80ல் கலக்கிய விஜயன்,சுதாகர்...மினிமம் கியாரண்டி ஹீரோக்கள்!
80ல் கலக்கிய விஜயன்,சுதாகர்...மினிமம் கியாரண்டி ஹீரோக்கள்!
80களில் கமல், ரஜினி ஆதிக்கம் இருந்தபோதும், மினிமம் பட்ஜெட் படங்களின் மூலம் தனக்கென ரசிகர் வட்டத்தை உருவாக்கிய விஜயன், சுதாகரின் திரைப்பயணத்தை நினைவுகூரும் பதிவு.
கொஞ்சம் பேச்சு... கொஞ்சம் சினிமா! - வி.ராம்ஜிபெரிய நடிகர்கள், உச்சநடிகர்கள் என்று சொல்கிறோம். அவர்களையும் நாம் ஒருகைக்குள் இருக்கிற விரலைக் கொண்டே எண்ணிவிடலாம். இது மிகப்பெரிய இயக்குநர்களுக்கும் பொருந்தும். தயாரிப்பு நிறுவனங்களையும் இப்படிக் கணக்கிட்டுவிடலாம். சினிமாவை சூதாட்டம் போல் சொல்லுவதற்கு உண்டான காரணமும் இந்தக் கணக்குகளுக்குள்தான் அடங்கியிருக்கின்றன.
ஏகப்பட்ட செலவு, எக்கச்சக்க சம்பளம், தடாலடியான விளம்பரங்கள் செலவுகள், எகிடுதகிடாக போய்க்கொண்டே இருக்கும். இத்தனையும் கடந்து, தியேட்டருக்கு வருவதற்கு தயாரிப்பாளர்கள் எந்த ஜென்மத்திலோ புண்ணியம் செய்திருக்கவேண்டும்! இந்த நிலையெல்லாம் கடந்து, சினிமா எனும் கனவுத்தொழிற்சாலை இன்றைக்கும் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதற்கு மினிமம் பட்ஜெட் படங்களும் தலைக்குப் பின்னே ஒளிவட்டம் இல்லாத நடிகர்களும் இயக்குநர்களுமே காரணம்!இதற்கு எண்பதுகளைத்தான் எடுத்துக்காட்டவேண்டியிருக்கிறது.எண்பதுகளில் எம்ஜிஆர் முதல்வராகிவிட்டார். சிவாஜி நடித்துக்கொண்டே இருந்தார். எம்ஜிஆர் - சிவாஜி காலம் என்பதற்கு அடுத்ததாக கமல் - ரஜினி காலகட்டம் உருவானது. அதேசமயத்தில், கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்து ஹிட்டுகளைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். பிறகு ‘என் வழி தனி வழி’ என்பது போல், ‘நம் வழி தனி வழி’ என்று தனித்தனியே, படங்களைக் கொடுத்தார்கள். ஏவிஎம், தேவர் பிலிம்ஸ், கே,பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ், பஞ்சு அருணாசலத்தின் பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் என பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய நிறுவனங்களுக்கும் படம் பண்ணினார்கள். வெற்றி பெற்றார்கள்; பலரின் வெற்றிக்குக் காரணமாகவும் அமைந்தார்கள். ஹீரோவாக 150 படங்கள் வரை நடித்த ஜெய்சங்கர் வில்லனானார். ஹீரோவாக சில படங்களில் நடித்த ஜெய்கணேஷ், விஜயகுமார் முதலானவர்கள் குணச்சித்திர கேரக்டர்களிலும் வில்லன் ரோலிலும் வந்து கலக்கினார்கள். ஸ்ரீகாந்துக்கு படங்கள் குறைந்தன. நடிகர் முத்துராமன், வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்ட படம் வெளியாவதற்கு முன்பே மரணம் அடைந்தார். சிவகுமார் ஹீரோவாகவும் கேரக்டர் நடிகராகவும் வலம் வந்தார்.இந்த சமயத்தில், கமல், ரஜினிக்கு அடுத்த இடத்திற்கு விஜயகாந்த் வந்தார். சில ஏரியாக்களில் அவர்களையும் கடந்து ஹிட்டுகளைக் கொடுத்தார். புதிய புதிய தயாரிப்பாளர்களை உருவாக்கினார். இயக்குநர்களை அறிமுகப்படுத்தினார். நடிகர் மோகனும் இப்படித்தான். எல்லோரும் சேர்ந்து பார்க்கும்படியான படம், எல்லாப் பாடல்களும் ஹிட்டடித்த படம் என்றெல்லாம் அதிக அளவில் வந்தன. வில்லன் சத்யராஜ், ஹீரோவாக மாறினார். சிவாஜியின் மகன் பிரபு, முத்துராமனின் மகன் கார்த்திக் என பலரும் வந்தார்கள். டைரக்டர் மட்டுமின்றி நடிகராகவும் பாக்யராஜ், டி.ராஜேந்தர் களமிறங்கி, கொடி நாட்டினார்கள். இதேகாலகட்டத்தில், சொல்லப்போனால், எண்பதுகளின் தொடக்கமான 1980ஆம் ஆண்டு, ஒரு சோறு பதமாகப் பார்த்தாலே எண்பதுகள் பொற்காலம் அமர்க்களம் என்பதை உணரமுடியும்! இந்த வரிசையில், நடிகர் விஜயனையும் நடிகர் சுதாகரையும் புறந்தள்ளிவிட முடியாது. விஜயன் கேரளாவில் இருந்து வந்தவர். சுதாகர் ஆந்திரத்தில் இருந்து வந்தவர். இரண்டுபேரையும் தன் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் ஏற்றிவிட்டார் பாரதிராஜா. பரஞ்ஜோதி எனும் கதையின் நாயகனாக சுதாகர்; பட்டாளத்தான் எனும் கதாபாத்திரத்தில் விஜயன். இதில் விஜயனுக்கு கூடுதல் ஸ்பெஷல்... பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். ‘கிழக்கே போகும் ரயில்’, ‘இனிக்கும் இளமை’, ‘நிறம் மாறாத பூக்கள்’ படங்களெல்லாம் வந்த பிறகு, ‘எனக்கு கமல் பிடிக்கும்’, ‘எனக்கு ரஜினிதான் பிடிக்கும்’ என்று சொன்ன பெண்கள் கூட்டம், ‘சுதாகர்தான் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்’ என்றெல்லாம் சுதாகர் குறித்த கனவுகளில் மிதந்தார்கள். அதேபோல், விஜயனின் தலைமுடியும் மேனரிஸமும் கொஞ்சம் பயம் கலந்த காதலுடன் ரசித்தார்கள். இதற்கு ‘பெளர்ணமி நிலவில்’, ‘உதிரிப்பூக்கள்’ மாதிரியான படங்களும் காரணம்!1980ம் ஆண்டில், மட்டும் நடிகர் விஜயன், 11 படங்களில் நடித்தார். அதேபோல், சுதாகர் ஏழு படங்களில் நடித்தார். இதில் முக்கால்வாசிப் படங்கள், மினிமம் பட்ஜெட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்த படங்களாகவும் அமைந்தன.விஜயன் படங்களுக்கும் சுதாகர் படங்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. படம் ரிலீசானதும், ‘விஜயன் படம் வந்துருக்குப்பா’ என்றும் ‘சுதாகர் நடிச்ச படம் வந்துருக்குய்யா’ என்றும் சொல்லி ஆர்வத்துடன் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்தார்கள். இவையெல்லாம் பெரிய பட்ஜெட் படங்களில்லை. மிதமான பட்ஜெட். இதமான கதை. அளவான பொழுதுபோக்கு. மினிமம் கியாரண்டி படங்களாக, முதலுக்கு மோசம் தராத படங்களாக, கணிசமான லாபம் தரும் படங்களாக அமைந்தன. ஆக, யார் வேண்டுமானாலும் படம் எடுக்க முதலீடு செய்யலாம். தயாரிக்கலாம். நடிக்கலாம். லட்சங்கள் கோடியாகக் குவிகிறதோ இல்லையோ... லட்சங்கள் பல லட்சங்களாக கைக்கு வந்து சேருவது உறுதி எனும் நிலை உருவானது.1980ம் ஆண்டில், தேவர் பிலிம்ஸின் ‘அன்புக்கு நான் அடிமை’ படத்தில், ரஜினிக்கு அண்ணனாக, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார் விஜயன். அதேசமயம், ‘ஒளி பிறந்தது’, ‘சுஜாதா’, ‘தனிமரம்’, ‘தெருவிளக்கு’, ‘தைப்பொங்கல்’, ’பெளர்ணமி நிலவில், டி.ராஜேந்தரின் ’வசந்த அழைப்புகள், ’வள்ளிமயில்’, ‘வேலி தாண்டிய வெள்ளாடு’ என்று மாதாமாதம், வாராவாரம் என விஜயன் படங்கள் வந்துகொண்டே இருந்தன. மன உணர்வுகளையும் குடும்ப உறவுகளின் பிக்கல்சிக்கல்களையும் சொன்ன படங்களாக அமைந்தது கூடுதலாக ரசிகர்களைச் சென்று சேர்ந்தது. போதாக்குறைக்கு, விஜயனின் அடர்த்தியான தலைமுடி, அவரின் ஹேர் ஸ்டைல், அவர் கைகளை ஒருமாதிரியாக வைத்துக்கொண்டு நடக்கின்ற விதம், பார்வையில் வில்லத்தனத்தையும் அதேசமயம் கருணையையும் காட்டுகிற லாவகம் என விஜயனை எல்லோருக்கும் பிடித்தது. எங்கள் ஊரில், தணிகாசலம் என்றொரு அண்ணன், விஜயனைப் போலவே ஹேர் ஸ்டைல் வைத்திருந்தார். விஜயனின் ஒவ்வொரு படத்தையும் ஏழெட்டு தடவைக்கும் மேல் பார்த்தார். நானும் கூட ஒருபடம் விடாமல் பார்த்துத்தான் வளர்ந்தேன். முந்திரித்தோப்பில் உட்கார்ந்துகொண்டு, கமலின் நடன அசைவை, ரஜினியின் வேகத்தை, விஜயன் நடக்கிற ஸ்டைலையெல்லாம் செய்துகாட்டி, ஜாலியாக இருப்போம். ‘டேய் சுதாகர் மாதிரி சுதாகர் மாதிரி...’ என்று சொல்லும்போது, விறுவிறுவென ஓடிப்போய், ஒரு துண்டு எடுத்து வருவேன். என் டிராயருக்கு மேலே அந்தத் துண்டு, லுங்கியாகியிருக்கும். முழங்கால் வரை இருப்பது போல் இடுப்பில் கட்டிக்கொண்டு, ’மீன்கொடித்தேரில்’ பாடலைப் பாடி, ஆடி, நடந்து நடித்ததையெல்லாம் கோடி வீட்டு பானுவும் நாலாவது வீட்டு பெண்ணும் (பாவி பாவி... பெயரை எப்படியா மறந்தே?) பார்க்க, இன்னும் குதூகலாகிவிடுவோம். ஒரு குச்சியை உடைத்து, மைக்காக்கி, ‘என்னடி மீனாட்சி நீ சொன்னது என்னாச்சு?’ என்றும் ‘நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம்’ என்றும் எங்களின் கச்சேரிக்கும் ஸ்டாண்ட் அப் காமெடிக்கும் இன்றைய சூப்பர் சிங்கர்ஸெல்லாம் எம்மாத்திரம்? அசத்தப்போவது யாரெல்லாம் நெருங்கக்கூட முடியாது!இதேபோலத்தான் சுதாகர். இவரின் சிறிய மூக்கு, ஏனோ தெரியவில்லை... பெண்களை ரொம்பவே கவர்ந்தது. வித்தியாசமான வகிடு கொண்ட ஸ்டைலும் பலரையும் ஈர்த்தது. அந்தக் காலத்தில் சிவாஜி, கமல், ஜெய்சங்கருக்குப் பிறகு ரஜினி ஸ்டைலுடன் எல்லோரும் முடி வைத்துக்கொண்டிருந்த காலம் வந்த போது, தடக்கென்று வந்து கவனம் ஈர்த்த சுதாகரின் தலைமுடி ஸ்டைலிலும் அவரின் அப்பாவித்தனமான முகத்திலுமாக அவருக்கு ரசிகர்களானார்கள் பலரும். சுதாகர் என்று டைட்டில் பெயர் வரும்போது கைத்தட்டமாட்டார்கள்; விசிலடிக்க மாட்டார்கள். ‘எங்க சுதாகர் படம் வந்திருக்குடா’ என்று கொக்கரிக்கமாட்டார்கள். ஆனாலும் தமிழ் சினிமா உலகில், அட்டகாசமான வேல்யூ கொண்ட நடிகர்களாக சுதாகரும் விஜயனும் வலம் வந்தார்கள்.1980ம் ஆண்டில், நடிகர் சுதாகர், பாரதிராஜாவின் ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். ‘ஆயிரம் வாசல் இதயம்’, ‘எங்க ஊரு ராசாத்தி’, ‘கரும்புவில்’, ‘குருவிக்கூடு’, ‘சின்னச்சின்ன வீடு கட்டி’, ’ருசி கண்ட பூனை’ என ஏழு படங்களில் நடித்தார். இந்த ஏழு படங்களும் நூறுநாள், இருநூறு நாள் என்றெல்லாம் ஓடவில்லை. இன்றைக்கு வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்றுநாள்தான் ரிலீஸ் கொண்டாட்டம். அன்றைக்கு முப்பது நாற்பது நாட்கள் ஓடினாலே அது வெற்றிதான். வசூல்தான். லாபம்தான்! சுதாகரின் ‘பொன்மானைத்தேடி...’ பாடல் இன்றைக்கும் பாப்புலர் லிஸ்ட்டுகளில் இருக்கிறது. ‘மீன்கொடித்தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்’ பாடலும் செம ஹிட்டு.‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் ராதிகாவும் சுதாகரும் அறிமுகமானார்கள். படத்தின் பிரமாண்ட வெற்றியால், இந்த ஜோடி பேசப்பட்டது. பின்னாளில், ‘அலைகள் ஓய்வதில்லை’ ஜோடி கார்த்திக்கும் ராதாவும் எப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்தார்களோ, அதேபோல, 80ம் ஆண்டில் வெளியான பல படங்களில், சுதாகர் - ராதிகா ஜோடியே நடித்தார்கள். அதாவது சிவாஜி - பத்மினி, சிவாஜி -தேவிகா, சிவாஜி - கே.ஆர்.விஜயா, சிவாஜி - சுஜாதா, எம்ஜிஆர் - சரோஜாதேவி,எம்ஜிஆர் - ஜெயலலிதா, எம்ஜிஆர் -மஞ்சுளா, எம்ஜிஆர் - லதா ஜோடிகள் போல், கமல் - ஜெயசித்ரா, கமல் - ஸ்ரீதேவி, கமல் - ஸ்ரீப்ரியா, ரஜினி - ஸ்ரீதேவி, ரஜினி - ஸ்ரீப்ரியா ஜோடிகள் போல், ’சுதாகர் கால்ஷீட்டையும் ராதிகா கால்ஷீட்டையும் எப்படியாவது வாங்கிருவோம். படம் பாதி ஜெயிச்ச மாதிரிதான்’ என்பதுதான் சினிமாக் கணக்கு! கால்குலேஷனும் தப்பாமல் கைகொடுத்தது!இவை அனைத்துமே மிகப்பெரிய வெற்றிப்படங்கள் இல்லைதான். அதேசமயம் படுதோல்வியை இந்தப் படங்கள் சந்திக்கவும் இல்லை. இவை எல்லாமே மினிமம் கியாரண்டி படங்களாக அமைந்தன. தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் லாபத்தைக் கொடுத்தன. கமலும் ரஜினியும் ஹிட் மேல் ஹிட் கொடுத்துக் கொண்டிருந்தாலும் சுதாகரும் விஜயனும் நிறைய படங்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். துரை இயக்கிய ‘பசி’ மாதிரியான படங்களெல்லாம் விஜயனுக்கு வந்தன. சுதாகரை அவருடைய ஆந்திர உலகம் அணைத்துக்கொண்டது. பிறகு வந்த காலகட்டங்களில், தெலுங்கில் காமெடியிலும் கலக்கினார் சுதாகர்! அதேபோல், ’மண்வாசனை’, கேப்டன் நடித்த ‘ரமணா’ என வில்லனாகவும் கலக்கினார் விஜயன்.’சகலகலா வல்லவன்’, ‘முரட்டுக்காளை’ என்று வந்து உலக நாயகனும் சூப்பர் ஸ்டாரும் ராஜ்ஜிய விஸ்தரிப்பில் ஜெயித்த வரலாற்றின் பக்கங்களில், விஜயனும் சுதாகரும் சில பக்கங்களாக, பாராக்களாக இடம்பிடித்து, கவனம் ஈர்த்தார்கள்!