சிங்கப்பூர் புகைமூட்டம்: காற்று சுத்திகரிப்பான், குளிர்சாதனப் பெட்டி விற்பனை அதிகரிப்பு
சிங்கப்பூரில் தொடர்ந்து நிலவிவரும் புகைமூட்டச் சூழலுக்கு இடையே, அண்மைய வாரங்களில் காற்றுச் சுத்திகரிப்பான்கள், குளிர்சாதனப் பெட்டிகளின் விற்பனை பேரளவில் அதிகரித்துள்ளதாக உள்ளூர் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில், நாட்டில் என்95 முகக்கவசங்களின் இருப்பு போதுமான அளவில் உள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் காற்றுச் சுத்திகரிப்பான்களின் விற்பனை 600 விழுக்காடும் குளிர்சாதனப் பெட்டிகளின் விற்பனை 50 விழுக்காடும் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அறையின் பரப்பளவு, வடிகட்டியின் ஆயுட்காலம், மாற்ற வேண்டிய கால இடைவெளி, மின்சாரச் சிக்கனம் மற்றும் பன்முகச் செயல்பாட்டு வசதிகள் குறித்து வாடிக்கையாளர்கள் அதிகளவில் விசாரித்து வருவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தனது 12 கடைகளிலும் இணையத்தளத்திலும் போதுமான கையிருப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மற்றொரு பிரபல சில்லறை விற்பனை நிறுவனமான ‘கெயின் சிட்டி’, புகைமூட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து காற்றுச் சுத்திகரிப்பான்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது.
குறிப்பாக, அக்டோபர் 9ஆம் தேதி முதல் விற்பனை பேரளவு கூடியுள்ளது. ஆகஸ்ட் மாதம் புகைமூட்டம் தொடங்கியது முதலே விற்பனை உயர்ந்து வந்த நிலையில், தற்போது அது ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது.
இணையவழி விற்பனை நன்றாக இருந்தபோதிலும், விநியோகத்துக்குக் காத்திருப்பதைத் தவிர்க்க வாடிக்கையாளர்கள் நேரடியாகக் கடைகளுக்கு வந்து வாங்கிச் செல்வதாகவும் அக்டோபர் 10, 11 வாரயிறுதி நாள்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சாதனங்களையும் வாடிக்கையாளர்கள் உடனடியாக வாங்கிச் சென்றதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
$100 முதல் $1,000க்கும் அதிகமான விலையிலான காற்றுச் சுத்திகரிப்பான்களைக் கெயின் சிட்டி விற்பனை செய்து வந்தாலும், $199 முதல் $499 வரையிலான மாதிரிகளே அதிக அளவில் விற்பனையாகின்றன.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அத்துடன், காற்றுச் சுத்திகரிப்புத் திறன் கொண்ட மின்விசிறிகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அக்டோபர் 9ஆம் தேதி இரவு சிங்கப்பூரின் 24 மணிநேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையை அடைந்தது.