சிங்கப்பூரில் பிறந்த முதல் வரிச்சிவிங்கி: வனவிலங்கு அதிசயம
மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் உள்ள ‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் அட்வென்ச்சரில்’ ஜூலை 27ஆம் தேதி வரிச்சிவிங்கி பிறந்தது.
சிங்கப்பூரிலும் தென்கிழக்கு ஆசிய வட்டாரத்திலும் பிறந்த முதல் வரிச்சிவிங்கிக் குட்டி இதுதான்.
ஏழு வயது வரிச்சிவிங்கியான கிசாலாவுக்கும் நான்கு வயது வரிச்சிவிங்கியான சாண்டருக்கும் பிறந்த அந்த ஆண் குட்டி தற்போது 48 கிலோ எடை கொண்டுள்ளது.
கிசாலாவும் சாண்டரும் முதல் முறையாகப் பெற்றோர் ஆனதாக மண்டாய் வனவிலங்கு காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் அட்வென்ச்சர் ஈஸ்ட்டில் உள்ள ஹிடன் ஃபாரஸ்ட்டில் (Hidden Forest) தாயுடன் குட்டி வைக்கப்பட்டுள்ளது.
“அண்மையில் தாய்க்கும் குட்டிக்கும் வெளிப்புற வாழ்விடத்திற்குப் பழக வாய்ப்பு வழங்கினோம், ஆனால் குட்டி அதன் புதிய சூழலுக்குப் பழகிக்கொள்ள இன்னும் நேரம் எடுத்துக்கொள்கிறது,” என்று மண்டாயின் விலங்குப் பராமரிப்புப் பிரிவின் கண்காணிப்பாளர் சிசிலியா டாங் கூறினார்.
வரிச்சிவிங்கி குட்டி பார்வையாளர்கள் பார்க்க அனுமதி இல்லாத குகைக்குள் வாழ்கிறது. அதனா, அதைப் பார்க்க விரும்பும் பார்வையாளர்களுக்காகச் சிறிய திரை ஒன்று தற்போது வைக்கப்பட்டுள்ளது.
வரிச்சிவிங்கி இனத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புவோர் பூங்காவில் நாள்தோறும் காலை 10.30 மணிக்கும் பிற்பகல் 3 மணிக்கும் நடைபெறும் வரிச்சிவிங்கி உரையாடலில் கலந்துகொள்ளலாம்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
ஒட்டகச்சிவிங்கியுடன் நெருங்கிய தொடர்புடைய வரிச்சிவிங்கி அரிதாகவே கண்களில் படும் இனமாக உள்ளது. அது காங்கோ நாட்டை பூர்விகமாகக் கொண்டது.
இவை அழிந்துவரும் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் உலக அளவில் ஒரு சில வனவிலங்குத் தோட்டங்களில் மட்டுமே பராமரிக்கப்படுகின்றன.