ஜந்தர் மந்தருக்குள் அத்துமீறிய சிஜேபி நிர்வாகிகளுக்கு 5 நாள் நீதிமன்றக் காவல்
புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தடையை மீறி அத்துமீறி நுழைந்ததாகக் கைது செய்யப்பட்ட ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) நிர்வாகிகளை ஐந்து நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியில் (எஸ்ஐஆர்) பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம் சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி சிஜேபி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்த டெல்லி காவல்துறை, ஜந்தர் மந்தர் பகுதியை போராட்டக் களப் பட்டியலிலிருந்தே நீக்கி உத்தரவிட்டது.
இருப்பினும், தடையை மீறி சிஜேபி-யின் முன்னணி நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜிங்கிய ஷிண்டே ஆகியோர் ஜந்தர் மந்தர் பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரண்களைத் தாண்டி உள்ளே நுழைய முயன்றனர். கையில் தேசியக் கொடியுடன் நுழைந்த அவர்களை உடனடியாகக் கைது செய்த டெல்லி காவல்துறையினர், சிறப்பு நிர்வாக நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் ஆகிய இருவரையும் ஐந்து நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. அதேவேளையில், அஜிங்கிய ஷிண்டேவை ரூ.5,000 பிணைத் தொகையுடனும், அடுத்த ஓராண்டுக்கு அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்ற கடும் நிபந்தனையுடனும் விடுவித்தது.
முன்னதாக, கடந்த 10ஆம் தேதி மும்பையிலிருந்து டெல்லி வந்த சிஜேபி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, “அடுத்த ஓராண்டுக்கு அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது. நிபந்தனையை மீறினால் கடுமையான நடவடிக்கை பாயும்,” என்று நீதிமன்றம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.