📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 02, 2026 10:04 AM

இடைத்தேர்தலில் த.வெ.க.,வினர் ஓட்டுக்கு பணம் கொடுக்கின்றனர்: கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றச்சாட்டு

இடைத்தேர்தலில் த.வெ.க.,வினர் ஓட்டுக்கு பணம் கொடுக்கின்றனர்: கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றச்சாட்டு

சென்னை: இடைத்தேர்தலில், த.வெ.க.,வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, மா. கம்யூ., சார்பில், சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்ற பின், மா.கம்யூ., தமிழக செயலர் சண்முகம் அளித்த பேட்டி:

நேர்மையான முறையில் தேர்தல் நடத்துவது தான், தேர்தல் கமிஷன் கடமை. ஆனால், பா.ஜ.,வுக்கு ஆதரவாக, தலைமை தேர்தல் கமிஷனர் செயல்பட்டுள்ளார் .அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இதையே, தி.மு.க., - காங்., உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்துகின்றன.

த.வெ.க., கூட்டணியில், பா.ம.க., இணைய உள்ளதாக கூறுவது 'வெறும் வதந்தி' என, பா.ம.க., -எம்.எல்.ஏ., சவுமியா கூறி விட்டார். அதையே நானும் கூறுகிறேன்.

இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகத்தில் உள்ள கிராமங்களில், கம்யூனிஸ்ட் வேட்பாளருக்காக நாங்கள் ஓட்டு சேகரிக்க சென்றபோது, அங்கிருந்த மக்கள், 'நீங்கள் மட்டும் தான், துண்டு பிரசுரம் கொடுக்கிறீர்கள். மற்ற கட்சியினர் பணம் கொடுக்கின்றனர்' என கூறினர்.

'எந்த கட்சியினர்' என நாங்கள் கேட்டதற்கு, 'த.வெ.க.,வில் தான் அதிக அளவில் பணம் கொடுத்தனர்' என தெரிவித்தனர். தன்னை துாய சக்தி என, கூறிக்கொண்டு, ஓட்டுக்கு த.வெ.க., பேரம் பேசுகிறது. இதற்கான பதிலை, அக்கட்சியின் தலைவரான முதல்வர் விஜய் தான் கூற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல, இந்திய கம்யூனிஸ்ட் தமிழக செயலர் வீரபாண்டியனும் த.வெ.க.,வினர் பணம் கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது:

இடைத்தேர்தல் நடக்கும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் த.வெ.க., - தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றன. வீட்டில் எத்தனை ஓட்டுகள் உள்ளன என்பதை கணக்கெடுத்து, எவ்வளவு பணம் கொடுப்பது என்பதை, முடிவு செய்கின்றனர்.

இந்த இடைத்தேர்தலில், மற்ற கட்சிகள் யாரும் மக்களை சந்திக்கவில்லை; மக்களிடம் அரசியல் பேசவில்லை. வெறுமனே தலைவர்கள் வந்து பேசி விட்டுச் செல்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டும் தான் மக்களைச் சந்தித்து, தொகுதி பிரச்னைகள் குறித்து பேசுகிறோம்.