சிங்கப்பூரில் கள்ளச் சிகரெட் கடத்தல்: ஐவர் கைது
சிங்கப்பூரின் மரினா சவுத் கப்பல் துறையில் தீர்வைச் செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்தியதாக நம்பப்படும் ஆடவர் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இம்மாதம் 13ஆம் தேதி கைதான அவர்கள், 30லிருந்து 47 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
சிங்கப்பூர்க் காவல்துறை, சிங்கப்பூர்ச் சுங்கத்துறை அதுகுறித்து வியாழக்கிழமை (அக்டோபர் 15) கூட்டறிக்கை வெளியிட்டது.
கடலோரப் காவல்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கள்ள சிகரெட்டுகளைப் கப்பலிலிருந்து கரைக்குக் கொண்டு வருவதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
கரையிலேயே வைத்து 44 வயது இந்தோனீசிய ஆடவர் கைதானார்.
கப்பல் துறையில் அணைந்திருந்த சிங்கப்பூர்க் கொடி ஏந்திய கப்பலிலிருந்து 30 வயதுக்கும் 36 வயதுக்கும் இடைப்பட்ட இந்தோனீசிய ஆடவர் மூவரையும் அவர்கள் மடக்கிப் பிடித்தனர்.
ஐந்தாவதாகப் பிடிபட்ட ஆடவர் 47 வயது சிங்கப்பூரர். அவர், கள்ளச் சிகரெட்டுகளைக் கரைக்குக் கொண்டுவந்ததில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையில் 238 பெட்டிகளிலிலும் 120 பொட்டலங்களிலும் உள்ள கள்ளச் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சம்பவத்தில் ஈடுபட்ட கப்பல் விசாரணைக்காகப் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.