📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 08, 2026 05:03 PM

சிங்கப்பூரில் அரசியலுக்கு திறனாளர்களை ஈர்ப்பது கடினம்

சிங்கப்பூரில் அரசியலுக்கு திறனாளர்களை ஈர்ப்பது கடினம்

சிங்கப்பூரின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தகுதியான தலைவர்களை அரசியலுக்குள் கொண்டுவருவது மிகவும் கடினமாகி வருவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் பதவி வகிப்போர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரின் சம்பள மறுஆய்வு குறித்த பரிந்துரைகள் தொடர்பிலான அமைச்சர்நிலை அறிக்கையை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த திரு வோங், நாட்டின் தலைமைத்துவத்தைப் புதுப்பிப்பது தமது நிர்வாகத்தின் முதன்மை முன்னுரிமைகளில் ஒன்று என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தனியார் துறையில் இருந்து திறமையான தலைவர்களை அமைச்சரவைக்குக் கொண்டுவருவது எவ்வளவு கடினமானது என்பதை முன்னாள் பிரதமர் லீ சியன் லூங்குடன் இணைந்து பணியாற்றியபோதே நேரில் கண்டதாக திரு வோங் கூறினார்.

2004ஆம் ஆண்டு முதல் திரு லீயுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய அவர், “2011ல் அவர் என்னை அரசியலுக்கு வருமாறு அழைத்தபோது, நான் ஒப்புக்கொண்டதற்கு இதுவும் ஒரு காரணம்” என்று அவையில் குறிப்பிட்டார்.

நாட்டின் நிர்வாகச் சேவைகளிலும் தனியார் துறையிலும் சம்பளம் தொடர்ந்து உயர்ந்து வரும் வேளையில், அரசியல் பதவி வகிப்போர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் ஒரே நிலையிலேயே நீடித்து வருவதை குறிப்பிட்ட அவர், இந்தச் சம்பளத் தேக்கநிலை, தகுதியான புதிய முகங்களை அரசியலை நோக்கி ஈர்க்கும் பணியை மேலும் சவாலானதாக மாற்றியுள்ளது என்றார்.

2025 பொதுத்தேர்தலுக்கு முன்னர், மூத்த நிரந்தரச் செயலாளர்கள் பலரை அரசியலுக்கு வருமாறு அணுகியதாகவும், ஆனால் அவர்கள் யாரும் முன்வரவில்லை என்று திரு வோங் நினைவுகூர்ந்தார்.

“இருப்பினும், போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், கலாசார, சமூக இளையர்துறை அமைச்சர் டேவிட் நியோ, மனிதவளத் தற்காலிக அமைச்சர் ஜாஸ்மின் லாவ் ஆகிய இளம் அதிகாரிகளை அரசியலுக்கு கொண்டுவர முடிந்தது. ஆனால் தலைமை மாற்றத்திற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது,” என்றும் அவர் விவரித்தார் .

தமது அமைச்சரவையின் மிகவும் அனுபவம் வாய்ந்த மூத்த அங்கத்தினர்களாகத் துணைப் பிரதமர் கான் கிம் யோங், மூத்த அமைச்சர் கா. சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் அடுத்த அரசுப் பதவிக் காலத்திற்குள் 70 வயதைக் கடந்து விடுவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டின் நிர்வாகத்தின் வலிமைக்கும் அரசாங்கத்தின் நன்மைக்கும் அடுத்த தலைமுறையினர் பொறுப்புகளைக் கையில் எடுப்பது இன்றியமையாதது என்றும் வலியுறுத்தினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

திறமையான சிங்கப்பூரர்களை அரசியலுக்கு ஈர்ப்பது எளிதானதல்ல என்று கூறிய திரு வோங், தனியார் துறை மற்றும் பொதுச்சேவை ஊதியத்திற்கும் அரசியல் ஊதியத்திற்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரிக்கும் போது, திறமையாளர்களை ஈர்ப்பது மேலும் கடினமாகும் என்றார்.

அமைச்சரவைகளுக்கெனத் தனியார் துறையிலிருந்து அனுபவமிக்கத் தலைவர்களை ஈர்ப்பது நீண்டகாலமாகவே சவாலாக உள்ளதாக குறிப்பிட்ட அவர்,” தனியார் துறையில் பெரும் வெற்றிபெற்ற நிலையைத் துறந்து, வருமானத்தில் பெரிய இழப்பை ஏற்றுக்கொண்டு, எவ்வித உத்தரவாதமும் இல்லாத தேர்தல் களத்தில் இறங்குவது எளிதான முடிவல்ல. இந்தத் தியாகம் நிதி சார்ந்தது மட்டுமல்ல, குடும்ப அமைதியையும் உள்ளடக்கியது,” என்று குறிப்பிட்டார்.

அரசுச் சேவையிலிருந்து மட்டும் தலைவர்களை உருவாக்க முடியாது. வணிகம் மற்றும் பெரிய நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் கொண்டவர்கள் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும், எனவும் குறிப்பிட்ட பிரதமர், தனியார் துறையிலிருந்து தற்போது வர்த்தக தொழில்துறை அமைச்சராக இருக்கும் டாக்டர் டான் சீ லெங்கின் பங்களிப்பை உதாரணமாகக் மேற்கோள் காட்டினார்.

அரசியல்வாதிகளின் சம்பளம் உயர்த்தப்பட்டாலும், அது தனியார் துறை அளவுக்கு இருக்காது என்பதைத் தெளிவுப்படுத்திய திரு வோங், தகுதியான நபர்களைத் தொடர்ந்து அணுகி நாட்டின் தலைமைத்துவத்தைப் பலப்படுத்துவது முக்கியம்; அப்பணி தொடரும் என்றும் உறுதியளித்துள்ளார்.