"12 ஆண்டு கால கிரிக்கெட் பயணம் நிறைவு".. இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை பூனம் ராவத் ஓய்வு
"12 ஆண்டு கால கிரிக்கெட் பயணம் நிறைவு".. இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை பூனம் ராவத் ஓய்வு
மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டர்களில் ஒருவரான பூனம் ராவத், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவரது 12 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 37 வயதான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த உருக்கமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தனது முடிவு குறித்து பதிவிட்டுள்ள பூனம் ராவத், "மிகவும் ஆழமாக யோசித்த பிறகே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் முடிவை எடுத்துள்ளேன். இந்திய அணிக்காக ஆடியதே என் வாழ்க்கையின் மிகப்பெரிய கவுரவம். கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல; அது என் குணத்தை செதுக்கியதுடன், எந்தச் சூழ்நிலையிலும் போராடும் மன உறுதியையும் கற்றுக் கொடுத்துள்ளது. இந்திய ஜெர்சியை அணிந்த ஒவ்வொரு தருணத்திலும் அளவற்ற பெருமையும் நன்றியுணர்வும் எனக்குள் இருந்தது. என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது தொடக்கக் காலத்தில் வழிகாட்டிய மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கும் அவர் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். இந்திய அணிக்காக 2009 முதல் 2021 வரை களமிறங்கிய பூனம் ராவத், 4 டெஸ்ட், 73 ஒருநாள் மற்றும் 35 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச அரங்கில் மொத்தம் 3,282 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்களும் 19 அரைசதங்களும் அடங்கும்.
குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கிய இவர், 34.83 சராசரியுடன் 2,299 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 3 சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் அடங்கும். அவுட்டாகாமல் எடுத்த 109 ரன்களே இதில் இவரது அதிகபட்சமாகும். டெஸ்ட் போட்டிகளில் 44.00 சராசரியுடன் 264 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2014-ல் இங்கிலாந்துக்கு எதிராக இவர் விளாசிய 130 ரன்களே அதிகபட்ச ஸ்கோராகும். டி20 போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 719 ரன்கள் அடித்துள்ளார்.
2009-ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும், பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டியிலும் அறிமுகமானார். இவர் கடைசியாக 2021-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது சர்வதேச களத்திலிருந்து விடைபெற்றுள்ளார்.