இது என் ரசிகர்களுக்காகத்தான்.. தேசிய விருது பெற்ற தனுஷ் உருக்கம்.. மகன்களே ஹீரோ மாதிரி இருக்காங்க
சென்னை: நடிகர் தனுஷுக்கு கேப்டன் மில்லர் மற்றும் ராயன் படங்களுக்காக தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு அவரும் விருதுகளை பெற்றுக்கொண்டார். விருதை பெற்ற பிறகு தனது மகன்களுடன் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் பதிவு வைரலாகியிருக்கிறது.
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயர் தனுஷிடம் கடந்த பல வருடங்களாக இருக்கிறது. அவரும் ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். தமிழில் கமல்ஹாசனுக்கு அடுத்து அதிக முறை தேசிய விருது வென்ற நடிகர் தனுஷாகத்தான் இருப்பார். இப்படிப்பட்ட நிலைமையில் கடந்த மாதத்தில் 72வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
தனுஷுக்கு விருது: அதில் தனுஷுக்கு விருது அறிவிக்கப்பட்டது. அதாவது கேப்டன் மில்லர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதும், ராயன் படத்துக்கு சிறந்த படமாகவும் தேசிய விருதை அறிவித்தார்கள். மேலும் அமரன், மெய்யழகன் ஆகிய படங்களுக்கும், ஜிவி பிரகாஷுக்கும்கூட அவ்விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைகள்: இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டவுடனேயே சர்ச்சைகளும் எழுந்தன. அதாவது தமிழில் விருதுக்கு தகுதியான படங்கள் எக்கச்சக்கம் இருக்கின்றன. ஆனால் தனுஷுக்கு விருது கொடுத்ததெல்லாம் நியாயம் இல்லாதது என குரல்கள் கேட்டன. தனுஷும் அதற்கு தகுந்த பதிலடியை கொடுத்திருந்தார். அவர் ஒரு விழாவில் பேசுகையில், 'மயக்கம் என்ன, 3 உள்ளிட்ட படங்களுக்கு எல்லாம் தேசிய விருது வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் ஏன் தரவில்லை என்று இவர்கள் கேட்கவில்லை' என ஒரே போடாக போட்டார்.
விருது பெற்ற தனுஷ்: அவர் அப்படி ஒரு போடு போட்டதும் தேசிய விருது சர்ச்சை குரல்கள் கொஞ்சம் ஓய்ந்தன. சூழல் இப்படி இருக்க நேற்று டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் தனுஷ், ஜிவி பிரகாஷ்,அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்று விருதினை பெற்றுக்கொண்டார்கள். இந்நிலையில் விருது பெற்ற பிறகு தனது மகன்களுடன் இருந்தபடி புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் தனுஷ்.
தனுஷின் பதிவு: அவர் அந்தப் பதிவில், "உங்கள் இடத்தை வேறு ஒருவர் தட்டி சென்றாலும் அதை பற்றி நீங்கள் சிறிதும் வருத்தப்படாமல் இருக்க வேண்டும். நான் எப்போதும் சொல்வது போன்று, எனது இதயம் நன்றியுணர்வால் நிறைந்திருக்கிறது. இது எனது ரசிகர்களுக்காகத்தான். எனது பலத்தின் தூணாக இருக்கும் என் ரசிகர்களுக்காக" என்று குறிப்பிட்டிருக்கிறார். தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ஓம் படம் அக்டோபர் மாதம் வரவிருக்கிறது. அதனை ராஜ்குமார் பெரியசாமிதான் இயக்கியிருக்கிறர். மம்மூட்டியும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்.