ஜந்தர் மந்தரில் போராட தடை; காவல்துறை கட்டுப்பாட்டில் களம்
ஜந்தர் மந்தரில் போராட தடை; காவல்துறை கட்டுப்பாட்டில் களம் - 5 பேருக்கு மேல் கூட முடியாது!
ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி கட்சியினர், இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Published : October 2, 2026 at 11:31 AM IST
புது டெல்லி: பல்வேறு அமைப்பினர் போராட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து ஜந்தர் மந்தர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு ஐந்து பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி விலகக் கோரியும், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (SIR) செயல்முறையை நிறுத்தக் கோரியும் நாடு முழுவதிலும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், தலைநகரின் முக்கிய பகுதியான ஜந்தர் மந்தர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அறிவித்துள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் இன்று (அக்டோபர் 2) ஜந்தர் மந்தரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தனர். இதையடுத்தே இந் நடவடிக்கையை டெல்லி காவல்துறை கையில் எடுத்துள்ளது.
அங்குள்ள சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், ஜந்தர் மந்தர் பகுதியில் பிஎன்எஸ்எஸ் பிரிவு 163 (சிஆர்பிசி பிரிவு 144 தடை) அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகையால், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடினால் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
Section 163 BNSS is in force in New Delhi District. Please read the notice, for better understanding.@PTI_News#DPUpdates pic.twitter.com/Zfgrh0biPT
முன்னதாக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த திட்டமிட்டு பல்வேறு அமைப்பினர் அதற்கான அனுமதியை கோரியிருந்தநிலையில், அதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்தது. அத்துடன், எந்தவித அசம்பாவிதமும் அரங்கேறி விடக்கூடாது என்பதன் அடிப்படையில் புது தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக காவலர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் தற்போது குவிக்கப்பட்டுள்ளனர்.
அகில இந்திய மாணவர் சங்கம், மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோரே போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதுதவிர, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களும், இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், போராட்டமானது இன்று காலை 11 மணி அளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டங்களுக்கு பெயர்போன பகுதி
போராட்டங்கள் மற்றும் தர்ணாக்களுக்கு பெயர்போன பகுதியாக ஜந்தர் மந்தர் உள்ளது. காவல்துறையின் அனுமதியுடன் பல்வேறு போராட்டங்கள் இங்கு நடைபெற்றிருக்கின்றன. குறிப்பாக, சமீபத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் மாணவ அமைப்பினர் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக இங்கேயே போராட்டம் நடத்தின.
இந்த போராட்டம் நாடு தழுவிய அளவில் பேசு பொருளாக மாறியது. குறிப்பாக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதற்கு காரணமாகவும் இந்த போராட்டமே அமைந்தது. இத்தகைய பகுதியே தற்போது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.