இணைய மோசடி: மெட்டா & சிங்கப்பூர் காவல்துறை அதிரடி
சிங்கப்பூர் காவல்துறையுடன் இணைந்து மேற்கொண்ட தீவிர புலனாய்வுகளால், சமூக ஊடகங்களில் இயங்கிவந்த 3.7 மில்லியனுக்கும் அதிகமான போலிக் கணக்குகள், இணையப்பக்கங்கள்மீது மெட்டா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தனித்தனிக் கணக்குகளை நீக்குவதற்குப் பதிலாக, மோசடிக் கும்பல்களின் முழுக் கட்டமைப்பையும் வேரோடு அழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஈராண்டுகளாக மெட்டாவும் சிங்கப்பூர் காவல்துறையும் இணைந்து இணையக் குற்றங்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன.
காவல்துறை - மெட்டா கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி
காவல்துறை வழங்கும் தகவல்கள் மெட்டாவின் புலனாய்வுக்கு உதவுகின்றன. அவ்வகையில், இந்த ஆண்டில் மட்டும், காவல்துறை அளித்த துல்லியமான தகவல்களின் அடிப்படையில் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராமில் இயங்கிய 113,000க்கும் மேற்பட்ட மோசடிப் பக்கங்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.
காவல்துறை பகிர்ந்த ஒவ்வொரு தகவலுக்கும் ஐந்து மடங்கு கூடுதல் மோசடிப் பக்கங்களை மெட்டா கண்டறிந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை, அதிக லாபம் தருவதாக ஆசை காட்டும் போலி முதலீட்டுத் திட்டங்களாகும்.
அதேபோல, மெட்டா வழங்கிய தகவல்களின் அடிப்படையில், 2025ல் எல்லை கடந்த சட்டவிரோத இணையச் சூதாட்ட மோசடியில் தொடர்புடைய ஏழு பேரைக் காவல்துறை கைது செய்தது. குறிப்பாக, பள்ளி விடுமுறைக் காலத்தைக் குறிவைத்து போலியான விளம்பரங்கள் மூலம் பொருள்களை விற்க முயன்றதும் இந்நடவடிக்கையின்போது வெளிச்சத்துக்கு வந்தது.
இதன் விளைவாக 33,600க்கும் அதிகமான இணைய வணிகக் (இ-கமர்ஸ்) கணக்குகளும் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல நிறுவனங்களின் பெயரில் போலித் தள்ளுபடி, அவசர விற்பனை என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்ற முயன்ற பக்கங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்கூட்டியே முறியடிக்கப்பட்ட சதி
மேலும், ஜூலை 2026ல் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையாக 3.6 மில்லியன் ‘ஷெல்’ பக்கங்கள் நீக்கப்பட்டன. இவை வெளிப்பார்வைக்கு வெறுமையாகத் தெரிந்தாலும், எதிர்கால மோசடிகளுக்காக முன்கூட்டியே தயார் செய்யப்பட்ட கட்டமைப்புகள் ஆகும்.
இப்படி எதிர்காலத்தில் மோசடிகளுக்குப் பயன்படுத்துவதற்காக காலியாக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த அந்த மில்லியன்கணக்கான போலிப் பக்கங்களைக் குற்றவாளிகள் பயன்படுத்தி பொதுமக்களை மோசடி செய்வதற்கு முன்பாகவே ஜூலையில் மெட்டா நிறுவனம் கண்டறிந்து அதனை நீக்கியது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
மெட்டா நிறுவனம் இந்த ஆண்டில் இதுவரை 65 மில்லியன் போலி விளம்பரங்களை நீக்கியுள்ள நிலையில், அவற்றில் 94 விழுக்காட்டு விளம்பரங்கள், பயனீட்டாளர்கள் புகார் செய்வதற்கு முன்பதாகவே தானாகவே கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.
இதன் தொடர்பில் கருத்துரைத்த ஆசிய-பசிபிக் வட்டார சட்ட அமலாக்கத் தொடர்பு இயக்குநர் டேரல் பூன், ‘‘மோசடிக்காரர்கள் தங்கள் முழுப் பின்னணியை யாராலும் பார்க்க முடியாது என்று நினைக்கின்றனர். ஆனால், காவல்துறையுடனான கூட்டணி அந்த நம்பிக்கையைத் தலைகீழாக மாற்றியுள்ளது,’’ என்றார்.
காவல்துறை இணையத் தளபத்தியத்தின் தளபதியும் மூத்த உதவி ஆணையருமான ஜஸ்டின் வோங், ‘‘இந்த நடவடிக்கை காவல்துறை - தனியார் துறை ஒத்துழைப்பின் ஆற்றலை நிரூபித்துள்ளது. கட்டமைப்பு தீர்க்கமாக தகர்க்கப்பட்டு, பொதுமக்களை ஏமாற்றும் வேலை முடக்கப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.