📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 05, 2026 05:03 PM

இந்திய அணி ஆடும் ஹாங்காங் சிக்சஸ் தொடர் எவ்வாறு விளையாடப்படும்? அதன் விதிகள் என்ன?

இந்திய அணி ஆடும் ஹாங்காங் சிக்சஸ் தொடர் எவ்வாறு விளையாடப்படும்? அதன் விதிகள் என்ன?

இந்திய அணி ஆடும் ஹாங்காங் சிக்சஸ் தொடர் எவ்வாறு விளையாடப்படும்? அதன் விதிகள் என்ன?

மும்பை: ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. அதிலும் புவனேஸ்வர் குமார் தலைமையிலான வலுவான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த நடராஜன், உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் க்ருனால் பாண்டியா ஆகியோர் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். ஹாங்காங் சிக்ஸஸ் தொடரின் விதிகள் அனைத்தும் சர்வதேச கிரிக்கெட் விதிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டு, கிரிக்கெட் ஹாங்காங் அமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடர், ரசிகர்களுக்கு மிக வேகமான, அதிக ரன்கள் குவிக்கும் போட்டியாக அமையும். வழக்கமான 11 பேர் ஆடும் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, சுவாரசியமான பல விதிகளைக் கொண்ட இந்தத் தொடர் எவ்வாறு விளையாடப்படுகிறது என்பது குறித்த விரிவாக பார்க்கலாம்.

அணிக்கு 6 வீரர்கள் மட்டுமே: இந்தத் தொடரின் மிக முக்கிய அம்சமே, ஒரு அணியில் 6 வீரர்கள் மட்டுமே இடம் பெற முடியும் என்பதுதான். இதனால் மைதானத்தில் பந்துவீச்சாளர் மற்றும் விக்கெட் கீப்பரைத் தவிர்த்து 4 ஃபீல்டர்கள் மட்டுமே இருக்க அனுமதி உண்டு. அதனால் எளிதாக ரன் குவிக்க முடியும்.

6 ஓவர்கள் கொண்ட ஆட்டம்: ஒவ்வொரு போட்டியும் தலா 6 ஓவர்களைக் கொண்ட குறுகிய வடிவ ஆட்டமாக நடைபெறும். ஒரு போட்டி சராசரியாக 45 நிமிடங்களில் முடிவடைந்துவிடும்.

அனைவரும் பந்துவீச வேண்டும்: விக்கெட் கீப்பரைத் தவிர அணியில் உள்ள மற்ற 5 வீரர்களும் கட்டாயம் பந்துவீச வேண்டும். ஒரு பந்துவீச்சாளர் அதிகபட்சமாக 2 ஓவர்கள் வரை வீசலாம் (ஆனால் அடுத்தடுத்த ஓவர்களாக வீசக்கூடாது), மற்ற 4 வீரர்கள் தலா 1 ஓவர் வீச வேண்டும். இது ஆல்-ரவுண்டர்களுக்கு மிகப்பெரிய சாதகமாக அமைகிறது.

50 ரன்கள் அடித்தால் 'ரிட்டயர்ட் நாட் அவுட்': பேட்டிங் செய்யும் போது ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் 50 ரன்களை எட்டினால், அவர் கட்டாயமாக ஓய்வு பெற (Retire 'not out') வேண்டும். ஒருவேளை அணியின் மற்ற அனைத்து விக்கெட்டுகளும் வீழ்ந்துவிட்டால், ஓய்வு பெற்ற பேட்ஸ்மேன் மீண்டும் களமிறங்கி விளையாடலாம்.

கடைசி நபர் ஆட்டம் (Last Man Standing): ஒரு அணியில் 5 விக்கெட்டுகளும் வீழ்ந்தாலும் ஆட்டம் முடிவுக்கு வராது. கடைசியாக இருக்கும் ஒரே ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து பேட்டிங் செய்யலாம். அப்போது அவுட் ஆன 5-வது பேட்ஸ்மேன் ரன்னராக (Runner) மட்டுமே செயல்பட முடியும். இறுதி விக்கெட்டும் வீழ்ந்தால் மட்டுமே அந்த அணி ஆல்-அவுட் ஆனதாகக் கருதப்படும்.

எக்ஸ்ட்ரா ரன்கள் அபராதம்: இந்தத் தொடரில் பந்துவீச்சாளர்கள் வைடு அல்லது நோ-பால் வீசினால், பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதலாக 2 ரன்கள் அபராதமாக வழங்கப்படும்.

இம்முறை 2026 ஹாங்காங் சிக்ஸஸ் தொடர், அக்டோபர் 30 முதல் நவம்பர் 2 வரை ஹாங்காங்கின் டின் குவாங் சாலை பொழுதுபோக்கு மைதானத்தில் (Tin Kwong Road Recreation Ground) நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 12 சர்வதேச அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் இந்தியா சார்பில் இந்த முறை புவனேஸ்வர் குமார் தலைமையிலான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங் சிக்ஸஸ் தொடருக்கான இந்திய அணி: புவனேஸ்வர் குமார், க்ருனால் பாண்டியா, ஷஷாங்க் சிங், ராகுல் திவேதியா, நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, டி. நடராஜன்