📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 17, 2026 08:06 PM

“எங்களை விட்ருங்க”.. மும்பை இந்தியன்ஸ் ஆஃபரை நிராகரித்த ராகுல் டிராவிட், ஆடம் கில்கிறிஸ்ட்!

“எங்களை விட்ருங்க”.. மும்பை இந்தியன்ஸ் ஆஃபரை நிராகரித்த ராகுல் டிராவிட், ஆடம் கில்கிறிஸ்ட்!

“எங்களை விட்ருங்க”.. மும்பை இந்தியன்ஸ் ஆஃபரை நிராகரித்த ராகுல் டிராவிட், ஆடம் கில்கிறிஸ்ட்!

மும்பை: 2027 ஐபிஎல் தொடருக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து மகிளா ஜெயவர்தனே விலகியதைத் தொடர்ந்து, புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேடும் வேட்டையில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆனால் அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே தொடர் ஏமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் மும்பை அணியின் பயிற்சியாளர் பதவியை அதிரடியாக நிராகரித்துள்ளனர். மேலும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கனும் இந்தப் பதவிக்கு வர விருப்பமில்லை எனத் தெரிவித்துவிட்டார்.

இந்திய அணிக்கு 2024 டி20 உலகக் கோப்பையை வென்று தந்த ராகுல் டிராவிட், தனது குடும்பத்துடன் முழுமையாக நேரம் செலவிடவே விரும்புகிறார். குறிப்பாக, அண்மையில் 100 பந்துகளில் 151 ரன்கள் விளாசி உள்ளூர் கிரிக்கெட்டில் கலக்கிய மகன் அன்வே மற்றும் மூத்த மகன் சமித் ஆகியோரின் கிரிக்கெட் வாழ்வில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விலகிய டிராவிட், 2027 ஐபிஎல் தொடரில் எந்தப் பொறுப்பையும் ஏற்கப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளார். ஒருவேளை 2028-ல் அவர் ஐபிஎல்லுக்குத் திரும்ப வாய்ப்புள்ளது.

முன்னணி பயிற்சியாளர்கள் மறுத்துவிட்டதால், சிஎஸ்கே அணியிலிருந்து சமீபத்தில் விலகிய மைக் ஹஸ்ஸி மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் ஆகியோர் இந்த பந்தயத்தில் முன்னிலையில் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் எஸ்ஏ20 தொடரில் சன்ரைசர்ஸ் அணியை 4 சீசன்களில் 3 முறை சாம்பியன் ஆக்கிய பயிற்சியாளர் அட்ரியன் பிர்ரெல் பெயரும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அவரும் ஐபிஎல் வரத் தயக்கம் காட்டியுள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவின் மைக் ஹஸ்ஸி அல்லது ஆரோன் பின்ச் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதனிடையே, புதிய தலைமைப் பயிற்சியாளர் தேர்வு செய்யப்பட்ட பின்னரே தற்போதைய உதவிப் பயிற்சியாளர்களின் நிலைமை முடிவாகும் எனத் தெரிகிறது. ஒப்பந்தக் காலம் முடிவடைய உள்ளதால் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட், பந்துவீச்சு பயிற்சியாளர்கள் லசித் மலிங்கா மற்றும் பராஸ் மாம்ப்ரே, ஃபீல்டிங் பயிற்சியாளர் கார்ல் ஹாப்கின்சன் ஆகியோரின் பதவியும் அந்தரத்தில் தொங்குகிறது. 5 முறை கோப்பை வென்ற மும்பை அணி புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகிறது.