சச்சினின் 4 மெகா உலக சாதனைகளை உடைக்கப் போகும் விராட் கோலி.. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு
சச்சினின் 4 மெகா உலக சாதனைகளை உடைக்கப் போகும் விராட் கோலி.. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு
திருவனந்தபுரம்: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் 4 பிரம்மாண்ட உலக சாதனைகளைத் தகர்க்கும் வாய்ப்பு உள்ளது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சச்சினுக்குப் பிறகு 15,000 ரன்களைக் கடந்த 2-வது வீரர் என்ற இமாலய சாதனையைப் படைக்க விராட் கோலிக்கு வெறும் 59 ரன்கள் மட்டுமே தேவை. இதுவரை 314 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 54 சதங்கள் மற்றும் 79 அரைசதங்களுடன் 14,941 ரன்கள் குவித்துள்ளார்.
அதேபோல், சொந்த மண்ணில் அதிக ஒருநாள் ரன்கள் குவித்த சச்சினின் சாதனையை (6,976 ரன்கள்) முறியடிக்க விராட் கோலிக்கு 110 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. தற்போது கோலி இந்திய மண்ணில் 6,867 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், சொந்த மண்ணில் அதிக சர்வதேச சதங்கள் அடித்த சச்சினின் சாதனையை (42 சதங்கள்) முறியடிக்க கோலிக்கு இன்னும் 2 சதங்கள் தேவை. தற்போது கோலி 41 சதங்களுடன் உள்ளார்.
அதேபோல் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் விளாசிய 60 சதங்கள் உலக சாதனையை முறியடிக்கவும் விராட் கோலிக்கு 2 சதங்கள் தேவைப்படுகின்றன. தற்போது கோலி 59 லிஸ்ட்-ஏ சதங்களுடன் உள்ளார். சர்வதேச அரங்கில் இதுவரை 85 சதங்களை அடித்துள்ள கோலி, தனது 100-வது சதத்தை எட்ட நினைப்பார் என்பதால் இந்த தொடரில் சில சதங்களை அடிக்க வாய்ப்புள்ளது.
திருவனந்தபுரம் மைதானத்தில் இதுவரை 2 போட்டிகளில் ஆடி இருக்கிறார் விராட் கோலி. அந்த 2 போட்டிகளிலும் ஆட்டமிழக்காமல் 199 ரன்கள் (அதிகபட்சம் 166*) விளாசியுள்ள கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மட்டும் 9 சதங்களை அடித்து நொறுக்கியுள்ளார். இதனால் இந்தத் தொடரிலேயே சச்சினின் சாதனைகளை அவர் முறியடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.