📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 08, 2026 10:03 PM

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான தனித்தீர்மானம் பேரவையில் நிறைவேற்றம்

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான தனித்தீர்மானம் பேரவையில் நிறைவேற்றம்

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான தனித்தீர்மானம் பேரவையில் நிறைவேற்றம்

பறையர், பஞ்சமர் ஆகிய சாதிகள் ஆதி திராவிடர் என்ற ஒரே பெயரில் கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.

Published : September 8, 2026 at 9:15 PM IST

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துவங்கப்பட உள்ளது. இந்த சூழலில் ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பில் "திறந்தவெளி பதிவு முறையை" முழுமையாக கைவிட வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் கொண்டு வந்தார்.

அரசின் தனி தீர்மானத்தில் பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிய அரசு, "தமிழ்நாடு அரசின் தனி தீர்மானத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. தற்பொழுது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், அதில் 40 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளது இதில், மக்கள் தாங்களே தங்களது சாதிகளை தெரிவிக்குமாறு அதில் கேட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான சாதிகள் இருப்பதாக கண்டறியப்பட்டு, இதில் சிக்கல் இருப்பதாக கூறி அந்த விவரங்கள் வெளியிடப்படவே இல்லை. அதேபோன்று ஒரு குழப்பத்தை ஏற்படுத்த ஒன்றிய அரசு தற்போது முயல்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரம் தெரிய வருவதால், இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்துமாறு அவர்கள் கேட்பார்கள். இதற்காகத்தான் பாஜக இந்த தந்திரத்தை செய்கிறது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டை கொடுக்கக் கூடாது என்ற கொள்கையை கொண்ட பாஜக, இப்பொழுதும் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை மறுப்பதற்காகவே மக்கள் தொகை கணக்கெடுப்பில் இத்தகைய குழப்ப நிலையை ஏற்படுத்துகிறது.

பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்னென்ன இருக்கிறது என்று மாநில அளவில் பட்டியல் உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தும் பொழுது இந்த பட்டியலை தந்து, அதில் ஒருவர் எந்த சாதியை சேர்ந்தவர் என்பதை தேர்வு செய்யுமாறு கொடுக்க வேண்டும். இந்த முறை "Drop Down" எனப்படும். இவ்வாறு செய்தால்தான் 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட குழப்பத்தை தடுக்க முடியும். இது பாஜகவிற்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவ்வாறு செய்யாமல், ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும், அதனால் எந்த பயனும் இல்லாத நிலைதான் உருவாகும். அதை தவிர்க்கும் போட்டு தான் நமது அரசு, இந்த தனி தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்பில் மற்றொரு சிக்கல் உள்ளது. பிற்படுத்தப்பட்டோர்களுக்கான பட்டியல் மாநில அளவில் ஒன்றும் மத்திய அளவில் ஒன்றும் ஆக இருக்கிறது. மாநில அளவில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் சாதிப் பெயர்கள் மத்திய அளவில் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருப்பதில்லை இரண்டும் வேறுவேறாக உள்ளது. இதனால் பல்வேறு சாதியினர்கள் தங்களுக்கான இட ஒதுக்கீட்டு பயனை பெறுவதில்லை. மாநில ஓபிசி, எம்பிசி பட்டியலில் உள்ள அனைத்து சாதிகளும் ஒன்றிய அரசின் பட்டியலிலும் இடம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதேபோன்று எஸ்.சி பட்டியலில் இடம்பெற்று இருக்கக்கூடிய சில சாதியின் பெயர்கள் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. இந்தப் பெயரை பயன்படுத்தக்கூடாது. தமிழ்நாட்டில் பஞ்சமர், பறையர் என்ற பெயரை நீக்கி விட்டு அதற்கு பதிலாக ஆதி திராவிடர் பெயரை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். இதற்க்கான எந்த நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை. நீதிக்கட்சியின் தொடர்ச்சி என்று சொல்லிக் கொள்ளும் திமுக நீதிக்கட்சி பிறப்பித்த அரசாணையை பின்பற்றவில்லை. இது தொடர்பாக முதல்வர் இந்த கோரிக்கையை பரீலிக்க வேண்டும்.

பறையர், பஞ்சமர் ஆகிய சாதிகள் ஆதி திராவிடர் என்ற ஒரே பெயரில் கணக்கெடுப்பு செய்ய வேண்டும். அதேபோன்று அருந்ததியர் என்ற தொகுப்பின் கீழ் உள்ள ஏழு சாதிகளும் அருந்ததியர் என்ற ஒரே பெயரின் கீழ் அழைக்கப்பட வேண்டும் மற்றும் தேவேந்திர குல வேளாளர் கீழ் உள்ள ஏழு சாதிகளும் தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரிலேயே கணக்கெடுப்பு செய்யும் வகையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

இதனை தொடர்ந்து அரசின் தனி தீர்மானத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உருப்பினர் சி.வி சண்முகம், "பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கோரிக்கையான மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் அரசின் திட்டங்கள் உண்மையாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு போய் சேருவதை தெரிந்து கொள்ள முடியும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: மும்முனைப் போட்டியில் வெற்றிக்கனியை ருசிக்கப் போவது யார்?

இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது ஒரு நிலைப்பாடும் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு நிலைப்பாடும் என அனைத்து கட்சிகளும் வெவ்வேறு நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. சுதந்திரத்துக்கு முன்பு எடுக்கப்பட்டதுதான் முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு. அப்பொழுதைய கணக்கெடுப்பு படி இந்தியாவில் உள்ள ஜாதிகளின் எண்ணிக்கை 4147. இதற்கு பிறகு 2011 இல் உத்தரபிரதேச மாநிலத்தில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவதற்கான முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அதில் செய்த ஒரு பிழை தான் "திறந்தவெளி பதிவு முறை".

அதன்படி மக்கள் தொகை அதிகாரிகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பொழுது உங்கள் ஜாதி என்ன என கேட்பார்கள். திறந்தவெளி பதிவு முறையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால், பல ஜாதி பெயர்கள் வெளிவரும். உதாரணத்திற்கு என்னை கேட்டால் நான் கவுண்டர் ஜாதி என்று கூறுவேன். ஆனால் நான் வன்னிய குல சத்திரியன் ஜாதியை சேர்ந்தவன் என சான்றுகளில் உள்ளது. எங்களது பட்டப்பெயர் கவுண்டர். கடலூரில் உள்ள இதே ஜாதியை சேர்ந்தவர்கள் படையாட்சி என்பார்கள். சென்னையை சேர்ந்தவர்கள் நாயக்கர் என்பார்கள். இவ்வாறு சொல்லப்போனால் இவை அனைத்தும் ஒவ்வொரு ஜாதியாக மாறிவிடும்.

திறந்தவெளி பதிவு முறைப்படி 2011-இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 46.7 லட்சம் ஜாதிகள் கணக்கிடப்பட்டது. அதன்படி இன்றைக்கு எடுக்கப்படும் ஜாதி வாரியான கணக்கெடுப்பில் திறந்தவெளி பதிவு முறைபடி எடுத்தால், ஒரு கோடிக்கும் மேலான ஜாதிகள் வந்துவிடும். ஆகையால் இதன்படி ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்துவிட்டு தேர்தலுக்குப் பிறகு இதை நடைமுறைப்படுத்த முடியாது என 2011-ஐ போன்று ஒன்றிய அரசு தெரிவித்து விடும்.

குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போன்று ஓ.பி.சி என்பது ஜாதியில்லை, அது ஒரு வகுப்பு என்று ஒன்றிய அரசு சொல்லுகிறது. மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தமிழ்நாட்டில் 262 ஜாதிகள் இருக்கிறது. கல்வியில் பின்தங்கிய மக்களின் பட்டியலை எடுத்துத்தான் ஓபிசி பட்டியல். ஆனால் தற்பொழுது அது சாதி இல்லை வகுப்பு என மத்திய அரசு சொல்கிறது. பூவை பூ என்றும் சொல்லலாம் புஸ்பம் என்றும் சொல்லலாம் என கவுண்டமணி காமெடியை போன்று ஒன்றிய அரசு சொல்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு எடுப்போம் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமான பட்டியல் இன்னும் வரவில்லை. இந்தியா முழுவதிலும் இருந்து அழுத்தம் வருவதன் காரணமாகவே ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்துவதாக ஒன்றிய அரசு சொல்கிறது. சாதி வாரியான கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை. தேர்தல் காரணமாக மத்திய அரசாங்கம் இன்று சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க இறங்கி வந்திருக்கிறது.

ஆகையால் Drop Down" முறையில் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இல்லையென்றால் ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடைமுறைக்கு வராது. ஓபிசி-க்கு மட்டும் ஏன் மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டுகிறது? 27% இட ஒதுக்கிடையே மத்திய அரசு முழுவதுமாக அமல்படுத்தவில்லை. பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கப்படும் சலுகைகள் முழுவதுமாக கிடைக்க பெறுவது இல்லை" என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "தமிழ்நாட்டின் மாநில பட்டியல்படி பி.சி 140 ஜாதிகள், எ.ம்பி.சி 47, பி.சி.எம் 7, டி.எம்.சி 68, எஸ்.சி, எஸ்.டி 108 ஜாதிகள் என மொத்தம் 370 ஜாதிகள் உள்ளது. இதுவே மத்திய பட்டியலில், ஓ.பி.சி 182, எஸ்.சி 108 என மொத்தம் 290 ஜாதிகள் தான் உள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகள் ஒன்று சேர்ந்து, பி.சி எம்.பி.சி சாதிகளை மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலுக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டிய இடத்தில் ஒன்றிய அரசு இன்று இருக்கிறது.

370 சாதிகளின் ஒட்டுமொத்த உட்கட்டமைப்புகளையும், சாதிவரி கணக்கெடுப்பின் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்ந்து நடத்த வேண்டும். இதுதான் தீர்மானத்தின் முதல் கோரிக்கை. எந்தெந்த சாதிகளில், பெண்கள் கல்வி அறிவு இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும்.

அதேபோன்று வறுமை கோட்டிற்கு கீழ் எத்தனை பேர் இருக்கிறார்கள், மக்கள் தொகையில் எந்தெந்த சாதிகள் அதிகமாக இருக்கிறது, இந்த கணக்கெடுப்பை நடத்தாமல் 1931 இல் செய்யப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு கொள்கையில் உருவாக்கி வருகிறோம். Drop down முறையில் சரியான மென்பொருள் மூலமாக, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என ஒன்றிய அரசு வலியுறுத்தி இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது" என்றார்.

இதனைத் தொடர்ந்து அரசினர் தனி தீர்மானம் பேரவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அதிகப்படியான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.