டார். இப்போது வரை அந்த கோப்பை இந்தியா வசம் அளிக்கப்படவில்லை. அதை தொடர்ந்து தற்போது இந்தியாவின் மகளிர் ஆசிய கோப்பையும் நக்வி வசமே உள்ளது.