15 வயது வைபவ் சூர்யவன்ஷியை பெஞ்சில் உட்கார வைப்பது சரியா? இந்திய அணியில் வெடித்த விவாதம்
15 வயது வைபவ் சூர்யவன்ஷியை பெஞ்சில் உட்கார வைப்பது சரியா? இந்திய அணியில் வெடித்த விவாதம்
மும்பை: இந்திய டி20 அணியில் 15 வயது இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷியை பிளேயிங் லெவனில் சேர்க்காமல் காத்திருக்க வைப்பது சரியா என்பது குறித்து முன்னாள் வீரர்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்படும் வைபவ் சூர்யவன்ஷி, தனது 15 வயதிலேயே பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் 80 பந்துகளில் 175 ரன்கள் விளாசிய இவர், இந்தியா ஏ அணிக்காக வெறும் 11 பந்துகளில் மின்னல் வேக அரைசதம் கடந்து 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார். எனினும், தற்போதைய இந்திய டி20 அணியில் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி தொடக்க வீரர்களாக நீடிப்பதால், வைபவ் சூர்யவன்ஷிக்கு தொடர்ந்து பிளேயிங் லெவனில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.
வைபவ் சூர்யவன்ஷிக்கு படிப்படியாக வாய்ப்பு அளிப்பதா? அல்லது இப்போதே சர்வதேச கிரிக்கெட்டில் அவரை முழு வீச்சில் ஆட வைப்பதா? என்பதே இந்த விவாதத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. இதுகுறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
முன்னாள் தேர்வுக் குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் கூறுகையில், "தொடக்க வீரர் இடத்திற்கு சாம்சன், அபிஷேக், வைபவ் ஆகியோருடன் ஜெய்ஸ்வால், கில் என கடும் போட்டி நிலவுகிறது. இந்த ஆரோக்கியமான போட்டி வீரர்களின் திறனை மேலும் மெருகேற்றும்" என்றார்.
முன்னாள் வீரர் சுப்ரோதோ பானர்ஜி பேசுகையில், "வைபவை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடக் கூடாது. அவரிடம் அபாரமான ஷாட்கள் உள்ளன. அவரை டி20 அணியில் வைத்திருப்பதுடன், உள்ளூர் முதல்தர போட்டிகளிலும் விளையாட வைத்து பக்குவப்படுத்த வேண்டும்" என்றார்.
பயிற்சியாளர்கள் சந்திரகாந்த் பண்டிட் மற்றும் பிரவின் ஆம்ரே ஆகியோர், "வைபவிடம் அசாத்திய திறமை உள்ளது. ஆனால் இங்கிலாந்து தொடரில் அவர் 14, 13, 15 ரன்களில் ஆட்டமிழந்தார். எனவே அவரை அவசரப்படாமல் ஆசிய விளையாட்டுப் போட்டி போன்ற பெரிய மேடைகளில் படிப்படியாக வளர்த்தெடுப்பதே சரியான அணுகுமுறை. அதேநேரம் சிறப்பாக ஆடிவரும் சஞ்சு சாம்சனை நீக்குவதும் நியாயமாக இருக்காது" என்று தெரிவித்துள்ளனர்.