சேப்பாக்கத்தில் அஸ்வின் உள்பட 3 தமிழக ஜாம்பவான்கள் பெயரில் புதிய ஸ்டாண்டு.. டிஎன்சிஏ முடிவு
சேப்பாக்கத்தில் அஸ்வின் உள்பட 3 தமிழக ஜாம்பவான்கள் பெயரில் புதிய ஸ்டாண்டு.. டிஎன்சிஏ முடிவு
சென்னை: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் மூன்று முக்கிய பார்வையாளர் மாடங்களுக்கு (ஸ்டாண்டுகளுக்கு), தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், எஸ்.வெங்கடராகவன் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் பெயர்களை சூட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் டி20 தொடரின் தொடக்க ஆட்டம், வரும் டிசம்பர் 12 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக பிக் பாஷ் லீக் ஒரு வெளிநாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த பெருமை சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு கிடைத்துள்ளது. அந்த போட்டி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, இந்த மூன்று கிரிக்கெட் ஜாம்பவான்களின் முன்னிலையிலேயே அவர்களின் பெயரிடப்பட்ட புதிய ஸ்டாண்டுகள் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட உள்ளன. ஸ்ரீகாந்த், வெங்கடராகவன் மற்றும் அஸ்வின் தமிழ்நாட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு சென்று பல்வேறு சாதனைகளை செய்துள்ளனர்.
ஸ்ரீகாந்த் 1981 முதல் 1992 வரை இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாடியவர். அந்த காலத்திலேயே அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன இவர், இந்தியா 1983 உலகக்கோப்பையை வென்ற போது இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் அடித்த முக்கிய வீரர் ஆவார். 43 டெஸ்ட் போட்டிகளில் 2,000 ரன்களுக்கு மேலும், 146 ஒருநாள் போட்டிகளில் 4,000 ரன்களுக்கு மேலும் குவித்துள்ளார். 1989 இல் இந்திய கேப்டனாகவும, பின்னர் தேசிய தேர்வு குழுவின் தலைவராகவும் திறம்பட பணியாற்றினார். ஒரு வீரராக உலகக்கோப்பை வென்று கொடுத்த அவர், அடுத்து தேர்வுக் குழு தலைவராக இந்தியா 2011 உலகக்கோப்பை வெல்ல காரணமாக இருந்தார்.
எஸ்.வெங்கடராகவன் 1970களில் உலகையே மிரட்டிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் நால்வர் கூட்டணியில் முக்கிய பந்துவீச்சாளராக விளங்கியவர். 57 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 1975 மற்றும் 1979 ஆகிய முதல் இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணிக்கு கேப்டனாக தலைமை தாங்கினார். கிரிக்கெட்டிற்குப் பிறகு, சர்வதேச அளவில் எலைட் அம்பயராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர். 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர். 37 முறை 5 விக்கெட்டுகளையும், டெஸ்ட் வரலாற்றில் அதிகபட்சமாக 11 முறை தொடர் நாயகன் விருதுகளையும் வென்றுள்ளார்.
அஸ்வின் பந்துவீச்சில் மட்டுமின்றி கீழ்வரிசை பேட்டிங்கிலும் கலக்கி 3,503 ரன்களும், 6 சதங்களும் விளாசியுள்ளார். கிரிக்கெட் உலகில் புதிய பந்துவீச்சு யுக்திகளை புகுத்திய அஸ்வின், கடந்த 2024 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
தமிழக கிரிக்கெட்டிற்கும் இந்திய கிரிக்கெட்டிற்கும் பல பெருமைகளை தேடித்தந்த இந்த மூன்று ஜாம்பவான்களை கவுரவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை கிரிக்கெட் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.