கொள்ளைபோன நகைகள்... கவலைப்படாத யூடியூபர்... சந்தேக வளையத்தில் நாகர்கோவில் மதுமிதா!
கொள்ளைபோன நகைகள்... கவலைப்படாத யூடியூபர்... சந்தேக வளையத்தில் நாகர்கோவில் மதுமிதா!
2020-ம் ஆண்டு முதலே யூடியூப்பில் இயங்கி வரும் மதுமிதாவுக்கு சுமார் 4 லட்சத்துக்கும் மேல் ஃபாலோயர்ஸ் உள்ளனர். கொள்ளை நடந்த பிறகு மதுமிதா விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலுக்கு அருகே தம்மத்துகோணம் பகுதியில் அமைந்துள்ள வி.ஐ.பி கார்டனில் வசித்துவரும் யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏலக்காய் வியாபாரியான கணவர் வினோத்குமாருடன் வசித்துவந்த மதுமிதா, வீட்டிலிருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றை ரீல்ஸாக வெளியிட்டு, பெருமையடித்துக்கொண்டிருந்த நிலையில், கடந்த 24-ம் தேதி இரவு இந்தக் கொள்ளை நடந்திருக்கிறது.
வீட்டின் பின்பக்கக் கதவை கட்டர் மூலம் உடைத்து, கொள்ளை அரங்கேற்றப்பட்டிருக்கிறது. “நகை, பணத்தை வீடியோவாகப் போட்டதால், அதைப் பார்த்து கொள்ளைத் திட்டம் தீட்டியிருக்கலாமோ?” என்ற கோணத்தில் ராஜாக்கமங்கலம் போலீஸார் கேட்ட கேள்வி பிடிக்காமல், “வீடியோ போடுவதைப் பற்றி பேசாதீங்க” என விசாரணை நடக்கும்போதே பாதியில் அறைக்குள் சென்று கதவைச் சாத்தி விட்டாராம் மதுமிதா. மீடியாக்களுக்கும் பதில் சொல்வதைத் தவிர்க்கும் மதுமிதா, கடந்த 26-ம் தேதியிலிருந்து வழக்கம்போல மீண்டும் பணத்தில் குழந்தையைக் குளிப்பாட்டும் ரீல்ஸ் போடத் தொடங்கிவிட்டார்.
இந்தக் கொள்ளை வழக்கு பற்றி போலீஸ் தரப்பில் பேசியபோது, “மதுமிதாவின் வீடியோக்களைப் பார்த்து மும்பையிலிருந்து கொள்ளை திட்டமிடப்பட்டு, நிறைவேற்றப்பட்டதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அது குறித்து விசாரித்து வருகிறோம். மேலும், மதுமிதா – வினோத்குமார் தம்பதியின் பின்னணி குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்கள், குடும்பச் சொத்து மூலம் கிடைத்த பணத்தில் ஓராண்டுக்கு முன்பு ரூ.1 கோடிக்கு வீட்டை வாங்கியிருக்கின்றனர்.
இந்த வழக்கை விசாரித்துவரும் கன்னியாகுமரி டி.எஸ்.பி பிரகாஷிடம் பேசினோம். “கொள்ளை குறித்து இரண்டு, மூன்று கோணங்களில் தீவிரமாக விசாரித்துவருகிறோம். இன்னும் ஓரிரு நாள்களில் துப்பு துலக்கப்பட்டு உரிய விவரங்கள் தெரியவரும்” என்றார் சுருக்கமாக.
ஆடம்பரம் எவ்வளவு ஆபத்து என்பதை உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி!