50 வருஷமா அழிக்க பார்த்தாங்க.. ஜெயிலர் 2 க்ளைமேக்ஸில் ரஜினி தரம்.. விஜய் ரசிகர்களுக்கு மெசேஜ்?
சென்னை: ஜெயிலர் 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. முதல் பாகம் போன்றே இந்தப் பாகத்தையும் ஹிட்டாக கொடுத்திட வேண்டும் என்ற முழு முனைப்பில் இயக்குநர் நெல்சன் உழைத்திருக்கிறார். ரஜினிகாந்த்தும் அதற்கான உழைப்பை கொடுத்திருக்கிறார். அதன் பலனையும் அவர்கள் அனுபவிக்க தொடங்கியிருக்கிறார்கள். நிச்சயம் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்க்காக அவர் மீண்டும் ஜொலிப்பார் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடம் இருக்கிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ஜெயிலர் 2. இந்தப் படத்துக்கு முன்னதாக அவர் நடித்த கூலி மோசமான தோல்வியையும், வேட்டையன் சுமார் வரவேற்பையும் பெற்றன. எனவே இதன் வெற்றி முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இல்லையென்றால், 'பாக்ஸ் ஆஃபிஸ் கிங் விஜய்தான்; அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கிய பிறகு; பெரிய வசூல் செய்யக்கூடிய படங்களை தர எந்த ஹீரோவும் இல்லை' என சொல்வதற்கு விஜய் ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.
ஏன் அப்படி?: அதற்கு காரணம் ரஜினி Vs விஜய் மோதல்தான். படத்தின் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த் காக்கா, கழுகு கதையை சொல்ல; அதில் வரும் காக்கா விஜய் என்று அர்த்தமானது. அதை வைத்து ரஜினியை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்ய தொடங்கினார்கள். அந்த சமயத்தில் விஜய்யும் தன் பங்குக்கு ரஜினி சொன்ன கதைக்கு பதிலடியாக ஒரு கதையை இறக்கிவிட்டார். அது மேற்கொண்டு பற்ற வைத்தது. நிலைமை இப்படி இருக்க விஜய் இப்போது முதலமைச்சரும் ஆகிவிட்டார்.
இந்த இடத்துக்கு ரஜினி வந்திருக்க வேண்டியது என்பது அவரது ரசிகர்களின் கருத்து. இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் விஜய்க்கும், ரஜினிக்கும் மோதல் என்ற பேச்சு எழ சூழ்நிலைகள் அமைந்துகொண்டே இருந்தன. அதையெல்லாம் சேர்த்து ஜெயிலர் 2வில் விஜய் ரசிகர்கள் இறக்கும் போஸ்ட்டுகளையும் பார்க்க முடிகிறது.
எப்படி இருக்கு படம்?: இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் சூப்பர் வரவேற்பை பெற்றிருக்கிறது. முதல் பாதி முழுவதும் நெல்சனின் ஜோக்குகள், யோகிபாபு, நமோவின் பெர்ஃபார்மென்ஸ், ரஜினியின் மாஸ் ப்ளஸ் க்ளாஸ் என செல்லும் திரைக்கதை; அதற்கு குறைவில்லாத அம்சங்களோடு இரண்டாவது பாதியையும் எடுத்து செல்கிறது. ஆங்காங்கே ரஜினியை உச்சபட்சமாக புகழும் வசனங்களை வைத்து நெல்சன் க்ளாப்ஸை அள்ளுகிறாராம்.
க்ளைமேக்ஸில் வரும் வசனம்: குறிப்பாக க்ளைமேக்ஸில் வரும் வசனம் அனைவரையும் கொண்டாட வைத்திருக்கிறதாம். அதாவது, '50 வருஷமா என்னை யார் யாரோ அழிக்க ட்ரை பண்ணி யாராலையும் முடியல' என ரஜினி வசனம் பேசுகிறாராம். திரைத்துறைக்கு அவர் வந்து 50 வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றன. அதை கொண்டாடும் விதமாகவும், அவர் சந்தித்த போராட்டங்கள், துரோகங்களை எல்லாம் ஒரே வசனத்தில் நெல்சன் வைத்து அசத்திவிட்டார் என பூரிக்கிறார்கள் ரசிகர்கள்.
அதுமட்டுமின்றி, இந்த வசனத்தில் மறைமுகமாக விஜய் ரசிகர்களுக்கும், 'உங்களுக்கும் முன்னர் பல பேர் ரஜினியையும், அவர் புகழையும் அழிக்க முயற்சி செய்தும் தோற்றிருக்கிறார்கள்' என ஒரு மெசேஜை தட்டிவிட்டிருப்பதாக கமென்ட்ஸ்களை பார்க்க முடிகிறது. ஆகமொத்தம் ஜெயிலர் 2 பல விவாதங்களை கிளப்புமோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.