📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 11, 2026 10:00 AM

ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள் திட்டம்: யார் யாருக்கு கிடைக்கும்: விபரம் சேகரிக்கிறது அரசு

ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள் திட்டம்: யார் யாருக்கு கிடைக்கும்: விபரம் சேகரிக்கிறது அரசு

சென்னை: தமிழகத்தில் வரும் பொங்கலுக்கு, ஆண்டுக்கு மூன்று இலவச சமையல் காஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு தொடங்க உள்ளது. இதற்காக, சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளவர்களின் விபரங்களை, எண்ணெய் நிறுவனங்களிடம் சேகரிக்கும் பணியில், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலின்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு ஆறு இலவச சிலிண்டர் வழங்கப்படும்' என, த.வெ.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது.

அதன்படி முதல் கட்டமாக, 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டத்தில், ஆண்டுக்கு, மூன்று இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம், 2027 ஜனவரி பொங்கல் திருநாள் அன்று தொடங்கப்பட உள்ளது.

இதற்கான தொகை, பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தால், 1.30 கோடி குடும்பங்கள் பயன் பெறும்.

ஆண்டுக்கு, 2.50 லட்சத்துக்கு உட்பட்டு வருவாய் பெறும் குடும்பத்தினர், சிறு, குறு விவசாயிகள், மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் போன்றவர்கள், இதில் பயன் பெற உள்ளனர்.

வரும் பொங்கல் முதல் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்திற்கு, ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை முதல்வர் விஜய், சட்டசபையில் சமீபத்தில் அறிவித்தார்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், இலவச காஸ் சிலிண்டர் திட்டத்திற்கு பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை, அரசு தொடங்கியுள்ளது.

இதற்காக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம், சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, தமிழக அரசின் நிதித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

'ஆதார்' எண் அடிப்படையில், 2.08 கோடி ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் வாயிலாக, சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளவர்களின் விபரங்கள் உள்ளன. துல்லிய விபரம் தேவைப்படுகிறது.

எனவே, தமிழகத்தில் எத்தனை குடும்பத்தினர், இரண்டு சிலிண்டர், ஒரு சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர்; பிரதமரின் 'உஜ்வாலா' திட்டத்தில் இலவச காஸ் இணைப்பு பெற்றுள்ள பயனாளிகள் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டு உள்ளன.

இலவச சிலிண்டர் திட்டத்திற்கும் ரேஷன் கார்டுதாரர்களிடம் விண்ணப்பம் வழங்கப்பட்டு, தகவல் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் அனைத்தும், 'இ கவர்னன்ஸ்' எனப்படும் மின் ஆளுமை முகமை வாயிலாக சரிபார்க்கப்படும்.

அதன் அடிப்படையில், அரசு விதிக்கும் நிபந்தனைகளுக்கு ஏற்ப, இலவச சிலிண்டர் திட்டத்திற்கு, பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

பொங்கல், தமிழ் புத்தாண்டு, தீபாவளி என, ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் வழங்கவும், அந்த தொகையை, பண்டிகைக்கு முந்தைய நாட்களில், பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.