📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology September 21, 2026 03:04 PM

‘சிக்கி’யை வழிநடத்த மீண்டும் பிரதீப் மேனன்

‘சிக்கி’யை வழிநடத்த மீண்டும் பிரதீப் மேனன்

செய்தி: வெங்கா சுப்ரமணியம், தமிழாக்கம்: ஃபாத்திமா மரியாம்

சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபையின் (சிக்கி) தலைமை நிர்வாக அதிகாரியாகத் திரு பிரதீப் கே.மேனன் இவ்வாண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி பொறுப்பேற்றபோது, அவர் தமக்கு நன்கு அறிமுகமான சூழலுக்குள் மீண்டும் காலடி எடுத்துவைத்தார்.

ஆனால், உலகப் பொருளியல் சூழ்நிலை பெரிதும் மாற்றம் கண்டுள்ளது. ஏற்கெனவே 2003 முதல் 2010 வரை ‘சிக்கி’யின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் சேவையாற்றிய திரு பிரதீப், தமது இரண்டாம் பதவிக் காலத்தில் அதிக அனுபவத்தையும் ஒரு புதிய வரைவுத்திட்டத்தையும் கொண்டுவந்துள்ளார்.

உள்ளூர் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவது, சந்தைகளை அணுகுவது போன்ற வழக்கமான செயல்பாட்டுச் சிக்கல்கள் தொடர்ந்து நிலவும் வேளையில், வேகமாக மாறிவரும் இன்றைய வணிகச் சூழலுக்குப் புதிய மனப்போக்கு தேவைப்படுவதை அவர் சுட்டினார்.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ), மின்னிலக்க மாற்றங்கள் ஆகியவையே இந்தச் சவால்களில் முதன்மையானவை.

“ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழில்நுட்பம் இருந்துள்ளது. ஆனால், இன்று நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், அது எவ்வளவு வேகமாக மாறுகிறது என்பதுதான்,” என்று திரு பிரதீப், ‘தப்லா!’ இதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலின்போது பகிர்ந்துகொண்டார்.

“தற்போதைய தொழில்நுட்பத்தின் நிலையை நாம் புரிந்துகொள்வதற்கு முன்பாகவே, அது மேலும் சிக்கலான மற்றொரு நிலைக்கு மாறிவிடுகிறது.

“பிழைப்பதைத் தாண்டி, உற்பத்தித்திறனுக்கான ஒரு கருவியாகவும் சந்தைப் பங்கையும் போட்டித்தன்மையையும் அதிகரிப்பதற்கான ஒரு சாதகமான அம்சமாகவும் வழக்கமான வணிக எல்லைகளைத் தாண்டிச் செல்வதற்கான வழியாகவும் நிறுவனங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ‘சிக்கி’ கவனம் செலுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

‘ஏஐ’ கவலைகளைக் கடந்து செயல்படுதல்

உள்ளூர் சிறிய, நடுத்தர நிறுவனங்களை அச்சத்திலிருந்து தொழில்நுட்பப் பயன்பாட்டை நோக்கி மாற்ற, ‘சிக்கி’ பல செய்முறைத் தொழில்நுட்ப முயற்சிகளைத் தொடங்குகிறது.

பங்கேற்பாளர்களுக்கு ஊக்கமளித்தாலும் தகுந்த செயலாக்க வழிகளைக் காட்டாத கருத்தரங்குகளைத் தவிர்த்து, தொழில்நுட்பம் தொடர்பான கட்டமைக்கப்பட்ட வணிகப் பயிலரங்குகளை ‘சிக்கி’ அறிமுகப்படுத்துவதாகத் திரு பிரதீப் கூறினார்.

இத்திட்டத்தின்கீழ், விளம்பரம், மனிதவளம், நிதி நிர்வாகம் போன்றவற்றில் உள்ள உண்மையான செயல்பாட்டுச் சவால்களை ஆராய்ந்து, ஏஐ சார்ந்த தீர்வுகளைச் சோதித்துப் பார்க்க, உறுப்பினர்கள் முக்கிய அதிகாரிகளை அனுப்பலாம்.

நிதித் தடைகளை அகற்றுவதற்காக, அடிப்படைப் பயிற்சிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். மேலும், மேம்பட்ட பயிற்சிகள் குறைந்த கட்டணத்தில் கிடைக்கப்பெறும்.

இந்தியாவின் வளர்ச்சியைச் சாதகமாக்கிக்கொள்ளுதல்

உள்நாட்டுத் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு அப்பால், ‘சிக்கி’யின் உத்திபூர்வத் திட்டவரைவின் முக்கியக் கவனம், குறிப்பாக, இந்தியாவின் வளர்ந்துவரும் பொருளியலுடனான எல்லைகடந்த வணிகத்தை வலுப்படுத்துவதிலேயே உள்ளது.

அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில், இந்திய அரசாங்கத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறைக் கட்டமைப்புகளுடனான தனது தொடர்புகளை ‘சிக்கி’ மேலும் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

சிங்கப்பூரில் தளம் கொண்டுள்ள நிறுவனங்களுக்கான வணிக வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில், தமிழ்நாட்டிலிருந்து தொடங்கி, இந்தியாவின் முக்கிய மாநிலங்களுக்கு இலக்குவைக்கப்பட்ட வர்த்தகப் பயணங்களை அது தற்போது ஒருங்கிணைத்து வருகிறது.

இந்திய நிறுவனங்கள் குறைந்த செலவில் வணிக உற்பத்தித் திறனை மேம்படுத்தும் செறிவான, நடைமுறை நிபுணத்துவத்தைச் சிங்கப்பூரிடமிருந்து எதிர்பார்க்கின்றன; அதே வேளையில், சிங்கப்பூர் வணிகங்களால் இந்தியாவின் பரந்த பயனீட்டாளர் சந்தைகளையும் திறனாளர்களையும் பெற முடிகிறது என்று திரு பிரதீப் கூறினார்.

இளைய தொழில்முனைவர்களைப் பேணிவளர்த்தல்

அடுத்த தலைமுறைத் தொழில்துறைத் தலைவர்களை ஈர்த்து அவர்களுக்கு வழிகாட்டுவது திரு பிரதீப்பின் மற்றோர் எண்ணம்.

வளரும் தொழில்முனைவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், இளைய தொழில்முனைவர்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குமான குறைந்த கட்டணத்திலான ‘இணைப்பு உறுப்பினர்’ நிலைகளை அறிமுகப்படுத்த ‘சிக்கி’ தனது அமைப்பின் விதிகளை ஆய்வு செய்துவருகிறது.

சமூக வேர்களை வலுப்படுத்துதல்

‘சிக்கி’யின் பணியில் வணிக வளர்ச்சி முக்கியப் பங்கை வகித்துள்ளபோதும், சமூக மேம்பாடும் நிறுவனச் சமூகப் பொறுப்பும் அதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தவை.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘இணை’ திட்டத்தின்கீழ், ‘சிக்கி’ வணிக, பொருளியல் அம்சங்களில் தீவிரமாகத் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்துடனும் பிற இந்தியச் சமூக அமைப்புகளுடனும் இணைந்து, 15 முதல் 35 வயது வரையிலான இளையர்க்கு வாழ்க்கைத்தொழில் மீள்திறன், திறமைக்கேற்ற வேலைவாய்ப்பு, நிதி சார்ந்த வலிமை போன்றவற்றை ‘சிக்கி’ மேம்படுத்தி வருகிறது.

“நாங்கள் எங்களுக்கு உள்ள வணிக அனுபவத்தின் மூலம் பங்களிக்கிறோம்,” என்று திரு பிரதீப் குறிப்பிட்டார்.

“வேலைப் பயிற்சித் திட்டங்கள், வாழ்க்கைத்தொழில் வழிகாட்டி முகாம்கள், ஆலோசனைகள் ஆகியவற்றின் மூலம் நமது சமூக உறுப்பினர்களுக்கு நீண்டகால ஆற்றலை உருவாக்க விரும்புகிறோம். நாங்கள் மக்களுக்கு வாழ்க்கைத்தொழிலைத் தேட உதவுவதுடன், மிக முக்கியமாக, நாளைய உலகில், வேலை உருவாக்குபவர்களை வளர்க்க விரும்புகிறோம்,” என்று திரு பிரதீப் கூறினார்.