58,000 மின்சிகரெட் பொருள்கள்; இரு கும்பல் தலைவர்களுக்குச் சிறை, அபராதம்
சிங்கப்பூரில் உள்ள இரண்டு கிடங்குகளில் ஏறக்குறைய 58,000 மின்சிகரெட் தொடர்பான பொருள்களைப் பதுக்கி வைத்த இரு கும்பல் தலைவர்களுக்கும் அவர்களில் ஒருவரின் மனைவிக்கும் திங்கட்கிழமை (அக்டோபர் 5) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கும்பல் தலைவர்களில் ஒருவரான 29 வயதான வோங் ஈ வெய், அந்தக் கும்பலில் பணியாற்றியபோது $280,000 வரை வருமானம் ஈட்டினார். அவருக்கு இரண்டு ஆண்டு, ஒரு மாதம் சிறைத்தண்டனையும், $100,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் நான்கு மாதங்கள் சிறையில் இருக்க நேரிடும்.
அந்தக் கும்பலின் உறுப்பினராக இருந்தது, கிடங்குகளில் ஒன்றான லென்டோரில் உள்ள வாடகை வீட்டில் 12,000க்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகளை கைவசம் வைத்திருக்கச் சதித்திட்டம் தீட்டியது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் முன்னதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
2வது கும்பல் தலைவரான 31 வயதான கென்னத் டான் ஹோங் சாங், அந்தக் கும்பலில் இருந்தபோது ஏறக்குறைய $36,000 சம்பாதித்தார். அவருக்கு திங்கட்கிழமை மூன்று ஆண்டு, ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு $36,000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் அவர் மேலும் ஐந்து வாரங்கள் சிறையில் இருக்க நேரிடும்.
அக்குழுவின் உறுப்பினராக இருந்தது, செம்பவாங்கின் கேன்பரா பகுதியில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டைக் கிடங்காகப் பயன்படுத்தி 4,500க்கும் மேற்பட்ட மின்சிகரெட் பொருள்களை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளை டான் ஒப்புக்கொண்டார்.
மலேசியாவில் இருப்பதாகக் கூறப்படும் ‘நோபடி’ என்று மட்டுமே அறியப்பட்ட ஒரு நபரிடமிருந்து இக்கும்பலின் தலைவர்கள் உத்தரவுகளைப் பெற்று செயல்பட்டு வந்தனர்.
இருவரும் கிடங்குகளை நிர்வகித்ததோடு, ‘நோபடி’ ஏற்பாடு செய்தபடி மலேசியாவிலிருந்து மின்சிகரெட் பொருள்கள் விநியோகிக்கப்படுவதையும் ஒருங்கிணைத்தனர்.
கேன்பராவில் சொகுசு அடுக்குமாடி வீட்டை வாடைக்கு எடுத்து அக்குழுவில் இருந்தபோது ஏறக்குறைய $44,000 சம்பாதித்த டானின் மனைவியான 30 வயதான டிஃபானி லிம் ஹும் பெங்கிற்கு அதே நாளில் ஒரு ஆண்டும் ஆறு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அவருக்கு $44,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அந்தத் தொகையைச் செலுத்தத் தவறினால் அவர் மேலும் ஆறு வாரங்கள் சிறையில் இருக்க வேண்டும்.