📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 07, 2026 09:03 PM

அரிசி, பருப்பு விலை உயர்வு: மாதாந்திர பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் மக்கள் அவதி!

அரிசி, பருப்பு விலை உயர்வு: மாதாந்திர பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் மக்கள் அவதி!

அரிசி, பருப்பு விலை உயர்வு: மாதாந்திர பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் மக்கள் அவதி!

சென்னை: தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்களது மாதாந்திர குடும்ப பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்தது, உற்பத்தி சரிவு மற்றும் அரிசி ஆலைகளின் கூடுதல் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, மொத்த விற்பனைக் கடைகளில் ஒரு மூட்டை அரிசியின் விலை ரூ.300 முதல் ரூ.600 வரை உயர்ந்துள்ளது. ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 26 கிலோ எடை கொண்ட டீலக்ஸ் பொன்னி அரிசி தற்போது ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பப்பட் பொன்னி அரிசி தற்போது ரூ.1,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.900-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த இட்லி அரிசி தற்போது ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 25 கிலோ எடை கொண்ட சிவாஜி பொன்னி அரிசியின் விலையும் ரூ.800 வரை உயர்ந்து, ரூ.2,400-க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல், கொத்தவால் சாவடி மொத்த விற்பனைக் கடைகளில் பருப்பு மற்றும் சீரகத்தின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ துவரம்பருப்பு ரூ.132-ல் இருந்து ரூ.142 ஆகவும், உளுந்து ரூ.120-ல் இருந்து ரூ.127 ஆகவும், ரூ.88-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கடலைப்பருப்பு ரூ.93 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுபோன்று பாசிப்பருப்பு மற்றும் சீரகத்தின் விலையும் அதிகரித்துள்ளது. மொத்த விலையை விட சில்லறைக் கடைகளில் ஒரு கிலோவுக்கு மேலும் ரூ.10 வரை கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் இந்த விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.