📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 16, 2026 05:33 PM

ஐசிசி டி20 ரேங்க்.. பாகிஸ்தான் வீரரை பின்னுக்குத் தள்ளிய அபிஷேக்.. டாப் 10

ஐசிசி டி20 ரேங்க்.. பாகிஸ்தான் வீரரை பின்னுக்குத் தள்ளிய அபிஷேக்.. டாப் 10

ஐசிசி டி20 ரேங்க்.. பாகிஸ்தான் வீரரை பின்னுக்குத் தள்ளிய அபிஷேக்.. டாப் 10-க்குள் பும்ரா

மும்பை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள (செப்டம்பர் 16) புதிய டி20 தரவரிசைப் பட்டியலில், இந்திய நட்சத்திர வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் அபார முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியதன் மூலம் இவர்கள் தரவரிசையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 7 இடங்கள் முன்னேறி 650 புள்ளிகளுடன் டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 10-வது இடத்தைப் பிடித்து டாப் 10-க்குள் நுழைந்துள்ளார். அதே நேரத்தில், டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் ஆலி ராபின்சன் முன்னேறியதால் பும்ரா ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, பாகிஸ்தானின் சாஹிப்சாதா ஃபர்ஹானை பின்னுக்குத் தள்ளி 862 புள்ளிகளுடன் உலக அளவில் 2-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். முதல் போட்டியில் 32 பந்துகளில் 82 ரன்கள் விளாசியது இவருக்குக் கைகொடுத்துள்ளது. இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 913 புள்ளிகளுடன் தொடர்ந்து உலகின் நம்பர் 1 பேட்டராக ஆதிக்கம் செலுத்துகிறார்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தையும், ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அர்ஷ்தீப் சிங் 11 இடங்கள் எகிறி 14-வது இடத்தையும் பிடித்துள்ளனர். அக்சர் படேல் 27-வது இடத்தைப் பெற்றுள்ளார். பேட்டிங்கில் இந்திய துணை கேப்டன் திலக் வர்மா 8-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் தொடர்ந்து டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன்பாக இந்திய வீரர்கள் ஐசிசி தரவரிசையில் புதிய உச்சங்களைத் தொட்டு வருவது அணிக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது. இந்திய டி20 அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விரைவில் ஜப்பான் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.