அமெரிக்க ஆய்வறிக்கை குறித்து பொதுச்சேவைப் பிரிவு மறுஆய்வு
அறிவிக்கப்படாத ரயில் நிலையங்களுக்கு அருகில் சிங்கப்பூர் அரசாங்க ஊழியர்கள் அளவுக்கு அதிகமாக வீடுகளை வாங்கியதாகக் கூறப்படும் அமெரிக்க ஆய்வறிக்கை குறித்து சிங்கப்பூர் பொதுச்சேவைப் பிரிவு தீவிர மறுஆய்வு மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ், கேம்பிரிட்ஜில் உள்ள ‘தேசிய பொருளியல் ஆய்வுப் பிரிவு’ எனும் லாப நோக்கமற்ற அமைப்பு திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 14) வெளியிட்ட ஆய்வறிக்கையின் தரவுகள் மற்றும் ஆய்வு முறைகளைத் தாம் ஆராய்ந்து வருவதாகப் பொதுச்சேவைப் பிரிவு தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் ஏதேனும் முறைகேடுகளுக்கான அடிப்படை ஆதாரங்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அது லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு உடனடியாகப் பரிந்துரைக்கப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அரசு அதிகாரிகளின் முறைகேடுகளைத் தடுப்பதில், நேர்மை சார்ந்த சமூக நெறிமுறைகள் முறையான சட்ட அமலாக்கத்துக்குப் பதிலாகச் செயல்பட முடியுமா என்பதை ஆராய்வதே தங்களது முக்கிய நோக்கம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆய்வின் தொடக்கத்தில், மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கின் உறவினரும் பொருளியல் நிபுணருமான லீ ஷெங்வு உட்பட பல பிரமுகர்களுடன் நடத்திய விவாதங்கள் தங்களுக்குப் பெரிதும் உதவியதாக ஆய்வாளர்கள் நன்றியுரையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமித் அகர்வால், ஜெசிகா பான், இவான் பிங், பர்னர்ட் யுவேங் ஆகிய முன்னாள் மற்றும் தற்போதைய கல்வியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வமாகப் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படாத ரயில் நிலையங்களுக்கு அருகில் நடைபெற்ற வீடு வாங்குதல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், ஒரே மாதிரியான மக்கள்தொகை மற்றும் வீட்டுப் பயன்பாட்டுப் பழக்கம் கொண்ட பொதுமக்கள் குழுவுடன் ஒப்பிடும்போது, திட்டமிடப்பட்ட ரயில் நிலையங்களின் அருகில் அரசாங்க ஊழியர்கள் வீடுகளை வாங்கிய தீவிரத் தன்மை மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
குறிப்பாக, ரயில் நிலையங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாவதற்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே இந்த வீடுகள் அதிக அளவில் வாங்கப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
மேலும், ரயில்வே திட்டமிடல் பிரிவுகளுடன் தொடர்புடைய அமைப்புகளில் உள்ள இடைநிலை அதிகாரிகளும் அவர்களின் உறவினர்களும் இந்த வீடுகளை வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. இது ரகசியத் தகவல்கள் கசிந்ததன் விளைவாக இருக்கலாம் என்றும் இதன்மூலம் குறிப்பிடத்தக்க தனிப்பட்ட லாபங்கள் ஈட்டப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், இந்த ஆய்வறிக்கை, வெறும் விவாதம் மற்றும் கருத்துப் பகிர்வுக்காக மட்டுமே சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது என்பதும் இது இன்னும் துறைசார் வல்லுநர்களின் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படவோ அல்லது அறிக்கையை வெளியிட்ட அமைப்பின் இயக்குநர் சபையின் ஆய்வுக்கு உட்படுத்தப்படவோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.