காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் மாணவர்களின் 'பை' சோதனை
காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் மாணவர்களின் 'பை' சோதனை- குழந்தைகள் உரிமைக் கண்காணிப்பகம் கண்டனம்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதை வரவேற்பதாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
Published : September 24, 2026 at 8:03 PM IST
சென்னை: முதலமைச்சர் விஜய் கலந்து கொண்ட காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் பைகள் சோதனை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமைக் கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை, திருவான்மியூரில் உள்ள காந்தி கிராமம் சென்னை நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு உணவுகளைப் பரிமாறியதுடன் அவர்களுடன் அமர்ந்து உணருந்தினார். அப்போது அந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
அந்த வகையில், காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கு வரவேற்புத் தெரிவித்துள்ள தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம், பள்ளி மாணவ, மாணவிகளின் பைகளை சோதனை செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த செப்.22- ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜரின் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தினை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் விஜய், சென்னையில் உள்ள பள்ளிக்கு வருகை தந்தார். முன்னதாக, அப்பள்ளி மாணவ, மாணவிகள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களின் பைகள் சோதிக்கப்பட்டதாக வரும் செய்திகள் கவலை அளிக்கிறது.
குழந்தைகளின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்திச் செய்வதையும், அவர்கள் பசியின்றிப் பள்ளிக்குச் செல்வதை உறுதிச் செய்வதையும் நோக்கமாகக் கொண்ட காலை உணவுத் திட்டம், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்பட்டுள்ளதை தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்கிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் கூடுதலாக 15 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள் பயனடைந்தனர். ஆனாலும் குழந்தைகளுக்கான நலத்திட்டமானது, குழந்தைகளின் கண்ணியத்தையும், உரிமைகளையும், நிலைநிறுத்துவதாக இருக்க வேண்டும்.
பள்ளி என்பது குழந்தைகளுக்கான இடம். பள்ளிகள் சாதாரண பொது இடங்கள் அல்ல. குழந்தைகள் கற்பதற்கான இடமாவும், மரியாதை, பாதுகாப்பு போன்றவை உணர வைக்கும் இடங்களாகவும் பள்ளிகள் உள்ளன. குழந்தைகள் பள்ளி வாயில்களைக் கடக்கும் போது தங்கள் மனித உரிமைகளை இழப்பதில்லை என்றும், கல்வி என்பது குழந்தையின் உள்ளார்ந்த கண்ணியத்தை மதித்து, குழந்தைக்கு உகந்த சூழலை ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஐ.நா. குழந்தைகள் உரிமைக் குழு தெளிவாக வலியுறுத்தியுள்ளது.
எனவே, பள்ளிக்கு வருகை தரும் ஒரு முக்கிய பிரமுகருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், குழந்தைகளை சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களாக கருதுவதற்கோ அல்லது தேவையற்ற பயம், சங்கடம் அல்லது அந்நியப்படுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதற்கோ வழிவகுக்கக் கூடாது. பள்ளி மாணவர்களின் பைகள் சோதனை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.